Thursday, 27 April 2017

காதலெனும் கடலிலே

நீண்ட வானம்
நீளும் இரவுகள்
அகண்ட வெளி
ஆளில்லாத் தீவு

விழி விரித்த
விண்மீன்கள்
பாதம்படாத கடற்கரை
பதித்திடுவோம் பாதத்தை

அலையின் ஓசைகள்
அசைந்தாடும் தென்னைகள்
தாலாட்டும் நித்தமும்
தனித்தே வாழ்ந்திடுவோம் தரணியில்

படபடக்கும் பட்டாம்பூச்சிகள்
புல்லின் மேல் பனித்துளிகள்
படர்ந்தே கிடப்போம்
உறவுகளுடன் இணைவோம்

காலைத்தடவும் அலைகள்
காணக் கிடைக்க வரங்கள்
இயற்கையுடன் இணைவோம்
இசைந்தே வாழ்வோம்

கரம்கோர்த்த நடைகள்
கடற்கரையை அளந்திடும்
இருகரம் பிணைந்தே
இருவுடலை இணைப்போம்

தீராத தாகம்
தீர்த்திடும் விழிகள்
இணைந்த உடல்கள்
ஒற்றை உயிராய் காதல்

உயிரில் நிறைந்திடும்
உண்மைக் காதலை
பிரியாமல் நாளும்
பொத்தியே வைப்போம்
ஆழ்கடலில்

காதலெனும் கடலில்
கலந்திடுவோம் நாளும்
கற்கால வாழ்க்கைக்கு
திரும்பிடுவோம் நாமும்..

காதலை உயிர்ப்பித்து
காதலாய் வாழ்ந்து
காதலில் நிறைந்து
காதலாய் கரைவோம்...


இக்கவிதை கவிஞர்  சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்!

பணம்... பணம்...!

பணம்,பணம்,பணம்!!
அட
பணம்,பணம்,பணம்!!

பெத்தவனிங்கே
காசு கேட்குறான்!
பெத்ததைகூட
காசா பாக்குறான்!

பாசமும் இங்கே
 வேசம்தானாடா!
காசு செய்கின்ற
 வேலைதானடா!

                       (பணம்)

 கல்விக்குகூட
காசு கேட்குறான்!
கற்பதைகூட
காசா பாக்குறான்!

 தாயும் சிலநாள்
 சோறுபோடுவா!
காசு இல்லேனா
கூறுபோடுவா!
                               (பணம்)
 பிறக்கவும்
இங்கே காசு
 கேக்குறான்!
அட
பிணத்திலும்கூட
நெற்றி காசே
தேடுறான்!

 கழிவினில் கூட
காசப்
பார்த்திட்டா
அட
கதறியே ஓடி
தேடி எடுக்கிறான்!

                         (பணம்)

காதலும்
இங்கே மாறி
போச்சுது!
காசு
செய்கின்ற
  வேலையாச்சுது!

கற்பும்கூட
கனவா
போகுது!
காசு இருந்தா
மாசு
ஆக்குது!

                          (பணம்)

பண்பாடு
இங்கே
பரிதவிக்குது;
படைத்தவன்
 மனமோ
துடிதுடிக்குது!

படைத்தவனோடு
போட்டி
போடுமோ!
கடவுளே;
உன்னை
அடிமையாக்கி
ஆட்டம் போடுமோ!

                             (பணம்)
 கடவுளை
பார்க்கவும்
காசு கேட்கிறான்;
அட
கவலையை
மறக்கவும் காசு
கேட்கிறான்!

இதை
பார்த்து,பார்த்து
தினம்
சிரிக்கிறான்!

பரமன்;

பாரினில்
வந்தால் ;
அவனும் காசே
கடவுளாய்
உருகி
வேண்டுவான்!
                               (பணம்)

இது கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்.

Wednesday, 26 April 2017

உழவு!

அவிழ்ந்தது

உழவனின் உடையல்ல-நம்
அனைவரின் ஆடை...

நிர்வாணமாய்

நின்றது நிலக்கிழானல்ல
நீயும் நானும்...

பட்டினிப்போர்

படோபமாய் வாழ்வதற்கல்ல-நம்
பிள்ளைகள் பட்டினி போக்கிட.

அவன்

குடல் பசி பொறுப்பது-வரும்
குலம் பசியின்றி வாழ்ந்திட

கேட்பது

யாசகமும் அல்ல-நிற்பது
யாசகனும் அல்ல,

அரசே
குடிகாப்பதுன் கடமை-அவன்
கும்பி கொதித்தால் அதில்-நீ
தீய்வது உண்மை

மக்களே

விளைநிலங்களை - நாம்
விலைநிலங்களாய் பார்த்தால் வந்த நிலை- அவனுக்கு...

இனி

காய்கனிகளை கடைத்தெருவில் தேடாதே
குடியானவன் குடிசையில்  தேடு.

அவன்
பிள்ளைக்கு -அவனே
பெயர்வைக்கட்டும்

அவன்
விளைச்சலுக்கு -அவனே
விலை வைக்கட்டும்!

இக்கவிதை கவிஞர் முனீஸ்வரன் அவர்களின் படைப்பாகும்!

வீதியோரம் வீழ்ந்த மலர் !

ஏனோ நானும்
வாழ்ந்துகொண்
டிருக்கிறேன் !
எவர் பொருட்டோ நான்
தேய்ந்துகொண்
டிருக்கிறேன் !

ஒரு
'பாதையோர மலராக',
பார்ப்பவர்  கண்ணுக்கு
முள்ளாக,
எந்த நேரமும்
பறந்து செல்லக்
காத்திருக்கும்
பதராக.......
ஏனோ நானும்
வாழ்ந்துகொண்
டிருக்கிறேன் !
எவர் பொருட்டோ நான்
தேய்ந்துகொண்
டிருக்கிறேன் !

ராகமில்லாத
இந்த வரிகள்
எந்த ரகம்?
என்ன பயன்?

மீட்டும் விரலின்றி
வாடுமொரு
வீணையின்
தந்தியாய்,
வியக்கும் கண்களின்றி
ஏங்கும் ஒரு
விசித்திரச் சிற்பமாய்,
விழலில்பாய்கின்ற

வெள்ளத் துளிகளாய்,
வேனலின் வெக்கையாய்,
கானற்பாலையில்
கனலும் முட்களாய்,
கண்களின் ஓரத்தில் காய்ந்த
கண்ணீர்த் துளிகளாய்,
என்றும் எவருக்கும்
ஏற்காத பாரமாய்,
கனியாத எட்டியாய்,
விரியாத மொட்டாய்,
விடியாத இரவாய்,
வேண்டாத வாழ்வாய்,
பணியாத வீம்பாய்,
பாழ்மனத் தீயினில்
வெந்திடும் நாளமாய் ....

விடியலைக் கனவினில்
கண்டதோர் குளுமையில்,
வேதனை மரத்த
மனத்துடன்
இன்னும்....

ஏனோ நானும்
வாழ்ந்துகொண்
டிருக்கிறேன் !!
எவர் பொருட்டோ நான்
தேய்ந்துகொண்
டிருக்கிறேன் !


--கே. பாலாஜி
  21.11.2016
இரவு 8 மணி

இக்கவிதை கவிஞர் பாலாஜி அவர்களின் படைப்பாகும்!

Wednesday, 19 April 2017

திரையரங்கம்

தாய்த்தமிழ் வணக்கம்
×××××××××××××××××××××
தாய்க்கும் - என்
தாய் கொடுத்த தமிழுக்கும்
முதன்மை வணக்கம்

கவிச்சர தலைமை வணக்கம்
×××××××××××××××××××××××××××××
கவிச்சர என் தலைமை கவிஞர்களுக்கு இந்த
கன்னி கவிஞன்
வணக்கங்களை தெரிவித்து கவிதொடுக்கிறேன்...

அவை வணக்கம்
××××××××××××××××××
கல்தோன்றா மண் தோன்றா
மூத்த குடிதமிழ் குடியான
என்
தமிழ் உறவுகளுக்கு என்
வணக்கங்கள்...

உபதலைப்பு
××××××××××××
திரையரங்கம்
×××××××××××××××

இருட்டறையில்
நானறியாமல்
சிரிக்கவும், அழுகவும்
விரும்பிச்சென்று...
திரையில் என்
தலைவனின் அறிமுகத்தில்
வாரி பூவீசி..
நிழலுடன் நிஜமாய்- நான் ஆடி
அவன் காதலை - என்
காதலாக்கி என்னவள் என்று
நான் ஆடிப்பாடி ஓய்ந்து
அமர்கையில்
சிறிய இடைவேளை அப்பொழுது
தான் உணர்ந்தேன் என்னருகில்
இருப்பவரையும் -இது
நிழல் என்பதையும்...
மீண்டும் ஒளி அணைக்கப்பட்டது
விழி விரியத்தொடங்கியது...
என் தலைவன்
சண்டையிடும் போது - உடன்
நானும் போராடினேன்...
சண்டையிட்டேன்...
இறுதியில்
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வி
தர்மம் நிலைநாட்டப்பட்டது...
ஒளி வந்த பிறகு தான்
புரிந்தது நிகழ்ந்தது
மாயையென்று...
வாழ்க்கையும் இதுதானா?
கருவறையிலிருந்து
வெளி வந்து
சிரித்து, மகிழ்ந்து, அழுது
தன்னருகில் இருப்பவர்
யார் என்று
உணராமல் கூட வாழ்ந்து
களைத்த பின்-தான்
உணர்கிறோம்....
எல்லாம் மாயையென்று....

இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்!

நீ ஒருத்தி மட்டும் தானே !

நீ ஒருத்தி மட்டும் தானே !

உனக்குத் தெரியாது
நான் யாரென்றோ, 
யாராக வளர்வேன் என்றோ !

ஆனால்,
உனது கருப்பையில்
சுருண்டு கிடந்த போதே
நானறிவேன் அல்லவா 
நீதான் என் தாய் என்று ! 

உனது வேண்டுதல்கள்,
உனது முணுமுணுத்தல்கள்,
இவை அனைத்தும்
உறங்காமல்
கண்களை மூடிக்கொண்டு
கிடந்த என்னை
எத்தனை வருத்தின என்று
நீ அறிய மாட்டாய் ! 
ஏமாற்றியது 
நானில்லையே தாயே ! 
உன்னை நீயே அன்றோ 
ஏமாற்றிக் கொண்டாய் !

கழிவிடங்களின் பாதைகளிலோ,
கடவுளர்களின் திருவிடங்களிலோ,
நடை பாதையிலோ,
என்னை விட்டு மறந்து,
ஒரு பத்து ரூபாய் காசுக்குப்,
'பெற்ற மகனை விற்ற அன்னை'
என்று பெயரெடுத்த உன்மேல்,
எனக்கு என்றும் வெறுப்பில்லை ! 

உனக்கு இனிமேல்
வேறுகுழந்தைகள்
பிறக்கலாம் ! 
ஆனால்
எனக்குத் தாயாய்...
நீ ஒருத்தி தானே
அம்மா  !
நீ ஒருத்தி மட்டும் தானே !
(கி.பாலாஜி      August 21 2014)


-------------------------------------------------------------------------------------------------------------------
மூலப் பதிப்பு மலையாளத்தில் : 

അനാഥന്‍ ;-

 നിനക്കറിയില്ല , ഞാനാരെന്നോ ആരാകുമെന്നോ , 
എനിയ്ക്ക് പക്ഷെ , നിന്റെ ഗര്‍ ഭപാത്രത്തില്‍ 
ചുരുണ്ടുങ്ങുമ്പോഴും , അറിയാമായിരുന്നു , 
എന്റെ അമ്മയെന്ന് ..;


ദൈവത്തോടുള്ള നിന്റെ പ്രാര്‍ ഥനകള്‍ , 
സ്വയം പിറുപിറുക്കലുകള്‍ , 
ഉറങ്ങാതെ , കണ്ണുകളടച്ചു കിടന്നെന്നെ 
കരയിപ്പിച്ചിരുന്നു , 
ചതിച്ചത് , ഞാനല്ലല്ലോ അമ്മേ , 
നീ നിന്നെ തന്നെ അല്ലെ ..?

ക്ലോസറ്റില്‍ . 
വഴിയരുകില്‍ , 
ആരാധനാലയങ്ങളുടെ മുന്നില്‍ ,
പ്ലാറ്റ് ഫോമുകളില്‍ , 
പത്ത് രൂപ കാശിനു , 
നീ എന്നെ മറന്നിട്ടും , 
എനിയ്ക്ക് വെറുപ്പില്ല ...


നിനക്കിനിയും കുഞ്ഞുങ്ങളുണ്ടായേക്കാം ,
എനിയ്ക്കമ്മയായി നീ മാത്രമല്ലെ ഉള്ളൂ..!

By
Sajayan Elanad

இக்கவிதை கவிஞர் கி.பாலாஜி அவர்களின் மொழியாக்கக் கவிதை ஆகும்!

Tuesday, 18 April 2017

விதியின் பிழையதுவோ?

திடுமென எனை
 தீண்டும் பாலைவன
தென்றலென என்னில்
 வந்தாய்!

சோலைவன
 மானதென்றே வாழ்வு!
நெஞ்சகத்து கர்வம்
   கொண்டு குளிர்மதி
 யெனவே நானிருந்தேன்!

வஞ்சிப்பார் யாருமில்லை!
வாழ்வதுவோ
 துவங்கவில்லை;
நெஞ்சுறைக்க நீயுரைத்த
வார்த்தைகளி னீரம்
 காயவில்லை
அஃதிருக்க....

 அன்பென்றே ஆசை
 கொண்டு; அணுவணுவும்
  உனை நினைந்து!
முன்பிருந்த சோகமதோ முற்றிலுமாய் தான்தேய!

இச்சகத்தில் இச்சை
 கொண்டு இன்புற்றி
ருந்த வேளையிலே!
வசையில் நாண்
தொடுத்து!
நெஞ்சகத்தை நீ
துளைத்து;
வஞ்சகனாய் சித்தரித்து;
வார்த்தைகளை
 வீசிவிட்டாய்!

ஒரு கணமும்;
எனை பிரியின்
 உயிர்பிரியும் என
உரைத்த நீ இன்றோ!
உனை பிரிந்து
நான் வாட எனை
 மறந்தே நீ வாழ!
விதி செய்த
 பிழையெனவே!
கண்ணம்மா!
மதிமறந்து
 வாடுகின்றேன்.....

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்!

கல்விச் சாலை !

பால்வெள்ளி நிலா வீசும்
பகட்டுத்தா ரகைகள் மின்னும் 
பலவண்ண நிறங்கள் காட்டும்
வான மேயென் கல்விச் சாலை !
வான மேயென் கல்விச் சாலை !
வாழ்வினைப் பயக்கும் சோலை !

நேற்றைக்கு அழுமாற் போலே
அமுதத்தைப் பொழிந்த வானம்
இன்றைக்குத் தெளிவாய் நின்று
சிரிக்கின்ற தென்னே யென்றேன்!

எல்லையற்ற தன்மை கண்டென்
எண்ணமும் விரியக் கண்டேன்
சிந்தனை, வானம் போலே
விரிந்தாலே விடியும் என்றேன் !

எழிலார்ந்த காவும் கண்டேன்
எத்தனையோ மலர்கள் கண்டேன்
முன்னின்ற மலரின் செடியில்
முள்ளொன்றும்  இருக்கக் கண்டேன்

இன்பங்கள் என்றும் உண்டு
இடையிடையே துன்பம் உண்டு
என்பதை உணர்த்தும் பாங்கில்
முள்ளதுவும் சிரிக்கக் கண்டேன்

வண்ணத்துப் பூச்சி பூவைச்
சுற்றிவந்தமரக்   கண்டேன்
சுவையான தேனை யதுவும்
சுவைத்துண்ணும் பாங்கு கண்டேன்

புவிவாழ்வு சிறிதென் றாலும்
பூவினில் தேனைப் போலே
நிறைந்திடும் இனிமை உண்டு
நீயதை உணரல் வேண்டும்

என்றெனக் குணர்த்தும் வண்டு
எண்ணத்தில் அமர்ந்து கொண்டு
ஏழிசை கீதம் ஒன்று
தன்னுள்ளே பாடிக் கொண்டு !

இதுநாளும் தேடித் திரிந்த
குருவைநான் கண்டுகொண் டேன்
காண்கின்ற பொருள்க ளெல்லாம்
குருவேயென் றுணர்ந்து கொண்டேன்

'எப்பொருள் யார்யார் வாய்க்
கேட்பினும் அப்பொருள் தன்னில்'
உறைகின்ற உண்மை தன்னை
உணர்த்துமோர் குருவைக் கண்டேன் !

--கி.பாலாஜி

# இது முகநூலில் 2012 இல் ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். பழங்காலத்திய  பள்ளிப் பாடப் புத்தகத்தின் நகல்.  எழுதியவர் பெயர் அதில் இல்லை. நான் தமிழில் சிலநாட்கள் கழித்து எழுதினேன்.  மூலத்தின் கருத்துக்கள் அப்படியே உள்ளது. சற்றே விரிவுபடுத்தியும் சொல்லியுள்ளேன். மலையாளத்தில் தலைப்புக்குப் பொருள் 'எனது கல்விச்சாலை'      (என்டெ வித்யாலயம்)

Monday, 17 April 2017

விடம் தவிர்!

அன்று

கொலுபிடித்து எனைவருடி
இலைதழைகளை உணவாக்கி
உரமாக்கி விதையிட்டாய்;

ஆநிரைகள் எனைமிதித்து
அதன் கழிவுகளால்
வலுவேற்றி பயிரிட்டாய்;
நோய் நீங்க நீ புகட்டிய
அருமருந்தை நாணுண்டு

தாய்தமிழ்போல் நீ தழைத்து
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
நற்தானியங்கள் நான்கொடுத்தேன்!

இன்று,

இயந்திரத்தால் எனைக்கிழித்து
விடந் தெளித்து, என்னுடலில்
உரமேற்றி நோய்கொண்டு
என் தாய்குணம் மறைந்து
மக்கி மலடாகி

நோய்கொண்டு
நானெழுந்து தானியங்கள் தருகின்றேன்;

எனை நீயும் உண்டபின்பு,
எதை உண்டு, உழுது
வாழ்வாயோ-ஐயகோ!

என்னுடலின் கருப்பையில்
பசுங்குருதி கொட்டுதடா-எனை
காக்க கூறவில்லை;
உனை காக்க கூறுகிறேன்;

இயந்திரத்தை தான்விடுத்து
இயற்கைக்கு மாறிடடா!
உழவா-உன் இனம் அதனைக்
காத்திடடா..!

கவின்மொழிவர்மன்…

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களால் 03.14.2017 அன்று 'மின்னல் கீற்றுகள்' வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. கவிஞரின் அனுமதியுடன் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.

Popular Posts