காதலெனும் கடலிலே

நீண்ட வானம்
நீளும் இரவுகள்
அகண்ட வெளி
ஆளில்லாத் தீவு

விழி விரித்த
விண்மீன்கள்
பாதம்படாத கடற்கரை
பதித்திடுவோம் பாதத்தை

அலையின் ஓசைகள்
அசைந்தாடும் தென்னைகள்
தாலாட்டும் நித்தமும்
தனித்தே வாழ்ந்திடுவோம் தரணியில்

படபடக்கும் பட்டாம்பூச்சிகள்
புல்லின் மேல் பனித்துளிகள்
படர்ந்தே கிடப்போம்
உறவுகளுடன் இணைவோம்

காலைத்தடவும் அலைகள்
காணக் கிடைக்க வரங்கள்
இயற்கையுடன் இணைவோம்
இசைந்தே வாழ்வோம்

கரம்கோர்த்த நடைகள்
கடற்கரையை அளந்திடும்
இருகரம் பிணைந்தே
இருவுடலை இணைப்போம்

தீராத தாகம்
தீர்த்திடும் விழிகள்
இணைந்த உடல்கள்
ஒற்றை உயிராய் காதல்

உயிரில் நிறைந்திடும்
உண்மைக் காதலை
பிரியாமல் நாளும்
பொத்தியே வைப்போம்
ஆழ்கடலில்

காதலெனும் கடலில்
கலந்திடுவோம் நாளும்
கற்கால வாழ்க்கைக்கு
திரும்பிடுவோம் நாமும்..

காதலை உயிர்ப்பித்து
காதலாய் வாழ்ந்து
காதலில் நிறைந்து
காதலாய் கரைவோம்...


இக்கவிதை கவிஞர்  சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்!

Comments