புயலென புறப்படு...

தள்ளா விளையுளும் என்றான்
வள்ளுவன்....
இதுவே தண்டுவடம் என்றது
பள்ளிப்பாடம்...
மூவர்ணத்தில் ஒன்றாகுமிது
என்றது தேசியம்...
நாட்டின் மூலதனமிது என்றது அரசியல்....
பாரதம் விவசாய பூமியென்றது
பூகோளம்...
சோழநாடு சோறுடைத்து
என்றது வரலாறு....
நாட்டின் தலைவனிவனே என
கூப்பாடிட்டனர் தலைவர்கள்....
ஆண்டுக்கு அளவில்லாத பணம்
ஒதுக்கியது பாதீடு..
படிப்பதற்கு கனியாய் இனித்தது...ஆனால்
நிகழ்வுகளோ காயாக கசந்ததே...
தள்ளா விளைகள் விலையாகி போனது...
தண்டுவடம் முடமாகி போனது....
வர்ணத்தை வர்ணாசிரமம் வதைத்தது...
மூலத்தின் மூச்சை மத்தியம்
மிதித்துருவியது....
சோறுடைத்த சோழநாடு
ஏறுடைத்து நிற்கிறது...
கூப்பாடிட்டவர் தலைவனை
குப்பையில் எரிந்தனர்..
ஒதுக்கிய பணம் ஒதுங்கி கிடக்கிறது...
சோறு போட்டவன் பிச்சை எடுக்கிறான்...
பிச்சை எடுத்தவன் பகட்டாக திரிகிறான்..
பொழிந்த வானம் பொய்த்தது....
விளைந்த பூமி விழுந்தது..
நதி பாயந்த நாடு நாதியத்து நிக்குது...
குதித்து சாக கூட நீரில்லை நாட்டில்...
இளந்தென்றல் வீசிய இடத்தில்
கார்பன் காற்று..
உயிரளித்தவளின் கருவறுத்து
மலடாகிப் போனாள்...
சதியின் சதுராட்டத்தால் மன்னவன்
மண்ணிழந்து நிற்கிறான்...
மானம் காத்தவன்
அம்மணமாக நிற்கிறான்..
அவனம்மணம் நம்
நிர்வாணத்தின் நெடிதானே...
நிர்வாக நிர்வாணத்தை மறைக்க
அவனாடை இழக்கலாமா...
ஊழலெனும் விபச்சாரம்
அவனை விழுங்குவதற்குள்...
கோவண கோனைக் காப்பது
நம் கடமையன்றோ..
இது நீடித்தால் நம்மை இருள் பீடிக்கும்...
பசுமை நிலம் பாலையாக நீடிக்கும்..
எதிர்காலம் விவசாயத்தை
ஏட்டில் மட்டுமே ஜோடிக்கும்..
ஒன்றாக ஓங்கி அடித்தால்
பயம் வரும் மாடிக்கும்...
நீரோட்டம் பார்த்தவன் போராட்டத்தில்...
அவனை தனித்து விடலாமா ஏமாற்றத்தில்...
அவனளித்தால் தான் உனக்கு சாப்பாடு...
கேட்கவில்லையா அவன் கூப்பாடு...
அவனுக்குதவ தேவையில்லை
கோட்பாடு...
வருங்காலம் வாழ நீயும்
புயலென புறப்படு...
 

இக்கவிதை கவிஞர் ரவிசங்கர் பத்மநாதன் அவர்களின் படைப்பாகும்!

Comments