Friday, 28 July 2017

கலாம்

காலை மாற்றி வருங்காலமானாய்..
மாற்றத்தை மனதோடு விதைத்தாய்..
மனிதம் என்பதன் மாண்பானாய்..
விண்ணை முட்டி விரித்தாய்..
அணுவை பிளந்து எறிந்தாய்..
அறிவியலின் அடுத்த நிலைகண்டாய்..
எந்திரங்களோடு இருந்ததால் என்னவோ..
உன்னிதயம் அன்பின் கருவியானது..
நாடாள நல்மனதோடு வந்தாய்..
அன்பெனும் அதிகாரம் செலுத்தினாய்..
மாக்களை மக்களாய் மாற்றினாய்..
எம் மனச்சிறையில் கைதானாய்..
விடுதலை வாங்க மறுத்தாய்..
மாணவனே மாற்றத்தின் சாவியென்றாய்..
எதிர்கால பாரதத்தின் ஏற்றமென்றாய்..
தூங்கவிடா கனவு காணென்றாய்..
கண்டதை கருவாக்கி வாழென்றாய்..மனிதனாக வாழ ஆசையென்றாய்..
மாணவரிடையில் மரிக்க ஆசையென்றாய்..
ஆசைகளனைத்தையும் அடைந்தும் விட்டாய்..
மதமெனும் மூர்க்கனை மாய்த்தாய்..
சாதியெனும் இழிசொல்லை வேரறுத்தாய்..
கலாமின் காலமும் வந்தது..
எதிர்காலத்துடன் பேசும்பொழுது இறந்தகாலமானாய்..
மனிதராய் வந்தனர் உனைகாண..
பாரதமெனும் மகுடத்தின் அணியான..
காந்திய வைரம் பூமிதனில் புதைந்தது..
காமராசனாய் ராஜ ஒளியுடன் வந்தது..
ராசனும் மண்ணின் மடியை சேர்ந்தான்..
கலாமாய் காலத்தின் ஒளியாய் வந்தீர்..
கலாமும் காலனின் பிடியில்..
இன்னொரு வைரம் ஒளிபெற்று வருகிறது..
நாமம் மாறி ஒருநாள் வெளிப்படும்..
மன்னவா கொஞ்சம் காலம் பொறுத்து வெளிவா..
வைரத்தை வைக்க மணிமுடி வேண்டும்..
எம் மணிமுடி இன்னும் மெருகேறவில்லை..
மாற்றமெனும் பொன்னால் மெருகேற்றுகிறோம்..
மெருகேற்றிய முடியில் குடியேறுவாய்..
பாரெங்கும் பகலவனாய் ஒளியேற்றுவாய்..
அய்யனே ஆணையிடுகிறேன் உன்மேல்..
எம்மக்கள்ளின் மேன்மைக்காக
மண்ணாவேனேயன்றி-ஒருநாளும்
மாக்காளோடு மாக்காளாக மாயமாட்டேன் மண்ணோடு..
இது சத்தியம்...
இவண்..
நின் கனவில் ஒருவன்..
நின் கனவை காண்பவனில் ஒருவன்..
அக்கனவையே காதலிக்கும்..
கனவுகளின் காதலன்...!!!⁠⁠⁠⁠

இக்கவிதை கவிஞர் ரவிசங்கர் பத்மநாதன் அவர்களின் படைப்பாகும்.

#அப்துல் கலாம்

Wednesday, 26 July 2017

என் தங்கை

தங்கை என்பவள்
தங்கை மட்டுமா...

அண்ணன்கள் உலகின்
முதல்
நம்பிக்கைக்குரிய தோழி...

அவளது நம்பிக்கை
தந்தைக்கு பிறகு
அண்ணனே...

நமது முதல்
மகள்
அவள்...

அவளது ஆதரவு
எப்போதும்
முதன்மையாய்
நமக்கே...அவளது சிரிப்பிற்காய்
எதுவும் செய்வான்
எல்லா அண்ணனும்...

அவளுக்காய்
எதுவும்
அண்ணனே...

சமூகமும்
இதை உணர்ந்தே
தாய்க்கு பின்
தாய்மாமன்
என
அவளது குழந்தைக்கும்
அவளது அண்ணனையே
சிறப்பு செய்கிறது ...

பிறந்தகத்திலும்
புகுந்தகத்திலும்
அண்ணனின்
நிரந்தர
ஆதரவாளராய்
அன்பு தங்கை
மட்டுமே ...

தாயின் அன்பை
மகளின் பாசத்தை
தங்கையின் பிரியத்தில்
ஒருசேர உணரலாம்...

தமிழின் சிறப்பு
தன் கை
என்பதே
தங்கையாம்...

நான்கு கைகள்
உடையோர்
தெய்வமெனில்
தன் கை
தங்கை
இரண்டும் சேர்த்து
நான்கு கை

இணைந்த இருகை
தமக்கை...
தங்கையுடன் பிறந்தோர்
தரணிவெல்வர்...⁠⁠⁠⁠

என்னவானால் என்ன...
தங்கத்திற்கு மதிப்புண்டு
தங்கைகளுக்கு
மதிப்பில்லை...

அனைத்து அன்புநிறை சகோதரிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்...

அண்ணன் எப்போது அவளின் தந்தையாகிறானோ... ஒரு தந்தையின் பாதுகாப்பை எப்போது அத்தங்கை அண்ணனிடம் உணர்கிறாளோ அப்போதுதான் ஒவ்வொரு அண்ணனும் முழுமை பெறுகிறான்....

தந்தையாகும் அண்ணன் அனைவருக்கும் வாய்ப்பதில்லை...

வாய்த்தல் வரம்...

 இக்கவிதை கவிஞர் அகரம் பார்த்திபன் அவர்களின் படைப்பாகும்.

Tuesday, 25 July 2017

களவு போன கனவுகள் - 01

களவு போன கனவுகள்
(My sincere thanks to those wonderful artists whose paintings/photos I have used here)
This is a translation / influence of the long poem "DESERTED VILLAGE" written by OLIVER GOLDSMITH. The original lines in English are given beneath the translated one .)


இங்கு நான் எழுதிப் பதிவு செய்துள்ள ‘களவு போன கனவுகள்’ என்ற நீண்ட கவிதை, Oliver Goldsmith அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘DESERTED VILLAGE’ என்ற நீண்ட கவிதையின் பாதிப்பு, ஓரளவுக்கு ‘மொழி பெயர்ப்பு’ என்றும் கூறலாம் !வாணியை வேண்டல்:

உள்ளம் வேண்டுவது உள்ளபடி அருள்செய்து
தெள்ளத் தெளிவாகத் திறமை வெளிக்கொணர்ந்து
தேடும் பொருள்ஞானச் செல்வம் எனக்களித்து
வாழும் படிக்குவைத்த வாணியே வாழ்த்துகிறேன்!


வளமை இளமை புதுமை எனவிதித்த
செம்மைச் சிறப்பனைத்தும் திறமா யியம்பிடவும்,
தெளிவாய் முதல்நூலை முழுதும் மனத்துணர்ந்து
மாசறு தமிழதனில் பெயர்த்தி டவும் ,


மனந்தளரா உறுதியதும், மற்றெந்த இடையூறும்
மறிக்காத நிலையதுவும், மலர்வாழும் மாதா!
மனங்கனிந்து மதிகுளிர்ந்து எனக்கருள வேண்டுகிறேன்!
மறந்தும் உனைமறவா மனமருள வேண்டுகிறேன் !


மந்திரமும் மறையும் மறைசான்ற பெரியோரும்
மறவாமல் வாழ்த்துகின்ற மாதாவே மனமிரங்காய் !
மதிமறந்து மதியாமல் செய்பிழைகள் பொறுத்துச்
செப்புமொழி தனில்சேர்ந்து உனைவாழ்த்த அருள்வாய் !


சேரும் இடம்சேர்ந்து நான்சேர ஞானச்
செல்வம் தானாக வெனைச் சேரத்
தேனூறும் வார்த்தைகள் தெவிட் டாத
தோத்திரமா யென்றென் றுமுனைப் பாடக்


காணும் பொருளெல்லாம் கவிமய மாய்
கண்கள் என்றென்றும் ஒளிமய மாய்
கருத்தில் உன்னுருவம் சொல்மய மாய்
கலையா திருந்திடவே வரம்தரு வாய் !
கலையே! அருட்கடலே கண்திற வாய் !

இக்குறுங் கவிதைத் தொடர் கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் படைப்பாகும்.


                                                                                               கனவுகள் தொடரும்....

Thursday, 20 July 2017

காவியத் தலைவன்

விவேகனந்தர் நினைவு நாளுக்காக எழுதப்பட்ட சிறப்புக் கவிதை.

---------------------
அன்பை விதைத்து
ஆன்மாவை உயிர்த்தெழச் செய்து
அண்டத்தின் அதிர்வையும்
இறைவனின் மகிமையையும்
அறியச் செய்தாய்

உடலைப் பேண
உன்னதக் கலையான
யோகத்தையும் தவத்தையும்
யவனருக்கும் போதித்தாய்.....

முழுப் படைப்பை வாசிக்க கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்:

காவியத்தலைவன்

http://www.sigaram.co/preview.php?n_id=97&code=1nLXyTzj
       
இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠ அவர்களின் படைப்பாகும்.

Wednesday, 19 July 2017

ஐந்திணை

--------*

குறிஞ்சித் திணை
-------------
கூடல்

வேங்கை போல்
வேட்டையாடி வாழ்ந்து
வேல் கொண்ட நாயகனை
வேதமாய் வணங்கி

மலையெங்கும் வாழ்ந்திடும்
மக்கள் கூட்டம்
குறிஞ்சி என்றழைப்பார்கள்
குறிப்பாய் இந்நிலத்தை

நாள் முழுதும்
நெடுந்தூரம் போராடி
வில்லால் வீழ்த்தி வந்தேன்
வடிவான ஓரு மானை

கனிவான உன் முகத்தை
காண வேண்டி
மலையருவி கடந்து வந்தேன்
முத்தான என் காதலியே

குறிஞ்சிப் பூ சூடி
குலவிளக்காய் வீற்றிருக்கும்
பொன்னான உன் முகத்தைப்
பொழுதேனும் காட்டிவிடு

கடுக்கும் என் வலியும்
கரைந்திடுமே மேகமாய்
துள்ளிடும் மானாய்
தூரம் போவதுமேனோ

காந்தத்தின் எதிர்புறமாய்
கடப்பதும் ஏனோ
அழகு முகம் காண
ஆசையுடன் நிற்கிறேன்

சுனை நீர்போல்
சுரக்கிறது உன் ஞாபகம்
தாரமாய் வந்துவிடு
தாங்குவேன் எப்பொழுதும்
தங்கமாய் உனை நானே

அணைத்து மகிழ்வேன்
ஆசையாய் மொழிவேன்
ஆனந்தக் கூத்தாடி
அடி மார்பில் புதைந்திடுவேன்...

சொல்லில் அடங்கா
இன்பத்தை தித்திக்க
தந்திடுவேன் திகட்டாமல்
நானே...

முல்லைத் திணை
-------------
காத்திருப்பு

ஆசையாய் கேட்டால்
அசைந்தாடி வந்திடுவேனா?
பகல் கனவு வேண்டாம்
பொய்யாய்ப் போய்விடாதோ?

ஆவினம் மேய்த்து
காடு கரையெங்கும்
களைத்து அலைந்து
காதலியான என்னைக்
கணந்தோறும் நினைத்து

கனங்கூடிய இதயமுடன்
காடு விட்டு வீடு
திரும்பும் கள்வனே

வழியின் மேல்
விழி வைத்து காத்திருக்கிறேன்
ஏங்க வைத்தது போதும்
ஏரு தழுவி
ஏறுமுகம் கொண்டு வா

மாயோன் முன்
மணமுடிப்போம் ...
மங்கை நான்
சத்தியமாய் உரைக்கிறேன்
சாகும் நிலை வரினும்
சத்தியம் மீறமாட்டேன்..

பாலைத் திணை
------------*
பிரிதல்

ஆசையாய்க் காதல் கொண்டு
உடையவன் இவன் தானென்று
பெற்றோரை உதறிக் கிளம்பிடுவாய்
பட்ட பாடலெல்லாம்
வீணாக்கி சென்றிடுவாய்

ஊரார் வாய்மொழி
உரைப்பது கேட்பாயோ
பெற்றவன் வருந்துவதை
பார்க்கத் தான் நினைப்பாயோ

பருவத்தின் கோளாறிது
பக்குவமாய் சொல்கிறேன்
பணிந்து நடந்திடு
பற்றியவனை விட்டிடு

சுற்றம் சூழ
சீராய் நடந்திடும்
என் அக்கனின் மகனுடன்
உன் திருமணம்
அடங்கி நடந்து கொள்

ஊரார் இகழ்ந்தால்
அப்பன் உயிர் போயிடும்
இது துர்க்கையின் மேல்
சத்தியம் மறவாது
இருந்திடு...
மருதத் திணை
-----------
ஊடல்

காதலை எதிர்த்தும்
காதலனைப் பார்க்க
வயல்தேடி வந்தாளே
வாடிய முகத்துடன் மங்கை

ஏரு பூட்டி
உழவு செய்யும் காதலன்
காண்கிறான் காதலியை
கண்ணோடு தாங்குகிறான்

ஊர் உறங்கும்
இரவில் சொலிக்கும்
நிலவாய் காதல் பூத்திருக்க
நிலவில்லா பகலில்

முகம் வாடி வந்தவளை
மோகமுடன் பார்த்தான்..
கோபம் மேலிட்டு
கக்கினாள் செந்தணலாய்
தந்தையின் வார்த்தையை

கேட்டதும் பதட்டம்
கொள்ளாது கட்டியணைத்து
கலங்காதே காலத்தில்
களம் வருவேன்

மாற்றான் கரத்தை
மரமெனத் துண்டித்து
மங்கல நாண் ஏற்றுவேன்
மணமகனாய் நானே...
இது இந்திரன் மேல் ஆணை...

நெய்தல்  திணை
------------*
வருந்துதல்

ஊர்கூடி நிற்கிறது
உற்றவன் மட்டும் காணவில்லை
மாற்றான் ஒருவன்
மணமகனாய் அமர்ந்திருக்க

உடம்பும் கூசுதே
உணர்வும் சாகுதே
உடனே வருவாயோ
உமையவளாய் ஏற்பாயோ

கனக்கிறது நெஞ்சம்
கரை சேர்க்க வா
ரதமேறி வந்துவிடு
ரணத்தை ஆற்றிவிடு

அறியாமல் இருந்தவளிடம்
ஆசை வார்த்தை மொழிந்தாய்
அன்பே என்றாய்
அழகேயென ஆராதித்தாய்

வீழ்ந்தேனே உன் மையலிலே
விழுந்தவள் துடிக்கிறேனே எழாமல்...
விரைந்து மீட்பாய்
வாட்டத்தைப் போக்குவாய்...

வருணன் பொழியும்
மாரி போல்
ஏகமாய் பொழிந்து
ஏக்கத்தை தீர்த்துவிடு...

இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும்!
Tuesday, 18 July 2017

காலம்

மனம் கனக்கும் சூழலில்
காகிதமும்
மலையாகும்...

மன அழுத்த காலத்தில்
இயல்மூச்சு
வாதமாகும்...

சூழலின் குளுமையும்
உள்ளத்தின் வெம்மையால்
கூட்டத்திலும்
தனிமை உணர்த்தும்...

உணவுகள் மறுத்து
உறக்கம் தொலைத்து
நமக்கு நாமே
பகையாவோம்...

என்னசெய்ய...உண்பது நாம்
எனினும்
சீரணிப்பதை
நம் கையில்
எடுப்பதில்லை...

அதுபோல
செயல்களை
கவனத்துடன் செய்வோம்
விளைவுகள்
யோசிக்க வேண்டாம்...

சிறந்த விதைக்கான
சிறந்த சூழல்
இயற்கை தரும்...

காத்திருத்தலையும்
பொறுத்திருத்தலையும்
தவமாய் செய்யும்
எவரையும்
காலம் உயர்த்தாமல்
சென்றதில்லை...

உயர்வான வாழ்விற்கு
உயர்வான எண்ணங்களுடன்
தவமாய் காத்திருப்போம்...

காலத்தால் உயர்வோம்
கடமையினை செய்வோம்

மழைக்காக அல்லாது
நிலத்திற்காக
விதைப்போம்...

விதைகள்
விளையும்...
கவலைகள்
களையும்...

காலமே
எல்லாம்...⁠⁠⁠⁠

இக்கவிதை கவிஞர் அகரம் பார்த்திபன்அவர்களின் படைப்பாகும்.

Sunday, 16 July 2017

என்ன மச்சான்? சொல்லு மச்சி!

என்ன மச்சான்?

சொல்லு மச்சி!

என்னத்த சொல்ல?

ஏன்டா சலிச்சிக்கிற?

வீடு போ போங்குது... காடு வா வாங்குது....

அதுவும் சரிதான்
'பிக் பாஸ்' பாத்தியா?

யாருடா பிக் பாஸ்?

யாரு இல்ல, நிகழ்ச்சி...

ஓ! நம்ம விஜய் தொலைக்காட்சியா?

ம்ம்...

நல்லதொரு .குடும்பம்... பல கலைக் கலகம்....

எல்லா கெரகமும் சேர்ந்து கலகம் பண்ணிக்கிட்டிருக்கு

பேஸ்புக், யூடியூப் னு நக்கலும் நையாண்டியும் களை கட்டுது

ம்ம். நாம நிகழ்ச்சியை கலாய்ச்சிக்கிட்டிருக்கோம்னு நெனச்சிக்கிட்டிருக்கோம்.

பின்னே?

அதுதான் இல்ல. அவங்க நம்மள கலாய்க்க வச்சிக்கிட்டிருக்காங்க.

எல்லாம் வியாபாரத் தந்திரம். அப்படித்தானே?

அதே... அதே.....பிக் பாஸெல்லாம் நமக்கு தேவைதானா?

விஜய் தொலைக்காட்சி மேடை நிகழ்ச்சிகள் அதாவது ரியாலிட்டி ஷோ மூலமா தான் தன்னோட இடத்தை தக்க வச்சிக்கிட்டிருக்கு 

ம்ம்... கலக்கப் போவது யாரு, கிங்ஸ் ஆப் காமெடி, ஜோடி நம்பர் வன் மற்றும் சூப்பர் சிங்கர் மாதிரி நிகழ்ச்சிகளிலேயே பிரபலமானவங்களாச்சே?

ஒரே இரவுல ஒபாமா ஆகுறது எப்படினு விஜய் தொலைக்காட்சி யோசிச்சப்போ வந்தது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

வீட்டுக்குள்ள இருக்குறவுங்க தான் காசுக்காக அடிச்சிக்கிறாங்கன்னா நாமளும் அவங்களைப் பத்தி விவாதம் பண்ணி அடிச்சுக்கிறோம் 

அவுங்களுக்கு வீடே உலகம், நமக்கு உலகமே வீடு.

அப்புடி சொல்லு மச்சி 

ஆனா நிகழ்ச்சி பத்தி மக்களுக்கு நிறைய சந்தேகம் இருக்கு.

சந்தேகமா? மக்களுக்கா? உலகநாயகன் கமல் நடத்துற நிகழ்ச்சி பத்தியா? என்ன சந்தேகமாம் அவுங்களுக்கு?

வீட்டுக்குள்ள இருக்குறவுங்களுக்கு யாரு சாப்பாடு கொடுக்குறாங்க?

அதான் காட்டுறாங்களே?

மக்கள் கேள்வி கேட்டதுனால காட்டுறாங்க.

சரி, வேற என்ன?

போட்டியாளர்களை வச்சி நடனம் மாதிரியான குட்டி குட்டி நிகழ்ச்சிகள் செய்ய வைக்கிறாங்க. அந்த மேடையை யாரு உள்ள கொண்டுவந்து போடுறாங்க? அவங்க போட்டியாளர்களுக்கு சலுகைகள் ஏதும் செய்றாங்களா?

இதுவரை அதைப்பத்தி காட்டல, நீ கேட்டுட்டேல்ல ... இனி காட்டிருவாங்க.

என்னத்த காட்டுறாங்களோ? காசு குடுத்து, ஒளி, ஒலி பதிவு கருவிகள்லாம் இருக்குன்னு சொல்லியுமே இப்படி நடந்துக்கறாங்கன்னா இதெல்லாம் இல்லாம எப்படி நடந்துப்பாங்க?

அதான் நாம...

அதாவது நாம அவங்க வெளிப்படையா செய்ற தப்பையெல்லாம் மறைமுகமா செஞ்சிக்கிட்டிருக்கோம். அப்படித்தானே?

அப்படியே...

அப்போ நாம வாழ்க்கைல ஒவ்வொரு அடியையும் ரொம்பக் கவனமா எடுத்து வைக்கணும்னு சொல்லு..

க.க.போ!

சரி மச்சி, எனக்கு நெறைய வேலை இருக்கு. நா கிளம்பறேன்.

நாங்க மட்டும் என்ன வேலை வெட்டி இல்லாமலா இருக்கோம்? எங்களுக்கும் வேலை இருக்கு... நாங்களும் கெளம்பறோம்.

சரி மச்சி. சந்திக்கலாம்.

சரி மச்சான்... சிந்திப்போம்!

Tuesday, 11 July 2017

இரண்டு நீலங்களை வென்ற இரு சிவப்பு கிரிக்கெட் அணிகள் !

உலக அளவில் பிரபலமான விளையாட்டு என்றால் அது கால்பந்துதான். கிரிக்கெட் விளையாட்டு அதிக ரசிகர்களை கொண்டிருப்பதைப் போல காட்சி தந்தாலும் ஒரு சில நாடுகள் மட்டுமே அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கின்றன.அதுபோலவே ஒருசில நாடுகள் மட்டுமே கிரிக்கெட்டில் ஆதிக்கமும் செலுத்தி வருகின்றன. மேலும் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ள அணிகள் அனைத்துக்கும் சம அளவில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகள் சில அணிகள் கிரிக்கெட்டில் கோலோச்ச பேருதவியாக இருக்கும். இதெல்லாம் ஒருபுறம் இருக்க நாம் இவ்வார கிரிக்கெட் செய்திகள் குறித்துப் பார்க்கலாம்.
தரப்படுத்தலில் பின்னடைவையே சந்தித்து வந்த இரு அணிகள் இரு முன்னணி அணிகளுக்கெதிராக தமது வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. இரு சிவப்பு அணிகள் இரு நீல அணிகளை துவம்சம் செய்துள்ளன. தற்போது சிம்பாப்வே எதிர் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் எதிர் இந்தியா அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவதாக சிம்பாப்வே எதிர் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் பற்றிப் பார்க்கலாம். 
இலங்கை அணி தற்போது பலவீனமான நிலையில் இருந்தாலும் சிம்பாப்வேயிடம் தொடரை இழக்குமளவுக்கா பலவீனமாக இருக்கும் என விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-2 என கைப்பற்றியிருக்கிறது சிம்பாப்வே அணி. 16 வருடங்களுக்குப் பின் ஒரு தொடரைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்த வெற்றி அவர்களுக்கு தரப்படுத்தல்களில் எந்தவொரு பாரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை என்றாலும் அவர்களின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மகுடத்தைச் சூட்டியிருக்கிறது. சிம்பாப்வே அணிக்கு இத்தொடரின் பின் இலங்கையுடன் இடம்பெறவுள்ள ஒற்றை டெஸ்ட் போட்டியைத் தவிர வேறு சர்வதேச போட்டிகள் எதுவும் 2017 இல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
மறுபக்கம் மேற்கிந்திய தீவுகள் எதிர் இந்தியா அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரைப் பொறுத்தவரை ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-1 என இந்தியாவிடம் இழந்தாலும் ஒற்றை 20-20 போட்டியை கைப்பற்றியுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி. மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்படுத்தலில் பின்னிலையில் இருந்தாலும் அவ்வப்போது குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்தத் தொடர்களின் முடிவில் இலங்கைக்கு இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒற்றை 20-20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வருகை தரவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி ஆகஸ்டில் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒற்றை 20-20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லவுள்ளது.

Saturday, 8 July 2017

பாமர தமிழ்!

தேமதுர தமிழே!
தெளிந்தநல் அமிழ்தே!
மானுறு விழியே!
மாதவ மொழியே!

வானுறு மதியே!
வாசுகி பதியே!
பாரத கலையே!
பாரதி மொழியே!

கானுறு மலரே!
காவிய தமிழே!
தேனூறு கனியே!
தேவரின் அமிழ்தே!

வேலவன் மயிலே!
மாலவன் மலரே!
கலைகளில் முதலே!
அலைகளில் நீர்திவளே!

கம்பனின் கவியே!
கண்ணகியின் சிலம்பே!
மாமதுரை தமிழே!
மாதவியின் எழிழே!

பொதிகையின் குளிரே!
பொன்னியின் வடிவே!
கங்கையின் புனிதமே!
மங்கையின் நாணமே!

முல்லையின் வாசமே!
கிள்ளையின் பாசமே!
அன்னையின் நேசமே!
எந்தையின் சுவாசமே!

சிந்தையின் வண்ணமே!
விந்தையில் விந்தையே!
செழித்தநல் தெங்கையே!
வடிவழகு மங்கையே!

சிப்பியில் முத்தே!
சிந்தனை வித்தே!
கார்கால முகிழே!
மாரிகால மழையே!

பசுந்தளிர் பயிரே!
பசித்தவன் உயிரே!
புசிப்பவன் சுவையே!
புலவனின் கவியே!

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்.கடமைகள்உண்பது
உடுப்பது
உறங்குவது
என
எதுவும்
கடமை...

ஒவ்வொன்றும்
கடமையே...

கடமையென்று
தனியாக
எதுவுமில்லை...

எதுவும்
கடமையென
கருத்தினில்
இருத்தி
கவனத்துடன்
செய்வோர்க்கு
அவனியில்
சுகமே...

ஊசிகோர்ப்பது
உணர்வாய் இழைப்பது
என்ற கடமையால்
கிடைப்பது
சிறந்த உயர்தர
மானம் காக்கும்
மகிழ்வான ஆடை...

எனவே
நமக்கு தெரியாது
ஒவ்வொரு சிறிய
செயல்களின் கூட்டு
சிறப்பான
மிகச்சிறப்பான
பிறிதொன்றாக
புகழ்பெறும்...

எனவே
எதையும் சிறிதென
எண்ணாமல்
கவனத்துடன்
கடமையென
கருதுவோம்...

சிறியவை அழகு...
சிறுதுளி பெருவெள்ளம்...⁠⁠⁠⁠

இக்கவிதை கவிஞர் அகரம் பார்த்திபன்அவர்களின் படைப்பாகும்!


Thursday, 6 July 2017

காதலெது காமமெது?

ஒருமுறை பார்த்த முகம்
ஓராயிரம் படிமங்களாய் கண்ணில்..

அங்குலமாய் செதுக்கினானோ
உளிகொண்டு பிரம்மனும்
பிரபஞ்ச அழகியாய்
பிறப்பெடுக்கச் செய்தானோமையிடும் விழியாலே
மயக்கினாளே என்னையும்..
மருங்கி தவிக்கிறேன்
சிலை போன்ற உடல் கண்டு...

சிரிக்கையில் கன்னத்தின் குழியும்
சரியென்று தலையாட்டும் அழகும்
பொய்யாய்ச் சிறு சண்டையும்
போலியாய் வரும் கோபமும்

ஆட்கொள்கிறது நாளும்
அழகியே என்னை..
அடிமையாய்ப் போனேன்
உன் தாசனாகிப் போனேன்..

சுண்டு விரல் கோர்த்து
சுற்றி வலம் வந்து
உறவினர் சாட்சியாய்
உறவும் தொடங்கியதே

நீளும் இரவில்
நிலவின் இதத்தில்
நிறைவேறிடத் துடிக்கிறது
காதலும் காமமும்

இரண்டுக்கும் போட்டி
அடித்துக் கொண்டே
அணைக்கத் துடிக்கிறது
யார் வெல்வார்
யாரறிவார்

பொங்கிடும் ஆசைகளை
பொசுக்குகியது அவள் விழி
ஆண்மையும் நாணுதே
அவளருகில் இருக்கையில்


அணைத்த உடம்பினில்
ஆயிரம் கீறல்கள்
அனைத்தும் சுகமாய்
அணுவும் உணருதே
ஆனந்த உறவை

ஏக்கம் தீர
ஏங்கிய மனது
எகிறி அடங்கிய
மூச்சுத் திணறலின்
பின்

ஆழ்மனம் கேட்குதே
காதலெது காமமெது என்று...
காதலாகி இசைகையில்
காதலும்... காமமும்... ஒன்றே..

இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும்.


Wednesday, 5 July 2017

காதற் காமம்

மீசை முளைக்கா பருவத்தில்
ஆசை முளைத்தது
அரைக்கால் சட்டையில்
அரும்பியதே அக்காதல்

சிவந்த அழகியவள்
சீரான பல் வரிசையும்
மேலுதட்டின் மேல் மச்சமும்
மெருகேறி இருக்கும் உதடும்

கறுத்த கண்மணியும்
கலையான புருவமும்
காண்பவர் வியந்து
கண்கொட்டாமல் பார்க்கும் அழகும்

கண்டு விழுந்தேனே
காதலியாய் வடித்தேனே
பூரண அழகியை
பூரணமாய் ஏற்றனேநொண்டி விளையாடி
நோக்கியே வருவாள்
கபடி விளையாடி
கரம் தழுவிச் செல்வாள்

முன் இருப்பவள்
பின் நோக்குவாள்
பார்த்து சிரிப்பாள்
பொசுங்கி விழுவேன்

தேறி நிற்பேன்
தேவதையைப் பார்த்தால்
தேய்பிறை போல்
துரும்பாய் இளைப்பேன்

யார் விட்ட சாபமோ
அவளை விட்டுப் பிரிந்தேன்
ஆறாத புண் அது
இன்றும் வலிக்கிறதே

நினைவிலே இருப்பாள்
நித்தமும் வருவாள்
நெகிழும் என் நெஞ்சிற்கு
மருந்தாகும் அவள் சிரிப்பு

வாடிய எந்தன்
வாட்டத்தைப் போக்க
மீண்டும் வந்தாள்
மீள்பதிவாய் என் வாழ்வில்


நான் பேசுவேனென அவளும்
அவள் பேசுவாளென நானும்
நகர்ந்த நிமிடங்கள் வருடமாகயிருந்தது
நானாய் பேசினேன்
நாணம் விட்டு

சுருங்கிச் சிரிக்கும்
சுந்தர விழிகள்
சுண்டி இழுக்குதே
சுகந்தம் போல் இருக்குதே

பேசிப்பேசித் தீராத வார்தைகளும்
பார்க்கச் சலிக்காத
பாவையுன் முகமும்
பறந்து விடுவாயோ என

பயந்தே சொன்னேன்
பாவை உன்னிடம் காதலை...
உணர்ந்தேன் உன்னிடமும்
அதே காதலை
ஏமாற்றாமல் ஏற்றாய் என்னை...

ஊர்கூடிக் கல்யாணம்
உற்றாரும் உறவினரும் வாழ்த்த
அரங்கேறியதே ஆனந்தக்கோலம்..

கூரிய புருவம்
குத்திக் கிழிக்க
இதழ் சேரும் முன்
இமை சேர்ந்தது

உச்சி முகர்ந்தேன்
உடல் ஆசை தொடங்கியது
காதோடு நான் பேசும்
ரகசிய மொழிகளை
களவாடத் துடிக்கும்
காதின் சிமிக்கியையும்

கரம் கோர்க்கா
கடிவாளம் போடும்
கை வளையல்களையும்

உடல் பேசும்
மௌன மொழியை
உலகிற்கு உணர்த்தத்
துடிக்கும் காலின் கொலுசையும்

இரு உயிர்
இணைய இடைஞ்சலாய்
இருக்கும் அனைத்தையும்
களைந்திடுவோம்

உயிரும் உடலும்
ஒரு சேரயிணையட்டும்
எழுத்தால் வடிக்க முடியாத
எண்ணற்ற செய்கைகளை

காலத்தில் மறவாத
காதலின் உயிர்ப்புகளை
சேர்ந்தே பருகுவோம்
புரிந்தே புணர்வோம்
காதற் காமத்தை
சேர்ந்தே பெறுவோம்!


இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும்.


Tuesday, 4 July 2017

திருவிழா

பல்லவி;-

முக்கண்ணன் அருளோட
முளைப்பயிறு
விதைச்சாச்சி!
மூங்கிக்கம்புல மாவிலையும் மல்லிகையும்
சேத்துவச்சி மஞ்சக்கொம்பு கட்டிவச்சி
முகூர்த்தக்காலு நட்டாச்சி!

அனுபல்லவி:-

பத்திரிக்கை அச்சடிச்சி
பக்குவமா காப்புகட்டி
சொந்தங்களை கூட்டிவச்சி
திருநாளும் தொடங்கிடுச்சி..!

சரணம் :-

கொட்டுவச்சி,மேளங்கொட்டி
கோவிலில பொங்கவச்சி
அம்மனுக்கு குலவையிட்டு ஆடு,கோழி
விருந்து வச்சோம்!

சேமம் அதிர-வலம்புரி
 சங்கு முழங்கி அலகுக்குத்தி
பக்தியோடு தீமிதிப்போம்!
நாங்க சொந்தம்கூடி
 தேரிழுப்போம்- தேரில்
எங்க நிலத்தில் விளைஞ்ச
வெள்ளாமையை தொங்கவிடுவோம்!உடுக்கையடிச்சி பேயோட்டி குட்டிக்கடிச்சி
அதன் பச்சைஇரத்தம்
உணவுண்டு குலவிருத்தி பெருக்கிடுவோம்!
குலசாமியை வணங்கிடுவோம்!

அத்தைப்பொண்ணு
மாமன்பையன் ஆளசந்த நேரத்துல
சீண்டல்கள் செய்துக்கிடுமே!
திருவிழா சந்தையில
சோடி சேர்ந்து ஆடிக்கிடுமே!

ராட்டினமோ சுத்தையில
அத்தை மகள் பூவைக்க
அடுத்துவரும் சுற்றினிலே
மாமன்மகன் அதையெடுக்க
ஆட்டம்
இப்போ ஆரம்பிக்குது!
வயசு புள்ளைங்க
ஆசையோட ஆடி நிக்குது!

பம்பாய் மிட்டாய் கடியாரம்  கட்டி
பஞ்சுமிட்டாய் வாங்கிக்கிட்டு
வண்ண வண்ண நாடாக்களும்
கண்ணாடி வளையல்களும்
பலவிதமா ஒட்டும்பொட்டும்,

விதவிதமா பொம்மைகளும் வாங்கித்தந்தேன்
மாமன் பொண்ணுக்கு!
அவ சப்பித்தந்த குச்சி பனிப்பாகும் அமுதமெனக்கு!

மஞ்சத்தண்ணி திருநாளு!
மாமன்,மச்சான்
 சாக்கிரதையாய் வீட்டுக்குள்ளே
ஒண்டிக்கிடுங்கோ!
முறைப்பொண்ணு மஞ்சத்தண்ணீர்
ஊத்தவர்றா மறைவாக ஓடிவிடுங்கோ!

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்!


Monday, 3 July 2017

நம்பிக்கை

மின்னலைப்பிடிக்கவும் தயங்காதவன்
பூக்களைப்பிடிக்க தயங்குவதாக
ஓர் பாடல்...
சிரித்தேன் அன்று...
உணர்ந்தேன் இன்று...

இந்த உணர்வு எனக்கு
மகிழ்ச்சியை தரவில்லை
மாறாக
மன அமைதியை
தந்திருக்கிறது...

துள்ளலைத் தரவில்லை
பொறுப்பினை
தந்திருக்கிறது...

தேடலையும்
தெளிதலையும்
குழப்பத்துடன்
தந்துள்ளது....குழப்பத்தை ரசிக்கிறேன்...
கண்ணியம் குலையாமல்
காலம் நகர்த்த
இக்காதல்
உதவுகிறது ....

சலனமற்ற
ஓடையாக நீ...
அதில்
நீரள்ளி பருகியதால்
குளுமை
உள்ளம் முழுதும்...

உனது புகைப்படம்
கண்டேன்
அதில்
டாவின்சி மட்டுமே
அறியமுடிந்த
சோகமா அமைதியா
என்பதுபோன்ற
கலவை புன்னகையுடன்
நீ...

உனது நினைவு
எனக்கு நிம்மதி
அளிக்கவில்லை
மாறாக
நிறைவைத் தருகிறது...

அடையவேண்டுமே
என்ற ஆர்வம்
பதட்டம்கொள்ளாதே
என்ற எச்சரிக்கை
கவரமுடியுமா
என்ற கவலை

என
எல்லாவற்றையும் மீறி
ஏதோ ஒரு
நம்பிக்கை
என் மீதோ
உன் மீதோ
அல்ல
காதல் மீது....😍⁠⁠⁠⁠

இக்கவிதை கவிஞர் அகரம் பார்த்திபன் அவர்களின் படைப்பாகும்.

Sunday, 2 July 2017

பெண் பலவீனமானவளா?

பெண் என்பவள் சக்தியாம். ஆம் மாபெரும் சக்தி அவள். என்ன இல்லை அவளிடம்? இங்கு பலரும் ஒருவரிடம் என்ன இருக்கிறது என்று தேடுவதேயில்லை. நீ அவள் போல அழகாக இல்லை, இவள் போல அறிவாக இல்லை என என்ன இல்லை என்பதை தேடியே இருப்பதை மறக்கிறோம் இருக்கும் நிம்மதியை தொலைக்கிறோம்.

இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும், நான் இப்பதிவின் முக்கிய பகுதிக்கு வருகிறேன்.ஆண்கள் ஏன் பெண்ணை பலவீனமானவர்கள் என்றே சொல்கிறார்கள்? உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு. தன்னை விட  பலமுடையவர்களாக வேறு எவரும் இருக்கக் கூடாது என்பது தான். அதிலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் குறிப்பாக ஒரு ஆண் இந்த அடிப்படை இயல்பை எவ்வாறு கையாள்கிறான் என்று உற்று நோக்குவோம். தோற்பவரோடு மட்டும் விளையாடி தான் வெற்றி பெற்றதாக கூறும் சிறுபிள்ளைகளை நாம் பார்த்திருப்போம். அதையே தான் வளர்ந்த ஆணும் செய்கிறான்.

தன்னை பலமுள்ளவன் என்று காட்ட பெண்ணை பலவீனமானவள் என அறிவித்தல் நியாயமா? எதிர்ப்பாலினம் என்ற ஒன்று மட்டும்தான் வேறுபாடு. மற்றபடி அவளும் மனித இனம் தான் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு உண்டு?
தராசுக்கு கூட சீர்தூக்கி பார்க்க அதன்  இரு தட்டுகளிலும் பொருள் வேண்டும். இந்த சமூகம் மட்டும் ஏன் பெண்ணை தரையில் இட்டு சீர்தூக்கி பார்க்கிறது? பெண்ணை தனக்கு நிகராக மதிக்கும் போற்றும் என் தோழர்களுக்கும் உறவுகளுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கம்.

* இது எந்த தனிப்பட்ட நபரையும் சாடும் பதிவல்ல.இது என் பார்வை அவ்வளவே.

இப்பதிவு பதிவர் கிருத்திகா அவர்களின் படைப்பாகும். 

உணர்வுகள்

தனிமை எப்போதும் என்னை சுடுவதில்லை....

என்
குழந்தைகள் என்னோடு இல்லை
என்பதை மட்டும் உணர்த்தி செல்லும்
அவ்வளவு தான்....

அது  உலைகலத்தின்
கொதிநிலையை விட சூடானது

இலைத்துளிர்ப்பு
இலைஉதிர்ப்பு
மரமென
நாம்...துளிர்ப்பை உணராமல்
உதிர்ப்பை மட்டுமே
உணர்வதால் வந்தநிலை

பருவநிலை மாறுதல்
மாற்றம்காணா
மரமில்லை
மரங்கள்போல
மனதில்லை...

மனமொன்றும் மரமில்லை,
இவ்வுதிர்காலம் போயின்
வரும் வசந்ததிற்காக காத்திருக்க


இது கவியா தெரியவில்லை
ஆனால் உணர்வுகளின் சங்கமம்⁠⁠⁠⁠

 இது கவிஞர்கள் அகரம் பார்த்திபன் மற்றும் முனீஸ்வரன் ஆகியோரின் படைப்பாகும்.

பயணி

பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்...
வெறுமையும் நம்பிக்கையுமே
வாழ்க்கையாக...

பூமிசுழன்று சுழன்று
உழைப்பதால்
அதன் வியர்வை
வெப்பத்தால்
ஆவியாகி
மழையாக பொழிந்து
பசுமை கொழிக்கிறது...

நல்லெண்ணங்கள்
நற்சிந்தனை
நல்நம்பிக்கை
இவைதவிர
வேறொன்றுமில்லை ...


உழைப்பும்
களைப்பும்
பிழைப்புமாக
வாழ்க்கை....

மகிழ்ச்சி எது
நிறைவு எது
நிம்மதி எது...

தேடியபடியே
ஓடுகின்ற வாழ்க்கையில்
தேடிக்கண்டடைவது
எது...

பார்த்துக்
கொண்டேயிருக்கிறேன்
நம்பிக்கைகொண்ட
பயணியாக....⁠⁠⁠⁠

இது கவிஞர் அகரம் பார்த்திபன் அவர்களின் படைப்பாகும்.

Popular Posts