நம்பிக்கை

மின்னலைப்பிடிக்கவும் தயங்காதவன்
பூக்களைப்பிடிக்க தயங்குவதாக
ஓர் பாடல்...
சிரித்தேன் அன்று...
உணர்ந்தேன் இன்று...

இந்த உணர்வு எனக்கு
மகிழ்ச்சியை தரவில்லை
மாறாக
மன அமைதியை
தந்திருக்கிறது...

துள்ளலைத் தரவில்லை
பொறுப்பினை
தந்திருக்கிறது...

தேடலையும்
தெளிதலையும்
குழப்பத்துடன்
தந்துள்ளது....குழப்பத்தை ரசிக்கிறேன்...
கண்ணியம் குலையாமல்
காலம் நகர்த்த
இக்காதல்
உதவுகிறது ....

சலனமற்ற
ஓடையாக நீ...
அதில்
நீரள்ளி பருகியதால்
குளுமை
உள்ளம் முழுதும்...

உனது புகைப்படம்
கண்டேன்
அதில்
டாவின்சி மட்டுமே
அறியமுடிந்த
சோகமா அமைதியா
என்பதுபோன்ற
கலவை புன்னகையுடன்
நீ...

உனது நினைவு
எனக்கு நிம்மதி
அளிக்கவில்லை
மாறாக
நிறைவைத் தருகிறது...

அடையவேண்டுமே
என்ற ஆர்வம்
பதட்டம்கொள்ளாதே
என்ற எச்சரிக்கை
கவரமுடியுமா
என்ற கவலை

என
எல்லாவற்றையும் மீறி
ஏதோ ஒரு
நம்பிக்கை
என் மீதோ
உன் மீதோ
அல்ல
காதல் மீது....😍⁠⁠⁠⁠

இக்கவிதை கவிஞர் அகரம் பார்த்திபன் அவர்களின் படைப்பாகும்.

Comments