Thursday, 31 August 2017

நிலாச்சோறு - சிலப்பதிகாரம்

காவிரி கடலணைக்கும்
காதல் நகரம்...
கடல் கடந்த வாணிபம்
கரையேறும் இடம்...

விரிந்த காவிரியும்
வங்காளத்தில் இணைத்து...
அடிக்கும் அலையில்
நங்கூரமிட்ட நாவாய்களும்

அலையோடு போராடி
இன்பமுற விளையாடும்
காவிரிப்பூம்பட்டினம் இது...
சோழத்தின் கடல் நகரமிது...

வாணிகத்தில் திளைத்தவன்...
வறியோர்க்கும் எளியோர்கும்
உதவும் பண்புடையவன்...
அழகுடையோன் கோவலன் ...



மங்கையர்க்கரசி இவள்...
மானிடத்து தேவதையிவள்...
மன்மதனேங்கும் அழகியிவள்...
கற்பிக்கரசி கண்ணகியிவள்...

வாணிபக் குடும்பதில்
வரனாய் நுழைந்தாள்
நங்கையான கண்ணகி...
நாளும் வளர்ந்திட

கணவனைக் கண்ணாய்
காத்தாலே கற்புக்கரசியான
கண்ணகி ... தீராக்
காதலுடன் நாளும் நகர்ந்ததே...

பரத மங்கையிவள்...
பார் போற்றும்
அழகியிவள் நர்த்தனமாடி
இரும்பையும் இளகச்செய்திடும்
மாதவி இவள்...

மான் விழிப்பார்வையின்
மையலில் விழுந்தானே...
மதி கெட்டுப்போனானே...
மன்மதன் அழகுடைய கோவலன்...

நடனத்தில் விழுந்தான்...
நாளும் தேய்ந்தான்...
காதலாகி கசிந்தான்...
கற்புக்கரசியை மறந்தான்...

பிரிதலில் வாடியவளின்
பெயரை மறந்தான்...
கள்ளியின் வலையில்
காமத்தை பருகினான்...

அறிந்தும் இருந்தாள்
அந்தோ !! பரிதாபம்...
மங்கள லட்சுமியை
மதிக்காத போதும்

மனதால் நொந்து
மதியென தேய்ந்தாளும்
கோபம் காட்டவில்லை
கோவலனிடம் இவள் மட்டும்...

காதலில் தொடங்கியவன்
காமத்தில் விழுந்தான்...
கரைசேர தோன்றாமல்
கரைத்தான் செல்வத்தை...

பெரும் வணிகன்...
பெயர் இழந்தான்...
பொருள் இழந்தான்...
பொல்லாத சல்லாபத்தால்...

அனைத்தும் அகன்றது
இல்லத்தரசியான கண்ணகி மட்டும்
கலங்காதே என்று
காதலோடு நின்றாள்...

கடவுளாய் பார்த்தான்
கண்காண முடியாமல்
கூனிக் குறுகினான்...
தன்னிலை உணர்ந்து

வருந்திய மனதிற்கு
மருந்தாய் இருந்தாள்...
வாடிய பயிருக்கு
வசந்தகால  மழையானாள்...

காலச் சக்கரம்
கடத்தியது பழையதை...
புதியவனாய் புத்துயிர்
பெற்று உருப்பெற்றான்...

காவிரிப்பூம்பட்டினத்தைத் துறந்து
கோவலனும் கண்ணகியும்
மதுரை நோக்கி வந்தனர்...
முற்றுப் பெற்றதென

நினைத்த வாழ்வை
நெறியோடு வாழ்ந்திட...
புதியதாய் வாணிகம் நடத்திட...
புதுமனிதனாய் மாறிட...

தன்கால் சிலம்பை
துணையானவுக்கு கழற்றிக்
கொடுத்து விற்று
வியாபாரம் தொடங்க

நினைத்தவர்கள் வாழ்வில்...
நிலைதடுமாறிய வாழ்வை
நிலை நிறுத்த
எண்ணியவர் வாழ்வில்...

கொல்லன் வடிவில்
காலன் வந்தான்...
விற்கச் சென்ற சிலம்பு
வேந்தனின் மனைவியது என்றும்...

திருடியவன் கோவலன் என்றும்
திருட்டுப் பட்டம்
தாங்கி கழுவேற்றப்பட்டான் கோவலன் ...
தாங்குமோ ?.. கண்ணகிக்கு...

எழுந்தாள் காளியாய்
அணல் கக்கும்
விழியால் அரண்மனையில்
வேந்தனான பாண்டியனிடம்

உண்மையை உரைத்தாள்...
எள்ளி நகைத்தார்கள்...
சிபியின் வழிந்தோன்றல்கள்
கன்றிழந்த பசுவின்

குறை தீர்க்க
கண்ணாய் வளர்த்த மகனை
தேர்ச்சக்கரத்தில் பலியிட்ட
தர்மவானனான மனுநீதி சோழனின்

ஆட்சியில் வாழ்ந்த
குடிகள் நாங்கள்...
பாண்டிய நாட்டில்
துரோகம் இளைத்தீரே...

வெம்பி மனம்
வேதனை அடைந்து
விசும்பி அழுதவள்
வேந்தனிடம் உண்மையை  உடைக்க துணிந்தாள்...

அரசியாரின் சிலம்புடைக்கப்பட்டது
முத்துயெங்கும் தெறித்தது...
கண்ணகி தன் சிலம்புடைத்தாள்
மாணிக்ககற்களாய் தெறித்து...

பார்த்த பாண்டியன்
பரபரத்து போனான்...
உண்மையைறியாமல் நீதிவழங்கிய
அரசனே நியாமாயிது

ஊழ்வினைப் பயனில்
உன்னிடத்தில் தஞ்சமடைந்தோம்
அநீதியளித்து வாழ்வையழித்தாயே...
அழியட்டும் மதுரை...

மண்ணோடு மண்ணாய்
மடிந்து போகட்டும்...
இது பத்தினியின் சாபம்
அநீதியின் பலனை அனுபவிக்கட்டும்...

நேர்மை தவறி
நீதிக்கு முன்னால்
நிர்கதியாய் நின்ற பாண்டியன்
நிலைகுலைந்து வீழ்ந்தான்...

மண் விட்டு
விண்ணடைந்தான் பாண்டியன்...
அரசியாளும் தாங்காது
உடன் சென்றாள்...

கண்ணகியின் கோபத்தில்
அக்னியால் எரிந்தது மதுரை...
உயிரழந்த மணவாளனை
மடியிலமர்த்தி கண்ணீர் விட்டு

கதறித் துடிக்க...
கதிரவனும் கலங்கினானே
கார்மேகமென அழுதானே...
கண்ணகியின் நிலையெண்ணி...

எரிந்தும் அடங்காத
கோபத்தில் சேரதேசம் புகுந்து
மலையின் மீதேறி
மகேசனை வேண்டி

தவம் புரிந்து
தவமணியாய் நின்றாளே...
கற்புக்கரசியாய் நின்றாளே
கண்ணகியும் மக்கள் மனதில்...

சேரன் செங்குட்டுவன்
சன்னதியும் எடுப்பித்தானே...
மலையின் உச்சியில்
மௌனமாய் அமர்ந்த
கற்புக்கரசி கண்ணகிக்கு...

சிலையான மங்கையால்
சிதறுண்ட வாழ்வு...
சிலம்பால் முடிவுற்றது
சிலப்பதிகாரம் எனும்
காவியமாய் நின்றது...

- இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -

Wednesday, 30 August 2017

⁠நிறமிழந்த வானம்

விரிந்த வானில்
வியப்பாய்  பல
ஊடலும், கூடலும்
ஓய்வின்றி நிகழ்கிறது...

வண்ணங்களை இறைத்து...
வரைமுறைகள் அற்று...
அழகாய் நடக்கிறது
ஒளிச்சேர்க்கை வானில்...

கதிரவனின் காதலும்
கரை புரண்டோட...
கதிராய்க் கொணர்ந்தான்
காதலை வெளியில்...

ஒவ்வொரு கதிரும்
ஓராயிரம் உணர்வை
கடலினுள் பிரதிபலித்து
காதலைக் கூட்டிட...

புது மணப்பெண்னாய்
பூரித்து மங்களமாய்
விடிந்தது உலகும்
வியாபித்தது ஒளியும்...

கடலன்னையும் தன்னை
கதிரொளியில் தொலைத்தாள்...
மின்னிடும் ஒளியோ
மின்சாரமாய்ப் பாய...

சூட்டில் சுகமாய்
குளிர் காய்ந்தாள்...
தன்னையே இழந்தாள்...
துள்ளிப் பறந்தாள்...

கூடலின் பரிசோ
கார்மேகமாய் வந்திட...
கருவாய்த் தாங்கி
கருமையாய்த் திரிந்தாள்...



காற்றின் வேகத்தில்
கலையாமல் நகர்ந்தாள்...
காலம் கூடிவர
மாரியாய்ப் பொழிந்தாள்...

நாளும் கூடல்
நடப்பது சாத்தியமோ?...
ஊடலும் சிலகாலம்
உண்டுதான் இருவருக்குள்ளும்...

அப்பொழுது
வெற்று வானில்
வெண்மையாய் அலைவாள்...
கருவும் இராது...
கார்மேகமும் இராது...

இருந்தும் நகர்வாள்
இன்பமாய் இவ்வானில்...
கேட்பார் யாருமில்லை...
கேள்வியும் இவள்மேலில்லை...

இதைப் பார்த்த
என்னுள் இரண்டே
கேள்விகள் பிறக்கிறது...
வேள்வித்தீயாய்ச் சுடுகிறது..

திருமணம் முடிந்தும்
தாம்பத்தியம் நடந்தும்
கருவுறாமல் இருந்தால்...
கல்லாகி மனமும்

பெண்மையை தூற்றுகிறேதே...
பாரபட்சம் பாராமல்
மலடியென்று அழைக்குதே
மதிகொண்ட மக்கள் கூட்டம்...

இருவரினுள் பூத்த
காதலும் பொய்யில்லை...
காமமும் பொய்யில்லை...
இருந்தும் பெண்மையை

குறிவைப்பது ஏனோ?
காளையனை தாங்குவதுமேனோ?
இன்றுவரை கிடைக்கவில்லை
இக்கேள்விக்கு விடை...

அடுத்த ஒன்று...

ஆசையாய் திருமணம்
அரங்கேறி மஞ்சமடையும் முன்
காலனிடம் தஞ்சமடைந்தவனுக்காக
கதியற்று நிற்பவளை

உறவினர்கள் கூடி
நிறங்களைக் கலைத்து
நிர்மூலமாக்கி நிர்க்கதியாக்குகிறார்களே
நினைவிருந்து   தான் நடக்குதோ?

இல்லை
மதியிழந்து நடக்குதோ?
மணவாளனாய் வடித்தது
இவள் பிழையோ?
உறவினர் செய்தது
தான் பிழையோ?

காதலில் கரங்கோர்த்து
கரை சேரவந்தவளை
அவமானத்தின் சின்னமாய்...
அனுதாபத்தின் சின்னமாய்...

நிறுத்துவது தான்
நியாமோ?

ஊடலில் சிலநாள்
கூடலில் சிலநாள் - என
நிறமிழந்து வான் நிற்பது
மனதிற்கு வலியில்லை...

உயிர் தாங்கி...
வலி தாங்கி...
வெம்பும் பெண்மையின்
வலி தீர்ந்து

கலை பெற்று
கரு பெற்று
நிற்கும் நாளே
நிறங்கள் நிறைந்த நாள்...

மற்ற நாளெல்லாம்
நிறமிழந்த நாளே
என் வானிற்கு....

- இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -

பிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த இருவர் !

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரைசாவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து போட்டியாளர்களின் எண்ணிக்கை எட்டாகக் குறைந்தது. இதனால் ஏற்கனவே மக்கள் வாக்குகள் மூலம் வெளியேற்றப்பட்ட ஜூலி மற்றும் ஆர்த்தி ஒரு வாரத்திற்கு விருந்தினர்களாக வீட்டுக்குள் அனுப்பப் பட்டுள்ளனர். இவர்கள் இருவரினதும் வருகை இல்ல உறுப்பினர்களிடையே மாத்திரமின்றி மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சினேகன் இன்றைய நிகழ்ச்சியில் ( 29 / 08 ) "பழையவங்க நாம நாலு பேரு தான் இருக்கோம். நமக்கு வெளில நடக்குறது எதுவுமே தெரியாது. புதுசா வந்திருக்குற நாலு பேரும் வெளில இருந்து நிகழ்ச்சிய பார்த்துட்டு வந்தவுங்க. ஜூலியும் ஆர்த்தியும் உள்ளேயும் வெளியேயும் பார்த்துட்டு வந்திருக்காங்க. விளையாட்டு எப்படிப் போகுதுன்னே தெரியலையே?" என்று குறிப்பிட்டிருந்தார். உண்மை தான். பிக்பாஸ் மனதில் என்ன இருக்கிறதோ? 



ஒன்பதாம் வாரஇறுதி நிகழ்ச்சியில் கமல் முன்பு காயத்ரி, சக்தி, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் வந்தபோது யாரும் கைதட்டவில்லை. ஆனால் பரணிக்கு கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். இது அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் பிக்பாஸ் இல்ல உறுப்பினர்களும் ஜூலியின் வருகையை ரசிக்கவில்லை. ஜூலியும் ஆர்த்தியும் ஒரு வாரத்திற்கு மட்டுமே இந்த வீட்டில் இருப்பார்கள் என்று பிக்பாஸ் அறிவித்தாலும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். 

இந்த வாரம் காஜல், சினேகன் மற்றும் ஆரவ் ஆகியோர் வெளியேற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஓவியாவின் ரசிகர்கள் ஆரவ்வை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தங்கள் பேஸ்புக் பக்கங்கள் மூலமாக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். எது எப்படியிருந்த போதிலும் பல கேள்விகளுக்கு இவ்வார இறுதியில் விடை  கிடைத்துவிடும்.

பிக்பாஸ் பற்றிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது புதிய பேஸ்புக் பக்கத்தை விருப்பக்குறியிடுங்கள் : BIGG BOSS TAMIL அல்லது https://www.facebook.com/biggbosstamil1/

#BIGG-BOSS-TAMIL-WEEK-10-JULIE-AND-AARTHI-RE-ENTRY
#BIGGBOSS #BIGGBOSSTAMIL #OVIYA #OVIYAARMY #VIJAYTELIVISION #BIGGBOSSVOTE #BIGGBOSSTAMILVOTE #KAMALHASSAN #JULIE #AARTHI #HARATHI

Tuesday, 29 August 2017

பிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து தாமாக வெளியேறியோர்:
01. ஓவியா 
02. பரணி 
03. ஸ்ரீ 

மக்கள் வாக்குகளின் மூலம் வெளியேற்றப் பட்டோர் :
04. ஜூலி 
05. சக்தி 
06. நமீதா 
07. ஆர்த்தி 
08. கஞ்சா கருப்பு 
09. அனுயா 
10. காயத்ரி
11. ரைசா 

முதல் கட்ட போட்டியாளர்களில் இன்னும் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள் :

12. ஆரவ் 
13. சினேகன் 
14. வையாபுரி 
15. கணேஷ் 

புது வரவுகள்:
16. ஹரிஷ் 
17. சுஜா வருணி 
18. காஜல் 
19. பிந்து மாதவி

பிக்பாஸ் விருந்தினர்கள் :
* ஜூலி
* ஆர்த்தி
(இவர்கள் இருவருமே மக்கள் வாக்குகளால் வெளியேற்றப்பட்டவர்கள். ஆனால் பிக்பாஸ் விருந்தினர்களாக ஒருவாரம் மட்டும் வீட்டில் இருப்பார்கள்)
வாரம் 10 - வெளியேற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள்:
#காஜல் 
# சினேகன் 
#ஆரவ்
வாக்களிப்பு முறை:
# பிக்பாஸ் வாக்களிப்புக்கு இங்கே சொடுக்கவும்: 'பிக்பாஸ் தமிழ் - வாக்களிப்பு' 'BIGG BOSS TAMIL VOTE'

அல்லது 

''BIGG BOSS TAMIL VOTE' அல்லது ''BIGG BOSS VOTE' என கூகுளில் தேடுங்கள்.
ஒரு வாக்காளருக்கு ஒரு நாளைக்கு ஐம்பது வாக்குகள் வழங்கப்படும். வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வாக்களிக்க முடியாது. 
இந்திய பார்வையாளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இந்தியாவுக்கு வெளியில் உள்ள வாக்காளர்கள் https://www.google.co.in முகவரிக்கு சென்று வாக்களிக்க முடியும்.

# தவறிய அழைப்பு முறையில் ( Missed Call ) வாக்களிக்கலாம்.
இதில் இந்திய வாக்காளர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும்.
அழைப்பு இலக்கங்கள் ( வாரம் 10 )
சினேகன்     : 7210122313
காஜல்          : 7210122319
ஆரவ்            : 7210122301
வாரத்தின் அடிப்படையில் வெளியேறியோர் பட்டியல் : 
வாரம் 01 - ஸ்ரீ ( தானாக வெளியேறினார்) 
                      அனுயா 
வாரம் 02 - கஞ்சா கருப்பு 
                      பரணி ( தானாக வெளியேறினார்)
வாரம் 03 - ஆர்த்தி 
வாரம் 04 - நமீதா 
வாரம் 05 - வெளியேற்றம் இல்லை 
வாரம் 06 - ஜூலி 
                      ஓவியா ( தானாக வெளியேறினார்)
வாரம் 07 - சக்தி 
வாரம் 08 - காயத்ரி 
வாரம் 09 - ரைசா
வாரம் 10 - ???
வெளி உலகத் தொடர்புகள் ஏதும் இன்றி விசேடமாக வடிவமைக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் வசித்து வரும் போட்டியாளர்களில் மாபெரும் வெற்றிக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்? ஞாயிறன்று மக்கள் தீர்ப்பு வெளியாகும். அதுவரை நாமும் அவர்களைப் பற்றி புறம் பேசுவோம்!

Monday, 28 August 2017

பிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தனது ஒன்பதாவது வாரத்தையும் நிறைவு செய்துள்ளது. இந்த வாரம் வீட்டுக்குள் பெரிதாக எந்த சிக்கல்களும் இல்லாதிருப்பது கண்டு மனம் நொந்த பிக்பாஸ் கமல் மூலமாக குடும்ப உறுப்பினர்களிடையே பிளவை உண்டு பண்ணினார். குடும்ப உறுப்பினர்களின் மீதான புகார்களை வழக்காடு மன்றத்தின் மூலமாக விசாரிப்பதாக ஒரு பணியைக் கொடுத்து சிக்கல்களை சிறிது இல்லத்திற்குள் அனுப்பி விட்டார். முழுமையான விளைவுகள் திங்கள் ( 28 ) அத்தியாயம் முதல் தெரிய வரும்.


வழமையாக வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை சற்று கலக்கமடைய செய்து பிரியாவிடை வழங்கி பின்னர் தான் கமல் இருக்கும் மேடைக்கு வரவைப்பார்கள். ஆனால் ரைசாவை பிக்பாஸ் ரகசிய உரையாடல் அறைக் கதவின் மூலமாக மேடைக்கு வரவைத்து பின்னரே சக இல்ல உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தினர். இது சக போட்டியாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. மேடைக்கு வந்து சிறப்பாக உரையாடலை மேற்கொண்டுவிட்டு விடைபெற்றார் ரைசா.

ரைசா கமலிடம் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட்டார். "நாம் வீட்டில் எந்தப் பொருளையும் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் வீட்டில் நம்மிடம் பணம் இருக்கும். அதனால் நினைத்ததை உடனே வாங்கிவிட முடிவதால் பணத்தையும் பொருளையும் மதிப்பதில்லை. பிக்பாஸ் வீட்டில் எந்தப் பொருளும் இலகுவில் கிடைக்காது. ஆகவே நம் உழைப்பின் அருமையையும் பொருட்களின் அருமையையும் புரிந்து கொண்டேன். இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். அதை இனி என் வாழ்வில் கடைப்பிடிப்பேன்" என்று ரைசா கூறினார்.

உண்மைதானே? மற்றைய போட்டியாளர்களில் இருந்து மாறுபட்ட புதிய பாடத்தை ரைசா பெற்றுக்கொண்டுள்ளார். நாமும் கடைப்பிடிக்கலாம் அல்லவா?

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #STARVIJAYTV #KAMALHASSAN#RAIZA #OVIYA #ENDAMOLSHINE

Sunday, 27 August 2017

இங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது டெஸ்ட் போட்டி - 25/08/2017

தொடர் : மேற்கிந்திய தீவுகள் அணியின் இங்கிலாந்துக்கான விஜயம்

போட்டி : 02 / 03 - டெஸ்ட் போட்டி

நாள் : 25/08/2017 - 29/08/2017

நேரம் : 10:00 ( கிறீன்வீச் நேரம் )

ஆடுகளம் : லீட்ஸ்

நாணய சுழற்சி : இங்கிலாந்து - துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது


டெஸ்ட் போட்டி - 01 - முடிவு :

இங்கிலாந்து - 514 / 08 ( 135.5 - ஆட்டத்தை இடைநிறுத்தியது )
மேற்கிந்திய தீவுகள் அணி - 168 / 10 - 47.0 - முதலாவது இன்னிங்ஸ் 
மேற்கிந்திய தீவுகள் அணி - 137 / 10 - 45.4 - இரண்டாவது இன்னிங்ஸ் 

இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.




டெஸ்ட் போட்டி - 02 :

இங்கிலாந்து முதலாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டம்:
258 / 10 ( 70.5 )

ரூட் - 59
ஸ்டோக்ஸ் - 100

மேற்கிந்திய தீவுகள் முதலாவது இன்னிங்ஸ் பந்து வீச்சு :

ரோச் மற்றும் கேப்ரியல் 04 விக்கெட்டுகள் 



மேற்கிந்திய தீவுகள் முதலாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டம் :
427 / 10 ( 127 )

ப்ரத்வைட் - 134
ஹோப் - 147
ப்ளாக்வூட் - 49
ஹோல்டர் - 43

இங்கிலாந்து முதலாவது இன்னிங்ஸ் பந்து வீச்சு :

அண்டர்சன் - 05 விக்கெட்டுகள் 

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டம் :
490 / 08 ( 141 ஓவர்  - ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது )

ஸ்டோன்மென் - 52 
ரூட் - 72
மலன் - 61
ஸ்டோக்ஸ் - 58 

மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸ் பந்து வீச்சு :

ஹோல்டர் - 02 விக்கெட்டுகள் 
சேஸ் - 03 விக்கெட்டுகள் 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 322 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டம் :
322 / 05 ( 91.2 )

ப்ரத்வைட் - 95 
ஹோப் - 118

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சு :

அலி - 02 விக்கெட்டுகள் 

 மேற்கிந்தியத் தீவுகள் அணி 05 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதுடன் 03 போட்டிகள் கொண்ட தொடரை 01-01 என சமப்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது.

பங்களாதேஷ் எதிர் அவுஸ்திரேலியா - முதலாவது டெஸ்ட் போட்டி - 27-08-2017

தொடர் : அவுஸ்திரேலிய அணியின் பங்களாதேஷ் க்கான விஜயம்

போட்டி : 01 / 02 - டெஸ்ட் போட்டி

நாள் : 27/08/2017 - 31/08/2017

நேரம் : 10:00 ( பங்களாதேஷ்  நேரம் )

ஆடுகளம் : மிர்பூர்

நாணய சுழற்சி : பங்களாதேஷ் - துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது



நாள் 01 - பங்களாதேஷ் 260 / 10 ( 78.5 )
                  அவுஸ்திரேலியா 18 / 03 ( 09.0 )
நாள் 02 - அவுஸ்திரேலியா 199 / 07 ( 65.5 )
                  பங்களாதேஷ் 45 / 01 ( 22.0 )
நாள் 03 - பங்களாதேஷ் 176 / 09 ( 57.3 )
                  அவுஸ்திரேலியா 109 / 02 ( 30.0 )
நாள் 04 - அவுஸ்திரேலியா 135 / 08 ( 40.5 )

பங்களாதேஷ் முதலாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டம் :
260 / 10 ( 78.5 )

தமிம் இக்பால் - 71 ( 144 - 5x4 3x6 )
ஷகிப் அல் ஹஸன் - 84 ( 133 - 11x4 )

அவுஸ்திரேலியா முதலாவது இன்னிங்ஸ் பந்து வீச்சு :

கம்மின்ஸ் - 16.0 - 63 ஓட்டம் - 03 விக்கெட்
லியோன் - 30.0 - 79 ஓட்டம் - 03 விக்கெட்
அகர் - 12.5 - 46 ஓட்டம் - 03 விக்கெட்

அவுஸ்திரேலியா முதலாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டம் :
217 / 10 ( 74.5 )

ரென்ஷோ - 45 ( 151 - 5x4 )

பங்களாதேஷ் முதலாவது இன்னிங்ஸ் பந்து வீச்சு :

ஷகிப் அல் ஹசன் - 25.5 - 68 0 ஓட்டம் - 05 விக்கெட்
மெஹிதி ஹாசன் - 26.0 - 62 0 ஓட்டம் - 03 விக்கெட்

பங்களாதேஷ் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டம் :
221 / 10 ( 79.3 )

தமீம் இக்பால் - 78
முஷ்பிகுர் ரஹீம் - 41

அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ் பந்து வீச்சு :

லியோன் - 34.3 - 82 ஓட்டம் - 06 விக்கெட்

பங்களாதேஷ் அவுஸ்திரேலிய அணிக்கு 265 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என இலக்கை நிர்ணயித்தது.

அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டம் :
244 / 10 ( 70.5 )

வார்னர் - 112
ஸ்மித் - 37

பங்களாதேஷ் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சு :

ஷகிப் அல் ஹசன் - 28.0 - 85 ஓட்டம் - 05 விக்கெட்

* பங்களாதேஷ் அணி 20 ஓட்டங்களால் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இலங்கை எதிர் இந்தியா மூன்றாவது ஒரு நாள் போட்டி - 27-08-2017

தொடர்              : இந்திய அணியின் இலங்கைக்கான விஜயம் 

போட்டி             : 03 / 05

நாள்                    : 27/08/2017

நேரம்                : 14:30 ( இலங்கை / இந்திய நேரம் ) - பகல் / இரவு ஆட்டம்

ஆடுகளம்        : பல்லேகல, கண்டி 

நாணய சுழற்சி : இலங்கை நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 



இலங்கை அணி துடுப்பாட்டம் : 

நிரோஷன் திக்வெல்ல - 13 ( 15 - 2x4 )
குஷல் மெண்டிஸ் - 01 ( 10 )
தினேஷ் சந்திமால் - 36 ( 71 - 4x4 )
லஹிரு திரிமான்னே - 80 ( 105 - 5x4 1x6 )
மெத்தியூஸ் - 11 ( 23 - 1x4 )
சாமர கப்புகெதர - 14 ( 22 - 1x4 )
மிலிந்த சிறிவர்தன - 29 ( 27 - 4x4 )
அகில தனஞ்சய - 02 ( 06 )
துஷ்மந்த சமீர - 06 ( 10 - 1x4 )
விஷ்வா பெர்னாண்டோ - 05 ( 06 ) *
லசித் மலிங்க - 01 ( 05 ) *

இலங்கை அணி - 0-50 ஓட்டம் - 14 ஓவர்கள், 51-100 ஓட்டம் - 25.3 ஓவர்கள், 101-150 ஓட்டம் - 37.4 ஓவர்கள், 151-200 ஓட்டம் - 47.3 ஓவர்கள்.

50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 09 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள்.

இந்திய அணி பந்து வீச்சு :

பும்ரா - 10.0 - 27 ஓட்டம் - 05 விக்கெட்
ஹர்திக் பாண்டியா - 8.0 - 42 ஓட்டம் - 01 விக்கெட்
ஆக்ஸர் பட்டேல் - 10.0 - 35 ஓட்டம் - 01 விக்கெட்
கேதர் ஜாதவ்  - 3.0 - 12 ஓட்டம் - 01 விக்கெட்



இந்திய அணி துடுப்பாட்டம் :

ரோஹித் ஷர்மா- 124 ( 145 - 16x4 2x6 ) *
ஷிக்கர் தவான் - 05 ( 03 - 1x4 )
லோகேஷ் ராகுல் - 17 ( 24 - 2x4 )
கேதர் ஜாதவ் - 00 ( 02 )
விராட் கோலி - 03 ( 11 )
தோனி - 67 ( 86 - 4x4 1x6 ) *

துடுப்பெடுத்தாடவில்லை : 
ஹர்திக் பாண்டியா
ஆக்ஸர் பட்டேல்
புவனேஷ்வர் குமார்
யூஷ்வா சஹல்
பும்ரா

இலங்கை அணி பந்து வீச்சு :

அகில தனஞ்சய - 10.0 ( 38 ஓட்டம்  - 02 விக்கெட் )
லசித் மலிங்க - 5.0 ( 25 ஓட்டம் - 01 விக்கெட்  )
விஷ்வா பெர்னாண்டோ - 8.1 ( 35 ஓட்டம் - 01 விக்கெட் )

29 பந்துகள் மீதம் இருக்க 06 விக்கெட்டுகளால் இந்திய அணி இலங்கை அணியை வெற்றி கொண்டதுடன் 05 போட்டிகள் கொண்ட தொடரை 03 போட்டிகளை வென்றதன் மூலமாக கைப்பற்றியுள்ளது. அடுத்த போட்டி 31 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

குறள்வெண்செந்துறை - மொழி

தமிழும் தாயும் தரணியில் முதலாம்
அமிழ்தை போலே அவனியில் இனிதே!

அமிழ்தே உயிரே அழகிய மொழியே,
தமிழே உணர்வே தரணியில் உயர்வே!

சுவைநறுங் கரும்பே சுந்தர தமிழே,
அவைதனில் நிறைந்த அழகிய மொழியே!



தேனே சுளையே தேன்சொரி மலரே,
மானே மயிலே மாதவ மொழியே!

அகமே புறமே அலர்வடி வழகே
சுகமே சுனையே சுவைமிகும் கனியே!

தவமே வரமே தண்டமிழ் மொழியே,
குவளை மலரென குளிருநல் இதழே!

மானிறு விழியோ மாதவ மொழியோ,
காணிரு வடிவோ காரிருளின் ஒளியே


- இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^⁠⁠⁠⁠

வேண்டும்



அ ன்பான அம்மா வேண்டும்,
ஆ சையான அப்பா வேண்டும்,
இ னிமையான உறவு வேண்டும்,
ஈ கை செய்யும்நல் நெஞ்சம்
 வேண்டும்,
உ ரிமை கொண்டாட சகோதரி
 வேண்டும்,
ஊ டலிலும் காதல்கொண்ட
  மனைவி வேண்டும்,
எ ண்ணமொத்த நட்பு வேண்டும்,
ஏ ற்றம் நிறைந்த வாழ்வு வேண்டும்,
ஐ யம் தீர்க்கும் ஆசான் வேண்டும்,
ஒ வவொருநாளும் எதிர்த்துவாழ
 எதிரியும் வேண்டும்,
ஓ ய்வு இல்லாமல் உழைத்திட
 வேண்டும்,
ஔ வை வழி நடந்திடல் வேண்டும்,
அ ஃ தில்லையேல் இவ்வுலக பிரிவு
  வேண்டும்.....

- இப்படைப்பு கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் - ⁠

Saturday, 26 August 2017

தங்கைக்கோர் கவிதை

தாய் வழியே
தங்கையாய் வந்தவளே...
தமையன் எழுதுகிறேன்
தங்கைக்கோர் கவிதையை...

ஐயிறு திங்கள்
எனைத் தாங்கிய மடி
உனைத் தாங்கிட...
ஓராயிரம் கனவுகள்
என்னுள்...

தந்தையின் உயிர்கொண்டு...
தாயின் உடல்கொண்டு...
தமையனின் அன்பைக்காண
தரணியில் வந்தவளே...



நீ பிறந்த கணத்தில்
நெடுந்தவம் நானிருக்க..
குதித்து வந்தாய்
கலையாய் நீயும்...

மருத்துவமனை ஊஞ்சலில்
மோகனப் புன்னகை
வீசி நீ படுத்திருக்க...
விசும்பியதே கதிரவனும்
தன் ஒளியிழந்து...

தாமரை மொட்டாய்
பூத்து நீயிருக்க...
தாமரை இதழாய்
அங்கமெங்கும் உன் நிறமிருக்க...

கோகுலத்து கண்ணணாய்
கோவையில் பிறந்தவளே- உன்
அழகைப் பார்த்து மயங்கி
அம்புலியும் உதிக்க மறந்ததே...

இவையனைத்தையும் பார்த்து
அருகில் வந்து
உன் விரலை  நான் தொட...
பற்றிக் கொண்டவள்

இன்றுவரை விடவில்லை...
கலையின் அம்சம்
கொண்டவளடி நீ...
காயத்திரியாய் ஆனாயடி...

தவழ்ந்து வந்து
தாவி ஏறி
மார்பில் பாதம்பதித்து
மதியில் நிறைவாயடி நீ...

பிரியமனம் கேளாது...
பிரிந்த நாளும் ஓடாது...
ஆசையாய் அண்ணாயென்று
அழைக்கையில் அகிலமும் மறக்குமடி...

ஆசைகள் பலவுண்டு...
அக்கறையும் அதற்குமேலுண்டு
உன்மேல் எனக்கு - அதை
உணர்த்திட வார்த்தையில்லை...

தரம் உள்ளவனாய்...
கண்ணியம் உள்ளவனாய்...
உன் மனம் புரிந்தவனாய்...
எங்கள் மனம் கவர்ந்தவனாய்...

உனக்கு வரன் பார்த்து...
நீ மாலையிடும் முன்னரே
நான் மாலையிட்டு
கரம்பிடித்து திலகமிட்டு...

மணமேடையில் அமர்த்தி
மங்கள நாண்
கழுத்தில் ஏறிடும்
அந்நேரத்தில் மகிழ்ந்து நீயிருக்க...

உன் முகம் பார்த்து
ஓரத்தில் வழியும்
என் விழி நீரை
என்னுள் புதைத்து...

உள்ளங்கை பிடித்து
உரித்தானவனிடம் ஒப்படைத்து...
உச்சி முகர்ந்து
முத்தமிட்டு வழியனுப்பிவைத்து...

பிறிதொரு நாளில்...

தங்கைக்கு தேவதையாய்
தளிரொன்று பிறந்திட...
தாய்மாமனாய் நான் மடிதாங்கி
தங்கத்தை தங்கத்தால் வார்த்தெடுத்து...

பிஞ்சின் சிறுநீர் - என்
புத்தாடையை நனைத்திட
சிறுநீரும் பன்னீராய்
மணக்குமடி ...
அந்தாடையையும் பொக்கிஷமாய்
காப்பேனடி...

தாயிற்கு அடுத்து - இந்த
தாய்மாமன் மறவாது
காப்பேன் என்
கண்ணின் மணியாய்..

இந்த வரம்
மட்டும் தந்திடடி...
தங்கையே இது
தமையனின் வேண்டுகோளடி...


- இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும் -

கவிஞரின் குறிப்பு:
என் தங்கை ( சிற்றப்பாவின் மகள்) ஆசையாய் எனைக் கேட்டாள், அவளைப் பற்றிய கவிதையை .. .தங்கைக்காக தமையனின் கவிதை...

Friday, 25 August 2017

சிறகுகள் விரித்து...

சிறகுகள் விரித்து
 பறந்திட வேண்டும்!
உறவை மறந்து உலகினை
வலம்வர வேண்டும்!

இடர்தலை அறுத்திடல்
 வேண்டும்,
இறையடி பணிந்திடல்
 வேண்டும்!

துன்பம் மறந்திடல்
 வேண்டும்!
துறவறம் நாடிடல்
 வேண்டும்!

வதுவை ஒதுக்கிட
 வேண்டும்!
அரிவை மறந்திட
 வேண்டும்!

கயமை எரித்திட
 வேண்டும்!
பயத்தை துரத்திட
வேண்டும்!



ஆசை அழித்திட
வேண்டும்!
அறவழி நடந்திட
வேண்டும்!

வானாய் உயர்ந்திட
வேண்டும்!
பிறர் வாழ உழைத்திட
வேண்டும்!

நாணாய் வளைந்திட
வேண்டும்!
நானாய் இருந்திட
வேண்டும்!

ஊனை வெறுத்திட
வேண்டும்!
உயிர்களை விரும்பிட
வேண்டும்!

அன்பை பற்றிட
வேண்டும்!
நற் பண்பை பெற்றிட
வேண்டும்!

காற்றாய் கடுகிட
வேண்டும்!
தே னூற்றாய் இனித்திட
வேண்டும்!

இசையாய் வருடிட
வேண்டும்!
திசையாய் விரிந்திட
வேண்டும்!

பயிராய் செழித்திட
வேண்டும்!
பழமாய் இனித்திட
வேண்டும்!

வானாய், மீனாய்
நிலமாய், மரமாய்
ஊனாய், உயிராய்
பணமாய், சினமாய்.!

யாவும் அழித்து
யானென மறந்து
சவமாய் மாறி
சிவமே துணையென
சேவடி நாடிட வேண்டும்!

இப்படைப்பு கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்.

இலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை

தொடர்              : இந்திய அணியின் இலங்கைக்கான விஜயம் 

போட்டி             : 03 / 05

நாள்                    : 27/08/2017

நேரம்                : 14:30 ( இலங்கை / இந்திய நேரம் )

ஆடுகளம்        : பல்லேகல, கண்டி 

கடந்த காலம் : இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இறுதி 05 போட்டிகளில் இலங்கை 01 போட்டியிலும் இந்தியா 04 போட்டிகளிலும் வெற்றி.

காலம்               : பகல் / இரவு 


இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான தொடரின் மூன்றாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியுற்றுள்ள நிலையில் இலங்கை அணி மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. தொடரில் இப்போட்டியுடன் இன்னும் மூன்று போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில் அவற்றுள் இரண்டை கட்டாயம் வெற்றி கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் இலங்கை அணி உள்ளது. உலகக் கிண்ணம் 2019 க்கு நேரடியாகத் தேர்வு பெற இலங்கைக்கு இந்த வெற்றி மிக அவசியமாக உள்ளது. 

இந்தியா எதிர் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி வரலாற்றுத் தகவல்கள் :

* இரு அணிகளுக்கிடையிலும் அதி கூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கையை இந்திய அணி பெற்றுள்ளது. 15/12/2019 அன்று ராஜ்கோட்டில் இடம்பெற்ற போட்டியில் 07 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்கள் ( இலங்கை 411/8 - அதே போட்டி )

* நடைபெறவுள்ள மூன்றாவது போட்டி இலங்கை அணியின் 801 வது ஒருநாள் போட்டியாகும்.

* ஆகக் குறைந்த மொத்த ஓட்ட எண்ணிக்கையை இந்தியா பெற்றுள்ளது. 29/10/2000 இல் ஷார்ஜாவில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி பெற்ற 299 ஓட்டங்களுக்கு பதிலளித்து ஆடும் போது இந்தியா 54 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

* இரண்டு அணிகளும் இணைந்து அதி கூடுதலாக 15/12/2019 அன்று ராஜ்கோட்டில் இடம்பெற்ற போட்டியில் 825 ஓட்டங்களைக் குவிந்துள்ளன.

* இரண்டு அணிகளும் இணைந்து பெற்றுக்கொண்ட அதி குறைந்த ஓட்ட எண்ணிக்கை 193. ( ஷார்ஜா - 08/04/1984 )

* அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையிலான வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றி 29/10/2000 இல் ஷார்ஜாவில் இடம்பெற்ற போட்டியில் 245 ஓட்டங்களால் பதிவு செய்யப்பட்டது.

* ஒரு போட்டியில் அதி கூடிய உதிரி ஓட்டங்களை இந்திய அணி வழங்கியுள்ளது. மொத்தம் 37 ஓட்டங்கள் உதிரிகளாக வழங்கப்பட்டன. ( நாள்: 14/01/1995 )

* தனி நபர் மொத்த ஓட்ட எண்ணிக்கையில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார். 84 போட்டிகளில் 3113 ஓட்டங்கள்.

* அதி கூடிய தடவைகள் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தவர் ஜயசூரிய. 07 தடவைகள்.

* அதி கூடிய ஒரு போட்டியிலான ஓட்ட எண்ணிக்கையை ரோஹித் ஷர்மா 13/11/2014 இல் கல்கத்தாவில் பெற்றுக் கொண்டார். 173 பந்துகளில் 264 ஓட்டங்கள்.

* அதி கூடிய மொத்த விக்கெட்டுகளை முத்தையா முரளிதரன் கைப்பற்றியுள்ளனர். 63 போட்டிகளில் 74 விக்கெட்டுகள்.

* சிறந்த பந்துவீச்சுப் பரிதி முத்தையா முரளிதரனுக்கு சொந்தமாகும். 10 ஓவர்களில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உள்ளடங்கலாக 30 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுகள் ( நாள்: 27/10/2000 )

* மிகச் சிறந்த இணைப்பாட்டம் 26/05/1999 இல் இரண்டாவது விக்கெட்டுக்காக கங்குலி மற்றும் ட்ராவிட்டினால் 318 ஓட்டங்கள் பகிரப்பட்டது.

இன்னும் பல சாதனைகள்  உள்ளன. அடுத்த போட்டி ஏதேனும் சாதனைகளை படைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, 24 August 2017

இலங்கை எதிர் இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி நேரடி கள நிலவரம்

நாணய சுழற்சி : இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணியை துடுப்பெடுத்தாடப் பணித்தது. முதலாவது பவர்பிளே : ஓவர் 01 - 10 - கட்டாயமானது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் : திக்வெல்ல மற்றும் குணதிலக்க
முதலாவது விக்கெட் இழப்பு : நிரோஷன் திக்வெல்ல 24 பந்துகளில் 31 ஓட்டம்  ( 3x4 2x6) - இலங்கை அணி 7.4-41/1

இலங்கை அணி 09 ஓவர்களில் 50 ஓட்டங்களைக் கடந்தது. முதலாவது பவர்பிளே முடிவில் பத்து ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ஓட்டங்கள்.

இரண்டாவது பவர்பிளே 10.01 - 40.0 ஓவர்கள்.

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 90 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகள். குணதிலக்க 19, தரங்க 09 ஓட்டங்கள்.

23.5 ஓவர்களில் இலங்கை அணி 100 ஓட்டங்களைக் கடந்தது. 23.3 வது ஓவரில் மென்டிஸ் 19 ஓட்டங்களுடனும் 28.3வது ஓவரில் மெத்தியூஸ் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி 40 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள்.

மூன்றாவதும் இறுதியுமான பவர்பிளே 40.1 - 50.0 ஓவர்கள்.

இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. சிறிவர்தன 58, கப்புகெதர 40, மற்றும் தனஞ்செய 09 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர். சமீர 06 மற்றும் விஷ்வா பெர்ணான்டோ 03 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். பும்ரா நான்கு விக்கெட்டுகளையும் சஹல் இரண்டு விக்கெட்டுகளையும் பாண்டியா மற்றும் ஆக்ஸர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சற்றேறக்குறைய முதலாவது போட்டியை ஒத்த ஓட்டங்களையே இரண்டாவது போட்டியிலும் பெற்றுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இது இலகுவாகத் துரத்தியடிக்கக் கூடிய இலக்குதான்.



இந்திய அணி துடுப்பாட்டம் :

மழை காரணமாக போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன் டக்வர்த் லூவிஸ் முறையில் இந்திய அணிக்கு 231 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா முதலாவது பவர்பிளேயில் (0.1 ஓவர் - 10.0 ஓவர்) 68 ஓட்டங்களை பெற்றது. 27 ஓவர்களில் 07 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை இந்திய அணி கடந்தது.

இலங்கைக்கு எதிரான எட்டாவது விக்கெட்டுக்கான அதி கூடிய இணைப்பாட்டம் தோனி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கிடையில் பகிரப்பட்டது.

இந்தியா துடுப்பாட்டம் : 231 / 07 - 44.2 ஓவர்கள்.

ரோஹித் ஷர்மா : 54 ( 45 - 5x4 3x6 )

ஷிக்கர் தவான் : 49 ( 50 - 6x4 1x6 )

லோகேஷ் ராகுல் : 04 ( 06 )

கேதர் ஜாதவ் : 01 ( 03 )

விராட் கோலி : 04 ( 02 )

தோனி : 45 ( 68 - 1x4 * ஆட்டமிழப்பின்றி ) 

ஹர்திக் பாண்டியா : 00 ( 03 )

ஆக்ஸர் பட்டேல் : 06 ( 09 )

புவனேஷ்வர் குமார் :  53 ( 80 - 4x4 1x6 - * ஆட்டமிழப்பின்றி )

விக்கெட் வீழ்ச்சி :

109 - 01 - ரோஹித் ஷர்மா - 15.3
113 - 02 - ஷிக்கர் தவான் - 16.3
114 - 03 -  கேதர் ஜாதவ் - 17.1
118 - 04 -  விராட் கோலி - 17.3
119 - 05 -  லோகேஷ் ராகுல் - 17.5
121 - 06 -  ஹர்திக் பாண்டியா - 19.3
131 - 07 -  ஆக்ஸர் பட்டேல் - 21.5



இந்திய அணி 03 விக்கெட்டுகளால் தனது வெற்றியைப் பதிவு செய்தது.

புவனேஷ்வர் குமார் தனது கன்னி அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார். எட்டாவது விக்கெட்டில் தனி நபர் ஒருவர் இலங்கை அணிக்கெதிராகப் பெற்றுக் கொண்டுள்ள அதி கூடிய ஓட்டப் பரிதியும் இதுவாகும். ஷிக்கர் தவான் மற்றும் தோனி ஆகியோர் மயிரிழையில் அரைச்சதத்தை தவற விட்டனர். இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த போதிலும் தோனி அமைதியாக சூழ்நிலையைக் கையாண்டு வெற்றிக்கு வித்திட்டார். இந்திய அணி 230 ஓட்டங்களை பெற்ற போது இன்னும் ஒரு ஓட்டமே தேவைப்பட்ட நிலையில் தோனியின் துடுப்புக்கு அதிக சிரமம் வைக்காமல் இலங்கை அணி உதிரி ஓட்டம் ஒன்றை வழங்கி வெற்றியைப் பரிசளித்தது. இலங்கை அணிக்கு ஆறுதலாக ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அகில தனஞ்சய தேர்வானார். நேற்றைய தினமே ( 23/08/2017) அகில தனஞ்சய வின் திருமணம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

கடந்த போட்டியை விட இப்போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகியன மேம்பட்டிருந்தது. ஆனால் துடுப்பாட்டம் இன்னும் அப்படியே உள்ளது. இலங்கை அணிக்கு துடுப்பாட்டமும் சிறப்பாகக் கைகொடுக்கும் பட்சத்தில் உலகக் கிண்ணப் போட்டிக்கு இலகுவில் தேர்வு பெற முடியும்.

இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி 27 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளது. ஆகவே மீண்டும் களத்தில் சந்திப்போம்!

இலங்கை எதிர் இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி - வெற்றி யாருக்கு?

ஆகஸ்ட் 24-ம் தேதி நாளை இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது. முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை அடுத்து இலங்கை ரசிகர்கள் வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேற விடாமல் சிறிது நேரம் தடுத்து நிறுத்தி தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். காரணம் ஆரம்பத் துடுப்பாட்டம் குறிப்பிடத்தக்க அளவு காணப்பட்ட போதிலும் மத்திய மற்றும் பின் வரிசை வீரர்கள் சோபிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இலங்கை அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு இரண்டாவது போட்டியிலேனும் பிரகாசிக்குமா என்பது கேள்விக்குறியே.



2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி இடம்பெறவுள்ளது. இதில் பங்கு பெறும் அணிகளைத் தேர்வு செய்யும் காலகட்டத்தில் ஒருவருட காலப் பகுதிக்குள் முதல் ஏழு இடங்களைப் பெறும் அணிகளுடன் போட்டியை நடத்தும் நாடும் நேரடியாகத் தேர்வு பெறும். 30.09.2017 அன்று சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுத்தலின் படி குறிப்பிட்ட தரவரிசைப் பட்டியலுக்குள் இடம்பெறும் அணிகளே உலகக் கிண்ணத்துக்குத் தேர்வாகும். ஏற்கனவே ஏழு அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் எட்டாவது இடத்தைப் பிடிக்கும் அணி உலகக் கிண்ணத்துக்கு தேர்வாகவுள்ளது. இலங்கை அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இதற்கான போட்டியில் உள்ளன. 



இலங்கை எட்டாம் இடத்திலும் மே.இ.தீவுகள் ஒன்பதாம் இடத்திலும் உள்ளன. இலங்கை இத்தொடரின் எல்லாப் போட்டிகளிலும் தோற்று மே.இ.தீவுகள் இங்கிலாந்துக்கெதிரான எல்லாப் போட்டிகளிலும் வென்றால் மே.இ.தீவுகள் உலகக் கிண்ணத்துக்கு நேரடித் தகுதி பெறும். இலங்கை இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றிபெற்றாலே உலகக் கிண்ணத்துக்கான நேரடித் தகுதி கிடைத்துவிடும். உலகக் கிண்ணத்தில் பத்து அணிகள் பங்குபற்றவுள்ளன. ஏழு அணிகள் தரவரிசைப் பட்டியலில் இருந்தும் ஒரு அணி போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையிலும் மிகுதி இரண்டு அணிகள் 2018 இல் நடைபெறவுள்ள தகுதிகாண் போட்டிகளில் இருந்தும் தேர்வாகும். 

இலங்கை அணி கிடைத்துள்ள வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது தவறவிடுமா என்பது நாளை தெரியவரும். இலங்கை அணியின் துடுப்பாட்டம் ஓரளவுக்கு பலமுள்ளதாக இருந்தாலும் பந்து வீச்சு பலவீனமானதாகவே உள்ளது. விக்கெட்டுகளைக் கைப்பற்றாவிட்டாலும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். களத்தடுப்பிலும் பல்வேறு குறைகள் காணப்படுகின்றன. முதலாவது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. அணியில் காணப்படும் சிறுசிறு குறைகளைத் திருத்திக் கொண்டால் வெற்றி நிச்சயமே.

இலங்கை ( எதிர்பார்க்கப்படும் ) அணி :

01. நிரோஷன் திக்வெல்ல ( விக்கெட் காப்பாளர் )
02. தனுஷ்க குணதிலக்க 
03. குஷல் மெண்டிஸ் 
04. உபுல் தரங்க ( தலைவர் )
05. அஞ்சலோ மெத்யூஸ் 
06. சாமர கப்புகெதர 
07. மிலிந்த சிறிவர்தன 
08. வணிந்து ஹசரங்க 
09. அகில தனஞ்சய 
10. லசித் மலிங்க 
11. விஷ்வா பெர்னாண்டோ 

இந்தியா ( எதிர்பார்க்கப்படும் ) அணி :

01.ரோஹித் ஷர்மா 
02. ஷிக்கர் தவான் 
03. விராட் கோலி ( தலைவர் )
04. கே எல் ராகுல் 
05. மகேந்திர சிங் தோனி ( விக்கெட் காப்பாளர் )
06. கேதர் ஜாதவ் 
07. ஹர்திக் பாண்டியா 
08. ஆக்ஸர் பட்டேல் 
09. யூஷ்வேந்திர சஹல் 
10. புவனேஸ்வர் குமார் 
11. ஜஸ்பிரிட் பும்ரா 

அணி விபரங்களில் மாற்றம் இருக்கலாம். ஆனால் வெற்றிக் கனவில் மாற்றம் இருக்காது என்று நம்புவோம். தொடரை வெல்ல வேண்டும் என்பதை விடவும் உலகக் கிண்ணப் போட்டிக்கேனும் இலங்கை அணி நேரடித் தகுதி பெற்றுவிட வேண்டும் என்பதே ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

Wednesday, 23 August 2017

களவு போன கனவுகள் - 03



அருமை வளநாடே !
ஆற்றல்சார் அருமைந்தர் வாழ்ந்திருந்த
அருமை வளநாடே ! உன்
அழகனைத்தும் இன்றேனோ
அடகு வைக்கப் பட்டனவே !
சுதந்திரமாய் தொழில் புரிந்து
சோம்பலின்றி வாழ்ந்திருந்த
மக்களெங்கே ?
மலைபோன்ற மனங்களிங்கு
ஏனின்று
மடுவாகி மாற்றுருக்
கொண்டனவோ ?

ஆத்திரங்களின்றி
அழகாய் தொழில் புரிந்த நின்மக்கள்,
அதிகார வர்க்கத்தின்
அடக்குமுறை ஆட்சிக்கு அடிபணிந்து,
ஏனின்று,
‘அடிமைச் சிறுமதியில்’
அல்லல் படவேண்டும் ?
பொன் கொழித்து வந்தவுந்தன் மடியினிலே
ஏனின்று
மண்கூடத் தன் மமதையிழந்து நிற்கிறது ?
நாளின் நிழலுருவை
நாளும் காட்டிவந்த
நல்லாற்றுக் கின்றிங்கே அழகில்லை !
பாலைவனம் போலே
பாழாகி விட்ட உன் நிலத்தினிலே
பல்வேறு விதமான
ஏக்கக் குரல்களின் எதிரொலிகள் !
நெல் வளர்ந்து நீர்கட்டி
நின்ற விடமெல்லாம் கோரைப்
புல்வெளியாய் மாறிவிட்ட படியாலோ
பாவம் உன்மக்கள்
படியிறங்கிச் செல்கின்றார் ?

தனிப்பட்டோர் கரத்தினிலே
தனம் சேர்ந்த காரணத்தால்,
தாழ்வுற்ற நின்மக்கள்
தளர்வுற்றுத் தவிக்கின்றார் !
’இளவரசு’ வல்லரசாய் மாறும்!
பின் மறையும் ! – எனில்
இத்தகைய
உழைப்பாளர் கூட்டம் இனி
உருவாக முடியாது !
பதவியிலே பற்றற்று மக்கள்
வாழ்ந்திருந்த காலமொன்று உண்டு !
உழைப்புக் கேற்றதொரு
ஊதியம் கைக்கொண்டு
உண்மைக்குப் புறம்பின்றி
வாழ்ந்திருந்தான் மனிதன் !

அன்று ஆசையில்லை – அதனால்
அழிவும் இல்லை !
அன்று
அறியாமை நிலைத்தாலும்
ஆரோக்கியம் துணையுண்டு !
அளவற்ற பொருளில்லை !
ஆனாலும்
மனம் வளம்கண்டு
வாழ்வாங்கு வாழ்ந்ததனால்
வளர்ச்சி யுண்டு !

காலம் மாறியது !
காசுபணம் சேர்ப்பதிலே
கருத்தும் கூடியது !
வியாபாரம் பெருகியதால்
‘வேண்டாமை’ யென்றொன்றி
வேண்டும் பொருளனைத்தும்
விளைவித்து
வினையுற்றான் மனிதன் !
தேவைகள் பெருகியது !
தேடும் வழிகளதன் தன்மையதோ
குறுகியது !
ஆடம்பரம் சேர
அன்புவழி மாறியது !

அருமை வளநாடே !
இனிய பொழுதனைத்தும்
இத்தலத்தில் எமக்களித்த தாயே !
இன்று
இது என்ன கொடுமை ?
பசுமை நிறைந்திருந்த பாதையெலாம்
பாழ்வெளியாய் மாறிவிட்ட பாதகமேன் ?

கடமைவழி சென்றேன் !
காலம் பல கடந்து,
கனவு நிறை வேறுமெனக்
கால்கள் இழுத்த வழியிங்கு வந்தேன் !
அந்தோ !–
என் கனவுகள் அனைத்துமே
களவுபோய் விட்டனவே !

இலவைக் காத்திருந்த
இந்தக் கிளிகாண – இன்னும்
என்னென்ன காட்சிகள்
இங்குண்டோ ?

கவலைத் தோட்டத்தில்
கடவுள் எனக்களித்த
கனிகள் பல உண்டேன் !
தொல்லை தரும்காலம் !
துவண்டு மனம் வேகும் !
மனம் வெந்த போதெல்லாம்
சொந்த நாடதனின்
சொர்க்க நினைவுகளில்
சுகங்கள் கண்டுவந்தேன் !
இன்று,
வெந்த புண்ணதனில் 
வேல்பாய்ச்சி விட்டாயே !
வேட்டையாடும் வீணர்கள்
விரட்டுகின்ற முயலொன்று
வீழ்ந்திறக்கும் வேளையிலே
வீடடையும் நிலைபோலே,
அனுபவத்தின் அளப்பறிய பாடங்களை
அருமைச் சோதரர்க்கு அளிக்க எண்ணி
ஆய்ந்தோய்ந்த காலத்தில்
ஓடி வந்தேன் !
கடற்கரையின் ஈரமணலில்
கால் வரைந்த ஓவியமாய்,
கலைந்து விட்டனவே கனவுகள் !
வாழ்வில் நான் கண்டுவிட்ட
வசந்தங்கள் எத்தனை !!
வசந்தங்கள் மாறி
வாடைவந் தடைகையிலே
வாழ்வின் பயன்காண
வளநாட்டை நாடிவந்தேன் !
கடமைகள் முடிகையில்தான்
கடன்பட்ட நெஞ்சுக்கோர் சாந்தி !
சொந்த நிலத்தினிலே
உழைத்துவந்த உன் மைந்தன்
சோர்வைக் கண்டதில்லை !
வாழ்க்கை அவனுக்கு
என்றும் வசந்தம்தான் !
அதிகார விரட்டலுக்கு
அடிபணியும் நிலை
அவனென்றும் அறியாதது !
அனைத்து வழிகளுமே
அவனது வழிகள்தான் !
ஆக்கவும் அவனேதான் !
அழிக்கவும் அவனேதான் !
சொர்க்கங்கள் சொந்தக்
கையாலே உருவாகும் !


இக்குறுங் கவிதைத் தொடர் கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் படைப்பாகும்.
                                                                                           
                                                                                                                   கனவுகள் தொடரும்....


Popular Posts