Monday, 21 August 2017

உலகக் கிண்ணத்தை நோக்கிய நகர்வு - பின்னடைவை சந்தித்த இலங்கை அணி!

இலங்கை எதிர் இந்திய அணிகளுக்கு இடையிலான மைக்ரோமேக்ஸ் கிண்ண ஒருநாள் போட்டித்தொடர் ஆரம்பமாகியுள்ளது. 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒருநாள் உலகக்கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வு பெற இலங்கை அணி இப்போட்டித் தொடரின் ஐந்து போட்டிகளில் குறைந்த பட்சம் இரண்டு போட்டிகளையேனும் வென்றாக வேண்டிய நிலையில் களமிறங்கியுள்ளது. இலங்கை அணி  மூத்த வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு பெரிதாக சோபிக்கவில்லை. அணி வீரர்களுக்கிடையிலான ஒற்றுமையின்மை, தகுந்த பயிற்சியின்மை என்பவற்றுடன் மிக முக்கியமான காரணமாகிய அணி நிர்வாகம் மற்றும் கிரிக்கெட் சபைக்குள் நிலவும் அரசியல் காரணமாக இலங்கை அணியால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிரகாசிக்க முடியவில்லை. இலங்கை அணி சில இடங்களில் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்தாலும் அதற்குப் போதிய ஆதரவு உரிய தரப்பில் இருந்து கிடைப்பதில்லை.முன்னதாக நடைபெற்றிருந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரை மூன்றுக்குப் பூச்சியம் என்னும் கணக்கில் இழந்தது இலங்கை அணி. இதனையடுத்து ஒருநாள் போட்டித் தொடருக்காக சில மாற்றங்கள் இலங்கை அணியில் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த மாற்றங்கள் முதலாவது போட்டியில் கைகொடுக்கவில்லை. ஆம், ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி ஒன்பது விக்கெட்டுகளால் இந்திய அணியிடம் தோல்வி கண்டுள்ளது.

தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு எப்போதுமே பந்து வீச்சை விட துடுப்பாட்டத்தில் தான் பலம் அதிகம். அதிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் துரத்தி அடிப்பது தான் இலகுவாக இருக்கும். இந்த நிலையில் வலுவற்ற நிலையில் உள்ள இலங்கை அணி தோல்வி அடைந்து விடும் என பலர் எண்ணினார்கள். ஆனால் இலங்கை அணி 216 ஓட்டங்களுக்கு சுருண்டு விழும் என எதிர்பார்த்திருக்கவில்லை. 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பம் சிறப்பாகவே இருந்தது. ஒருகட்டத்தில் 27 ஓவர்களுக்கு 150 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது இலங்கை அணி. ஆனால் மத்திய வரிசை மற்றும் பின்வரிசை வீரர்கள் சோபிக்காததினால் 216 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க நேரிட்டது. இலங்கை அணியில் திக்வெல்ல 64, குஷல் மெண்டிஸ் 36, மெத்தியூஸ் 36 மற்றும் குணதிலக்க 35 ஆகிய ஓட்டங்கள் மட்டுமே குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. ஆறு வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுக்குள்ளேயே சுருட்டப்பட்டனர். அவற்றுள் இருவர் ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் ஆக்ஸர் பட்டேல் மூன்று விக்கெட்டுகளையும் பும்ரா, சஹல் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் இவ்விரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இலங்கை அணி 43.2 ஓவர்களில் 216 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியாக விஷ்வா பெர்ணான்டோ ஓட்டமேதும் பெறாமல்  ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து 217 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணி வெளுத்து விளாசியது என்றே சொல்ல வேண்டும். ஐந்தாவது ஓவரில் இந்திய அணி 23 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ரோகித் ஷர்மா ரன் அவுட் முறை மூலமாக ஆட்டமிழந்தார். இந்திய அணி இழந்த ஒரே ஒரு விக்கெட்டும் இது மட்டுமே. இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் தனிப்பட்ட முறையில் எந்நவொரு விக்கெட்டையும் சரிக்க இந்திய அணி இடம்கொடுக்கவில்லை. 

ரோகித்தின் ஆட்டமிழப்புக்குப் பின் இரண்டாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தவான் மற்றும் விராட் கோலி 143 பந்துகளில் 197 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பதிவு செய்தனர். போட்டியில் தவான் 90 பந்துகளில் 132 ஓட்டங்களையும் கோலி 70 பந்துகளில் 82 ஓட்டங்களையும் குவித்தனர். தவான் 20 நான்கு ஓட்டங்கள் மற்றும் 03 ஆறு ஓட்டங்கள் என 98 ஓட்டங்களை நான்கு மற்றும் ஆறு ஓட்டங்களில் குவித்து அதிரடி காட்டினார். கோலி 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 01 ஆறு ஓட்டங்களைப் பெற்றார். 

28.5 ஓவர்களில் 7.63 என்னும் ஓட்ட விகிதத்தில் 220 ஓட்டங்களைப் பெற்று முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி வாகை சூடியது இந்திய அணி. 
ஆட்ட நாயகன் : ஷிக்கர் தவான்

ஒருநாள் போட்டி அறிமுகம் : விஷ்வா பெர்ணான்டோ

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்குப் பூச்சியம் என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலை மாறுமா? அடுத்தடுத்த போட்டிகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

Popular Posts