Monday, 4 September 2017

அனிதா - சிதையில் சிதைந்த கனவுகள்!

அனிதா
=======

மாணவி அனிதாவின் தற்கொலை பெரும் வருத்தத்துக்கு உரியது. அது தமிழகத்தை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக பெண் குழந்தை உள்ளவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். எளிய பின்னணியில் இருந்து வந்து பெரும் போராட்டங்களுக்கும் நிறைய வெற்றிகளுக்கும் பின் இந்த முடிவுக்கு அவள் வந்திருக்கிறாள். இந்தியாவில் எளிய பின்னணியில், விளிம்பு நிலையில் வாழ்பவர்களுக்கு வாழ்வே போராட்டமாகத்தான் கழிகிறது. தினம்தோறும் சிறு சிறு போர்களை தாண்டித்தான் கடக்க வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஒரு கட்டத்தில் பெரும் ஆயாசம் வந்து விடுகிறது. ஒரு முக்கிய தோல்வி அடுத்து ஒன்றுமே இல்லை எனும் ஆயாசத்தை தந்து விடுகிறது. அப்போது தற்கொலை ஒரு எளிய விடுதலையாக பார்க்கப் பட்டு விடுகிறது.‘காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ளவில்லையா?’, ‘பத்தாவது ஃபெயில் (சித்தியடையாவிட்டால்) ஆனா தற்கொலை செய்து கொள்ளவில்லையா?’ என்றெல்லாம் அனிதாவின் மரணத்தை கண்டனம் செய்பவர்கள் கேட்கிறார்கள். இதில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ‘இதெல்லாம் ஒரு மேட்டரா? (விடயமா)’ என்பது முதல். அடுத்து ‘இது இங்கே தினம் நடப்பதுதான். இந்த அளவுக்கு அலப்பறை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதது!’ என்பது.

இங்கே நிறைய தற்கொலைகள் நிறைய காரணங்களுக்காக நடக்கின்றன. மதுவுக்கு அடிமையாகி அதனை விட முடியாத கழிவிரக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட குடும்பத் தலைவரை எனக்குத் தெரியும். என்னுடன் பத்தாவது படித்த குருபிரசாத் என்னோடும் இதர நண்பர்களோடும்தான் ரிசல்ட் (தேர்வு முடிவு) பேப்பர் வாங்க கடைக்குப் போனான். அதில் செக் பண்ணி (தேடிப் பார்த்து) அவன் நம்பர் இல்லை என்றதும் மிகவும் அமைதியாக, எங்களுடன் பேசாமலேயே வீட்டுக்குப் போனவன் குளியலறையில் கெரஸின் (மண்ணெண்ணெய்) ஊற்றிக் கொண்டான். அவனை பாடையில் முழுக்க மூடித்தான் கொண்டு போனார்கள். அது நடந்து பல மாதங்களுக்கு அது என் தூக்கத்தை நாசம் செய்து கொண்டிருந்தது. நான் பத்தாவது பாஸ் பண்ணியதை (சித்தியெய்தியதை) கொண்டாடவே இல்லை.அதன் பின் நிறைய தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் என் நட்பு, உறவு வட்டத்தில் நடந்து விட்டிருக்கிறது. அதனாலேயே ‘இதெல்லாம் மேட்டரா?’ (விடயமா) என்று கடந்து செல்ல இயலவில்லை. தவிர நீட் ஆதரவாளர்கள் சொல்வது போல இதற்கும் மன உறுதிக்கும் சம்பந்தம் இல்லை. ஓரளவு உளவியல் ரீதியான பிரச்சனைதான் தற்கொலைக்கு தூண்டுகிறது என்றாலும் அதற்கு பெரும் மன உறுதி தேவைப்படுகிறது. உங்கள் வாழ்வையே ஒற்றை விஷயத்தில் நீங்கள் ஒப்படைக்கிறீர்கள். அதைத் தாண்டிய வேறு உங்களிடம் இல்லை என்று மனதை பயிற்றுவிக்கிறீர்கள். அது உங்கள் காதலியோ, பத்தாவது ரிசல்ட்டோ (பெறுபேறோ) , மருத்துவக் கல்லூரி சீட்டோ (அனுமதி) எதுவாகவும் இருக்கலாம்.

தவிர முட்டாள்கள் மட்டுமே தற்கொலை செய்து கொள்வதில்லை. உலக மகா ஜீனியஸ்கள் (அறிஞர்கள்) கூட இதற்கு விதிவிலக்கில்லை. உளவியல் துறையின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட், ஓவியக்கலையில் புரட்சி செய்த வான் காக், கம்பியூட்டரை (கணினி) கண்டுபிடித்த ஆலன் டியூரிங், இலக்கிய ஆளுமைகள் வர்ஜினியா உல்ஃப், ஹெமிங்க்வே, சில்வியா பிளாத், அமெரிக்க இசையின் வேரைப் பிடித்து ஆட்டிய கர்ட் கோபைன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தியாவிலும் ஹிந்தி திரையுலகை அறுபதுகளில் கலக்கிய இயக்குனர் குரு தத் மூன்று முறை தற்கொலைக்கு முயன்று மூன்றாம் தடவை ‘வெற்றி’ பெற்றார். தமிழ்க் கவிஞர் ஆத்மாநாமின் தற்கொலை நாம் எல்லாரும் அறிந்ததே.

இவர்கள் யாரும் தோல்வியாளர்கள் இல்லை. தத்தமது துறையில் உலகையே புரட்டிப் போட்டவர்கள்.

அனிதாவிடம் என்ன மாதிரியான உளவியல் அழுத்தங்கள் இருந்திருந்தது என்பது நமக்கு தெரியாது. அவள் ஒரு வான் காக் ஆகவோ, வர்ஜினியா உல்ஃப் ஆகவோ வளர்ந்திருக்கும் வாய்ப்புகள் இருந்தன. இவர்கள் ஏதோ ஒரு புள்ளியில் அந்த ‘மெல்லிய கோட்டை’ தாண்டி விடுகிறார்கள். சாதாரண ‘ஏதோ படிப்பை முடி, வேலைக்குப் போ, கல்யாணம் பண்ணிக்கொள், குழந்தை பெற்றுக்கொள், பூந்தமல்லியில் வீடு வாங்கு…’ என்கிற வாழ்வு முறை டெம்ப்லேட்டில் (நடைமுறை) இவர்களுக்கு ஒப்புதல் இருப்பதில்லை. அனிதா தன் விளிம்பு நிலை வாழ்க்கைத் தரத்தை கடுமையாக வெறுத்து இருக்கலாம். அதனை மாற்றியே தீருவேன் என்கிற கங்கணம் கட்டி மருத்துவப் படிப்பை அந்த விடுதலைக்கு சாவியாக பாவித்திருக்கலாம். அந்த சாவிக்கான பெரும் போராட்டத்தில் தோல்வியுற்றதும் வந்த பெரும் அதிர்ச்சி அடுத்த மாற்று வாய்ப்புகள் பற்றிய யோசனையே வராமல் போயிருக்கலாம்.

இதுதான் காரணமா என்று எனக்குத் தெரியாது. இதுவாக இருக்கலாம் என்று நான் கருதிக் கொள்கிறேன். அதுதான் அந்த சிறுமியின் மரணத்துக்கு நான் தரும் மரியாதையாக இருக்கும். மரணத்தை, அதுவும் வாழ்வில் போராடி முன்னேறிய ஒரு சிறுமியின் தற்கொலையை கேலி செய்வது, விமர்சிப்பது மோசமான சிந்தனாவாதத்தின் விளைவு. அதனை நாம் செய்ய வேண்டாம் என்று எல்லாரையும் வேண்டிக் கொள்கிறேன்.

கடைசியாக, இந்த தற்கொலை நீட் பற்றிய விவாதத்தை மேலும் நாராசமாக ஆக்கி விட்டிருக்கிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு, மடிந்து இடஒதுக்கீடு, சாதியவாதம், தேசியவாதம் போன்ற பற்பல பரிணாமங்களில் விரிந்து நடந்து கொண்டிருக்கிறது. இது எதிர்பார்த்ததுதான். நீட் பற்றிய பெரிய கருத்தியலை நான் நேற்று வரை உருவாக்கிக் கொள்ளவில்லை. இன்று இது பற்றி நிறைய படித்ததில், சிந்தித்ததில் இது குறித்து ஒரு தெளிவு பிறந்தது. இந்தியா மாதிரி பன்மைக் கலாச்சாரம், மொழிகள், இனக்குழுக்கள் இருக்கும் தேசத்தில், குறிப்பாக பல்வகை பொருளாதார நிலை கொண்ட தேசத்தில் இப்படிப்பட்ட பொதுத் தேர்வு முறை நடைமுறையில் சாத்தியமாகாது என்று நம்புகிறேன். இது பற்றி தனியாக விபரமாக எழுதுகிறேன். இப்போதைக்கு அனிதாவின் மரணம் என்னில் ஏற்படுத்தி இருக்கும் இந்த பாதிப்பு தேசிய அளவில் நிறைய பேரிடம் வந்து, அதுவே நீட் விஷயத்திலும் மாறுதல்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி நடந்தால் பலனடையப் போகும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளின் வெற்றிக்கு தரப்பட்ட விலையாக அனிதாவின் உயிரைக் கருத வேண்டும்.

இறந்த அந்த மாணவியின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

# நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மருத்துவ மாணவி அனிதா இப்போது நம்முடன் இல்லை. ஆனால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் நீட் தேர்வுக்கெதிரான போராட்டத்தை ஒரே புள்ளியில் ஒன்றிணைத்திருக்கிறார். அடுத்த வருடத்துக்குள் இவ்விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். காரணம் அனைத்து படிப்புகளுக்கும் மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவது நாம் அறிந்ததே.

மேலும் இப்பதிவு ஒரு பேஸ்புக் பதிவாகும். ஸ்ரீதர் சுப்பிரமணியம் Sridhar Subramaniam  என்னும் பேஸ்புக் பதிவரின் பக்கத்தில் 'அனிதா' என்னும் தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட பதிவு இது. தற்போதைய சூழ்நிலையில் இப்பதிவு மிக அவசியம் என்பதாலும் சிறப்பான புரிதலோடு எழுதப்பட்டிருக்கிறது என்பதாலும் நமது 'சிகரம்' இணையத்தில் இப்பதிவை வெளியிடுகிறோம். இப்பதிவு சார்ந்த அத்தனை பாராட்டுகளும் ஸ்ரீதர் சுப்பிரமணியம் Sridhar Subramaniam  அவர்களுக்கு மட்டுமே உரித்தாகும். தோழருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!       

#ANITHA-SITHAIYIL-SIDHAINTHA-KANAVUGAL
#ANITHA #NEET #SUICIDE #MBBS #TNGOVT #MODI #PM #PJP #AIADMK #DMK #STALIN #MKSTALIN #JAYALALITHA #DissolveTNGovt

No comments:

Post a Comment

Popular Posts