Saturday, 9 September 2017

கைக்கிளைத் திணை - காதலும் காமமும்...

வாளுடன் களங்கண்டு
வான்புகழ் பெற்றவன்...
போர்க்களமே வாழ்க்கையாய்
பார்போற்ற நின்றவன்...

களிறின் பிளிறலிலும்..
புரவியின் குழம்படியிலும்...
மோகம் கொண்ட
கோமகன் அவன்...

சோழத்தை உயிராய்...
சோழமே மூச்சாய்...
சுவாசித்த இளவரசனிவன்
ஆதித்த கரிகாலன்...

கடை விழியே
களிற்றைச் சாய்க்கும்...
சுழலும் வாளோ
சூரியனை வீழ்த்தும்...

வீரத்தில் மயங்கினேன்...
வீரமகனின் காமத்திற்கேங்கினேன்...
பெண்ணை அணுகாது
மண்ணை மணந்த

மணவாளனை ரசித்தேன்...
மனதினுள் பதித்தேன்...
உதிரமாய் எங்கும்
உருண்டோடச் செய்தேன்...

கண்ணில் நாணேற்றி
கணை தொடுக்கும் அழகனவன்...
தொடுத்த அம்பு
துளைத்தெடுக்க நாளும்

துன்பத்தில் வாடுகிறேன்.,
தேய்ந்து இளைக்கிறேன்...
தேய்பிறை நிலவாய் நானும்...
தேற்றிட வருவானோ ?..

தோகைமயிலாய் அழகுடன்
தோகை விரித்து
கவர்ந்து கொள்வானோ?..
காமத்தைக் கூட்டுவானோ ?..

என்ன நடக்குமென
ஏங்கி நிற்கிறேன்...
கடந்து போகிறான்
காதலை ஏற்கமறுத்து...

அவனின்
இடைவாளாய்ப் பிறந்து
இடையிலேயே இருந்து
இரு கரம் தடவி
இன்புற்றிடும் வரம் வேண்டுமே...

அமரும் புரவியாய்
அவன் தேகம் தாங்கி
அங்கம் வருடி
ஆசையை தீர்த்திட வேண்டுமே...

சுவாசிக்கும் காற்றாகி
சிகையைக் கலைத்து
மேலுடம்பைத் தடவி
மோகத்தை தீர்த்திட்டு

சுகமாய் இதயம் நுழைந்து
உயிர் அணுவின்
ஒவ்வொன்றிலும் உறவாடி
களித்திட வேண்டுமே...குறுவாளாகி ஆடையைக்
கடந்து அந்தரங்கத்தில்
உரசி அளவளாவி
ஆண்மையை அறிந்திட வேண்டுமே...

இல்லையெனில்
அவன் நேசிக்கும்
சோழமாய் மாறி
சுந்தர அழகனின்

மனம் கவர்ந்து...
மாறாது நின்று
மகிழ்ந்து தாங்கி
மண்ணில்படும் பாதத்தை

மலரால் தடவி...
மார்போடு அணைத்து...
அங்குமிங்கும் எங்குமாய்
அவன் என்னை

விசாலப்படுத்த... நானும்
விரிந்து ... பரந்து...
எங்கும் நானாய்...
அவனுள்ளும் நானாய்...

அகண்ட சோழமாய்
அலங்கரத்தோடு நின்றிட
கட்டி அணைப்பானே...
காலம் முடியும் வரை

அவனுக்காக நான்
அவனோடே  வாழ்ந்து...
காதல் துளிர்த்து...
காமம் களித்து...
வாழ்ந்து மகிழ்ந்திட வேண்டுமே...

தவச்செல்வன் விரும்பாமல்
தேகயின்பத்தை அடைவது
தவறென்று அறிவேன் ...
தயக்கம் தான் என்னுள்ளும்

என்ன செய்வேன் நானும்...
ஆழ்மனதின் ஆசையையும்...
பசலை நோயைத் தீர்க்கவும்
வழி தெரியவில்லை எனக்கும்...

முன்னோரின் பழிச்சொல்லை
முகமில்லாமல் ஆக்கவும்...
வீரபாண்டியன் தலையை
வீழ்த்தி நின்றவன்...

வீறுகொண்ட வேங்கையாய்
வெறியேறி நின்றவன்...
சோழத்தின் உயரத்தை
இமயம் முட்ட நினைத்தவன்...

இவன்
முகம் பார்த்து முத்தமிட்டு
முகிலெனயிருக்கும் கேசத்தை
விரல்களால் வருடி
விதிப்பயன் அடைவேன்...

விண்மீன் விழியை
இமையால் மூடி
இதழ் முத்தம் பதித்து...
உருப்பெறும் காமத்தை

உள்ளார உணர்த்தி...
அவன் உயிரை
என்னுள் நிறைத்து...
என்னுயிரை அவனுள்

உணர்த்திட விளைகிறேன்...
இருந்தும் முடியாமல் தவிக்கிறேன்
நீக்கமற நிறையுமா - என்
காதலும் அதனூடே காமமும்..

கைக்கிளை திணை என்பது ஒருதலைக் காதலையும், காமத்தையும் கூறும் திணை.. இதை தொல்காப்பியர் ஒழுக்கத்திணையில் சேர்க்கவில்லை..

- இப்படைப்பு கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும் -

No comments:

Post a Comment

Popular Posts