Friday, 8 September 2017

களவு போன கனவுகள் - 05பூஞ்சோலை சிரித்திருந்த புழலோரம் ,,,,
இன்று
புதர்க் காடாய் மாறிவிட்ட கோலம் !
பூஞ்சோலைக் கருகிருந்த குடிலிதுதான் !

இதில்தான்
பூப்போன்ற மனம்கொண்ட பாதிரியார் ஒருவர்
வசித்து வந்தார் ! – அவர்
பாவத்தின் சுமைகொண்ட
மக்களது மனம் தேற
மந்திரங்கள் சொல்லியவர் !
அவர் வீட்டுப்
படியேறி வந்துவிட்டுப்
பரிகாரம் தேடிக்கொண்ட
பக்தர்கள் எத்தனை பேர் !
நலிவுகளின் பிறப்பிடமாம்
நகரத்தை விட்டிங்கே வந்து
நன்மொழிகள்  சொல்லிநின்ற நல்ல மனம் !
பணத்திற்காய் பச்சோந்தி வேடமவர்
போட்டதில்லை !
பாழுங் கடுஞ்சொற்கள் சொன்னதில்லை !
அன்பென்னும் ஆன்மா
வாழ்ந்துவந்த வீடு !- அவர்
அனைவருக்கும் பொதுச் சொத்து !
அன்றாடம்
பிச்சைக்கு வருகின்ற கிழவன்தான்
அவரது
நிரந்தர விருந்தாளி !

காசிருந்த காலத்தில்
கண்திறக்க மறந்திருந்த கயவர்கள்,
காலம் மாறியதும்
மமதை மறந்தவர்கள்,
தாய்நாட்டுத் திருப்பணியில்
தன் அங்கம் இழந்துநின்ற
போர்வீரன், - இன்ன பலர்
தம் காயங்கள் கலைய,
கவலைகள் மறக்க,
தேடிவந்தது இந்த
தேவதூதனின் திருவடியைத் தான் !
துணை தேடி வந்தவரின்
தகுதி, தரம் ஒன்றும் பொருட்டின்றி ,
அன்பாய் ஒரு வார்த்தை,
பரிவாய் ஒரு பார்வை ,
நலியும் உடல்தேற நல்லுணவு ,
அனைத்தும் அளித்துத்
தருமத்தின் பெயர்காத்த
பேரறிஞர் !
செய்பாவ முணர்ந்துவிட்ட சீடர்களின்
சிறுதுன்பம் தீர்ப்பதுவே இவர்கடமை !
தாய்ப்பறவை குஞ்சுகளைச்
சரியான முறையினிலே
பறக்கச் செயும்வரையில்
பரிதவிப் பதுபோலே,
அடுத்துள்ளோர் நலம்வேண்டி
அனவரதம் தேவனிடம்
முறையிட்டார் !
பாதகம் செய்துவந்த பாழ்மனங்கள்
தேவனிடம்
பாவமன்னிப்புப் பெறும்வரையில்
இவர்
அனலிட்ட மெழுகாக,
அலையிட்ட துரும்பாகத்
துடித்து வருந்திடுவார் ;
துயர் தீர்க்கச் சென்றிடுவார் !மேகங்கள் சூழ்ந்தாலும் மேருமலை உச்சியது
தன் தனித் தன்மையிழக்காமல்
நிற்பது போல்,
பூவுலகத் துயரங்கள் சூழ்ந்தாலும்
அன்னாரின் புத்தியென்றும்
புன்மைகள் சேராத
தேவனவன் திருப்பாதம் தனிலேதான்
நிலைத்திருக்கும் !
மாதாகோயிலதன் மேன்மை அனத்தையுமே
மணியான வார்த்தைகளால் உயர்த்திட்டார் !
நேர்மை எனும் நெறியை
நேற்றைய குழந்தைவரை போதித்தார் !
மழலைகள் அவர்மூலம் கற்றுவிட்ட வேதத்தைக்
கடைக்காலம் வரையினிலே மறக்காமல்
மனங்கொள்ளும் வகையினிலே போதித்தார் !
அவரது சிரிப்பினிலே
அன்புத் தாயின் அரவணைப் பைத்தான்
கண்டனர் அனைவருமே !
அவர்களுக்காகத்தான் அவர் வாழ்ந்தார் ;
அவர் சிரித்தார் ; அல்லும் பகலும் பிரார்த்தித்தார் !
தோத்திரங்கள் சொல்லி
அவர் துயர்தீர்க்க முயற்சித்தார் !
சிங்கம் வாழ்ந்திருந்த குகையின்று
சிறுநரியின் உறைவிடமாய்
ஆனதென்ன கொடுமை !

இக்குறுங் கவிதைத் தொடர் கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் படைப்பாகும்.
கனவுகள் தொடரும்....

No comments:

Post a Comment

Popular Posts