தேன் மழை!

தொகையறா

ஓடுங்கால் ஓடி முகிலும் உருகி
மழை வீசுங்கால் ஆட வந்தேன்
அருபரனே!
தூறுங்கால் எடுத்துப் பொழிந்திடுவாய் இறைவா
உன் பாலமுதை குடித்த நான் ஆடும்படி

        பல்லவி

சலசலசல சலசலவென ஓடிவா-
மலைமேடு காடு பள்ளமாடி ஒடிவா...

சலசலசல சலசலவென ஓடிவா-
 மலைமேடு காடு பள்ளமாடி ஒடிவா...

        அநுபல்லவி

வருண தேவனே வாடும் போதிலே
வாழ்த்திடும் தேன் மழையே!
நீலகண்டனின் முடியினின் றிறங்கியே
விரைந்திடு பாலமுதே!

வருண தேவனே வாடும் போதிலே
வாழ்த்திடும் தேன் மழையே!
நீலகண்டனின் முடியினின் றிறங்கியே
விரைந்திடு பாலமுதே!

மின்னல் ஒளிகளொடு மேக உரசல்களில்
ஒலித்திடும் பேரிடியே!
இன்னல் தீர்ந்துவிட இன்பம் பெருகிவர
இறங்கிடு வான் மழையே!
        சரணங்கள்

மின்னல் ஒளி வானைக் கிழிக்குது
மேகக் குலமகள் வாசல் திறக்குது
முத்துக் குலம் பட்டுத் தெறிக்குதே அழகாக...

முத்தில் மழை சடசடசட வென
மண்ணிலது  சலசலசல வென
வெள்ள மது சரசரசர வென
ஓடிடுமே அழகாக...

பொன்னி நதி பாய்ந்திடு மழகினில்
அமுதமழை பொழிந்திட மனிதர்கள்
சொந்தங்களும் ஊரினில்கூடி உறவாட....

கொஞ்சும் கிளி கிக்கிக் கிகியென
கூவும் குயில் குக்குக் கூகூவென
ஆடும் பதம் திமிதிமி திமியென ஜதிசேர்க்க...

இன்பத்தை நீ தந்து
துன்பத்தை போக்கிட
புவிமீது நடமாடவா..
வறட்சிகள் நீக்கிட
வறுமைகள் போக்கிட
வானவ ருடன் சேர்ந்து வா...

யாமியன் தகப்பனே
சோமனே கேசனே
மகரத்தின் மீதேறி வா..
சோமபா னம்எடுத்து
ஆறுநதி ஓடையெலாம்
அழகாகச் சதிராட வா...

சிரிப்புக்குள் பெருவெள்ளம்
வரச் செய்த நீ
துளிநீரில் இன்பங்கள்
தரச் செய்த நீ..

சிரிப்புக்குள் பெருவெள்ளம்
வரச் செய்த நீ
துளிநீரில் இன்பங்கள்
தரச் செய்த நீ...

யுகத்திற்குப் புதுவாழ்வு
அருள் செய்த நீ
ஆனந்தத் தாண்டவம் நீயாட வா..

யுகத்திற்க்குப் புதுவாழ்வு
அருள் செய்த நீ
ஆனந்தத் தாண்டவம் நீயாட வா..

உயிருக்குள் உணர்வே...
உலகுக்கு உயிரே...
கருவுக்குள் அணுவே...
கார்முகில் அமுதே...

ஓடிவா சதிராடவா
விளையாடிவா நடமா டிவா...

ஓடிவா சதிராடவா
விளையாடிவா நடமா டிவா...

நேமி வாரி மாலி காரி
தேவ லோக வாசி யோடு...

நேமி வாரி மாலி காரி
தேவ லோக வாசி யோடு...

வறுமை நீங்க..
வளமை ஓங்க..
வம்சம் செழிக்க..
அம்சம் கொழிக்க...

சலசலசல சலசலவென ஒடிவா-
மலைமேடு காடு பள்ளமாடி ஓடிவா...

இக்கவிதை கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும்.

Comments