Tuesday, 28 November 2017

தமிழின் அழகு!

உழவில் செழிக்கும் கழனியழகு
உழைப்பில் வரும் வியர்வையழகு

தாழ்ப்பாள் இல்லா வானழகு
வான் தரும் மழையழகு

மழலை முகத்தின் சிரிப்பழகுகாதலைச் சொல்லும் விழியழகு
விழி தரும் கவியழகு

கவி தொடுக்கும் மொழியழகு
மொழியில் சிறந்த தமிழ் அழகு
தமிழின் மகுடம் "ழ"கரம் அழகு!

- இப்பதிவு கவிஞர் சதீஷ் விவேகா அவர்களின் படைப்பாகும்- 

 தமிழின் அழகு! - சதீஷ் விவேகா - சிகரம் 

இன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 01

வணக்கம் நண்பர்களே!

இந்தப்பதிவு என் நீண்ட நெடுநாள் ஆசை. இதனைப்பற்றி விரிவாக, தெளிவாக, அழகாக பேசவேண்டும் என்பது என் விருப்பம். இனிவரும் நாட்களில் இந்தத் தலைப்பில் நான் தரும் பதிவுகள் அனைத்திற்கும் நண்பர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் விவாதங்களையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன். விவாதமற்ற பதிவு கிணற்றில் இட்ட கல் என்பது என் கருத்து. இவ்வளவு பீடிகையுடன் துவங்குகிறது என்னவாக இருக்கும்? இதுவரை படிப்பவர்களின் மனதில் இந்த வினா எழுந்திருக்கும். இனியும் தாமதிப்பது தவறு என்பதால் கூறிவிடுகிறேன்.நான் பெரிதும் விரும்பும், இன்று என்னை நானே புடம்பார்க்க செய்யும், ஒவ்வொரு நாளும் எனக்கு புதியதாய் ஒன்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும், அமுதினும் இனிய, என்றும் இளமை மாறா, தினம் தினம் புதுப்பொலிவுடன் வளர்ந்து கொண்டிருக்கும் எம் மொழியாம் “தமிழ்மொழி” பற்றிய பதிவு தான் இனிவரும் நாட்களில் நான் தொடரவிருக்கிறேன்.

இவ்வளவு சிறப்பாக பேச, தினமும் ஓய்வின்றி பேச அப்படி என்ன இருக்கப்போகிறது தமிழ்மொழியில்? தமிழக எல்லையை தாண்டினால் மதிப்பற்ற ஓர் மொழி இது. நுனிநாக்கு ஆங்கிலம் உலகம் முழுவதும் சுற்றி வர உபயோகப்படுகிறது. வடநாட்டு ஹிந்தி தெரிந்து இருந்தால் மத்திய அரசாங்கத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலையையும், இந்தியாவில் எங்கு சென்றாலும் தடையின்றி அனைவருடனும் பேச தொடர்புகொள்ள ஏற்ற மொழி.

இப்படிப்பட்ட எந்த சிறப்புமற்ற, பயனுமற்ற தமிழ்மொழியைப் பற்றி பேச என்ன இருக்கிறது? என எண்ணம் கொண்ட நண்பர்கள் நிச்சயம் இப்பதிவை தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

“நான் ஏன் இம்மொழியை பெரிதும் விரும்பிகிறேன்?” என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்ட கேள்வி இது. நான் படித்தது தமிழ்வழி கல்வி. பள்ளிநாட்களில் என்னுடன் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழியை பிழையுடன் எழுதுவார்கள். நான் பெரும்பாலும் பிழையுடன் எழுதமாட்டேன். அந்நாட்களில் எனக்கு ஒரு கர்வம் எனக்கு தமிழ் நன்றாக தெரியும் என்று!   (என் அறியா வயதின் மாபெரும் சாதனை இது) அதன் பின், மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே சித்திர கதைகள், சிறுகதைகள் இவற்றை எல்லாம் படிப்பேன். பெரும்பாலும் இவை அனைத்தும் தேவதைக் கதைகள், மாயவிநோத கதைகள். இவற்றைப் படிக்கும் போது என் மனதில் கற்பனை உருவங்கள் தோன்றி என் அகக்கண்ணில் அக்கதையை கண்டு இரசிப்பேன். ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் அப்பாவுடன் நூலகம் சென்று எனக்கென தனியாக பயனர் அட்டை பெற்றுக்கொண்டேன். மாதத்தில் இருமுறை நூலகத்தில் பாதிநாளாவது செலவழிப்பேன். மறக்கமுடியா தருணம் அது!!!

தமிழ்வழிக்கல்வி என்பதால் பெரும்பாலும் ஆங்கில புத்தகங்களை படித்ததில்லை.. (எட்டாம் வகுப்பிற்கு பிறகு) பாடத்தில் இருக்கும் non detailed கதைகளைப் படித்தபின் ஆங்கில புத்தகங்களையும் தேடிப்படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டேன். என்னதான் ஆங்கில புத்தகங்களைப் படித்தாலும் தமிழ்மொழியில் கூறப்பட்டிருக்கும் கதைகள், கற்பனைகள் ஏற்படுத்திய தாக்கத்தை எனக்கு ஆங்கிலம் தரவில்லை. சரி, என் சுயபுராணத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
  
தமிழ்மொழி என்றாலே இலக்கணமும் இலக்கியமும் தான், நம் மனதில் நிழலாடும். இன்றும் பலருக்கு இலக்கணம் என்றால் கடினத்திலும் கடினம். ஏன் இத்தகைய எண்ணம்? இலக்கியம் என்றால் அது ஒரு ஆழ்கடல். அதில் உள்ள தொகுதிகள் அதிகம். திருக்குறள், வாழ்த்துப்பாடல், மூதுரை, அவ்வையார் இவற்றை தெரிந்து வைத்திருப்பதே பெரும்பாடு என்ற எண்ணம் இத்தலைமுறை பிள்ளைகளுக்கு. இதனை மாற்றலாம், இந்த எண்ணத்தை மாற்றி இலக்கணம் மற்றும் இலக்கியத்தின் சுவையை ஊட்டினால், மொழிமீதான காதல் ஊற்று பெருக்கெடுக்கும். அதனால் என்ன பயன்? என நினைப்பவர்களுக்கு இப்பதிவின் மூன்றாம் பத்தியில் நான் கூறியுள்ள ஆதங்கம் மாற வாய்ப்புள்ளது. என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். முடிந்தவரை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இனிவரும் நாட்களில் இலக்கியம், இலக்கணம் என்று பேசுவோம்... நன்றி நண்பர்களே!!!

இப்பதிவு பதிவர் பௌசியா இக்பால் அவர்களின் படைப்பாகும்.

இன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 01 - பௌசியா இக்பால் - சிகரம் 

#சங்கஇலக்கியம் #இலக்கியம் #ஆய்வுக்கட்டுரை

Sunday, 26 November 2017

இனியொருவன்...மீண்டெழும் கடலே
முகிலற்ற வானே
முடிந்துவிடா வான்விளக்கே
எம் ஆலகண்டனுக்கு நன்றிகளை 
சேர்ப்பியுங்கள் இந்நாளிலும்.
எழுத்தறிவித்தாய்
எம் சுயம் இயற்றிட்டாய்
கொடிகொண்டு படைகாத்து 
பாடல்பெற்ற என் மண் 
அமைத்திட்டாய்
கரிகாலா 
அத்தனையும் துரோகமாகி
தூசுஎன போகையில் துயர் 
தாங்க என்செய்தாய்_இனி
யார் வந்து போனாலும் 
எதுசொல்லிப்போனாலும்
உள் ஆடும் ஒரு தீபம் நீயல்லோ_எமக்கு
உனை போல இனியொருவன் 
இல்லையெல்லோ...

இக்கவிதை அதிசயா (லக்ஷி நாகேஸ்வரன்) அவர்கள் பேஸ்புக்கில் வெளியிட்ட படைப்பாகும்.

இனியொருவன் - அதிசயா - பேஸ்புக் பதிவு 

-அதிசயா 

இனியொருவன் - அதிசயா - சிகரம் 

தமிழின் சுவை!

நாம் காய் கறிகளின் பக்கம் போய் வரலாமே! சேட்டைக்காரப் புலவர்களுக்கும் வேட்டைக்காடாகத் திகழ்வது நம் செந்தமிழே. புலவர்களின் நையாண்டி, கேலி, பொருள் நிறை வார்த்தை நயங்களை அனுபவிக்க நாம் தனிப் பாடல்களின் பக்கம் போய் வரலாம். இங்கு ஒரு பாடலை அனுபவிப்போம். (வழக்கம்போல இதை இயற்றியவர் பெயர் தெரியவில்லை!).
"கரிக்காய் பொறித்தாள் கன்னிக்காயை தீய்த்தாள்
பரிக்காயை பச்சடி பண்ணினாள் - உருக்கம் உள்ள
அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தை
மகள் உப்புக்காண் சீச்சீ உமி."

கரி என்றால் யானை; யானைக்கு இன்னொரு பெயர் 'அத்தி'. எனவே அத்திக்காய் பொறியல் செய்தாள். கன்னி என்பதற்கு இன்னொரு வார்த்தை 'பாவை'; தீய்த்தாள் என்றால் வறுத்தாள். அதாவது பாவைக்காய் வறுவல் செய்தாள். பரி என்றால் குதிரை; அதற்கு இன்னொரு பெயர் 'மா'. எனவே மாங்காயைப் பச்சடி செய்தாள். அப்பை என்றால் கொடிவகை, 'அப்பைக்காய் என்றால் படர்கொடியில் காய்க்கும் அவரை. அவரைக்காயை நெய் துவட்டலாக சமைத்திருந்தாள்.(சிலர் அப்பைக்காய் எனில் கத்தரிக்காய் என்று பொருள் கொள்வர்.) அத்தை மகள் இத்தனை விதமாய் சமைத்தாலும் எல்லாவற்றிலும் உப்பு அதிகம் கரித்ததால் உமிழ்ந்துவிட்டேன்.
 
 
 
இப்போது 'கொசுறுச் செய்தி'க்கு வருவோம். கண்ணதாசனுக்கு இப்பாடல் மிகப்பிடித்துப்போய் கற்பனைத் தேர் ஏறிப்பறக்கிறார். தனிப்பாடல் புலவர் 4 காய்களைத்தான் சொன்னார். ஆனால் நம் கவியரசு 29 காய்களைச் சொல்லிப் பாடுகிறார்.
"அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ...."

தமிழும், தமிழர்களும் உள்ளவரை வாழ உள்ள பாடல். கவியரசின் மணிமகுடத்தின் 'வைரம்'!
 
- இப்பதிவு காளிதாசன் அவர்களால் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட பதிவு ஆகும் - 
 
 

Friday, 24 November 2017

திரையிசைப் பாடல்களில் இலக்கணம்

திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம்.

🖌தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...

*🖌அடுக்குத்தொடர்:
ஓடிஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்.

*🖌இரட்டைக்கிளவி:
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.

*🖌சினைப்பெயர்:
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

*🖌பொருட்பெயர்:
கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல
*🖌இடப்பெயர்:
வீடு வரை உறவு வீதி வரை மனைவி!

*🖌காலப்பெயர்:
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

*🖌குணம் அல்லது பண்புப்பெயர்:
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

*🖌தொழில் பெயர்:
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

*🖌இறந்த காலப் பெயரெச்சம்:
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

*🖌எதிர்காலப் பெயரெச்சம்:
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

*🖌இடவாகுபெயர்:
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

*🖌எதிர்மறைப் பெயரெச்சம்:
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

*🖌குறிப்புப் பெயரெச்சம்:
அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!

*🖌ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

*🖌வன்றொடர்க் குற்றியலுகரம்:
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

*🖌நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:
நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

*🖌உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்

*🖌இரண்டாம் வேற்றுமை உருபு:
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.

*🖌மூன்றாம் வேற்றுமை உருபு:
உன்னால் முடியும் தம்பி! தம்பி!!

*🖌பெயர்ப் பயனிலை:
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....

பதிவைத் தொகுத்தளித்தவர் பாலாஜி.
நன்றி 

திரையிசைப் பாடல்களில் இலக்கணம் - பாலாஜி - சிகரம்

எங்கள் தமிழ்மொழி வாழியவே!

வாழ்ந்தாலும் தமிழுக்கும் 
தமிழர்க்கும் வாழ்வேன்
வளைந்தாலும் நெளிந்தாலும் 
தமிழ்பொருட்டே ஆவேன்

தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் 
தமிழ்மேல்தான் வீழ்வேன்
தனியேனாய் நின்றேனும் 
என்கொள்கை மாறேன்

சூழ்ந்தாலும் தமிழ்சுற்றம் 
சூழ்ந்துரிமை கேட்பேன்
சூழ்ச்சியினால் எனது 
உடலை இருகூறாய்
போழ்ந்தாலும் சிதைத்தாலும் 
முடிவந்த முடிவேஎமை புதைத்தாலும் எரித்தாலும்
எம் அணுக்களெலாம் அதுவே

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழிஎன்றென்றும் வாழியவே
வானமளந்ததனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே

முன்னர் நிகழ்ந்ததனைத்தும் 
உணர்ந்திடும் சூழ்கலைவாணர்களும்
இவள் என்றுபிறந்தனள் என்றறியாத
இயல்பினளாம் எங்கள் தாய்


கவி இயற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்; தொகுத்தளித்தவர் அகரம் பார்த்திபன்

எங்கள் தமிழ்மொழி வாழியவே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Wednesday, 22 November 2017

அம்மா என்றொரு அற்புதம் !

அம்மா' என்றொரு
அற்புதக் களஞ்சியம் ! இன்று நான்
அலறி அழைத்தாலும் வாராத, மனதில்
ஆறாத காயமாய்
அருகி நின்றுவிட்ட நினைவுப் பெட்டகம் !
காலச் சுவடுகளாய் நிலைத்து
நின்றுவிட்ட அம்மா என்றவொரு
அற்புத நினைவு !
ஆறாத வடுவாக ஆனாலும்
மனதில்
அன்பாக வருடும்
அற்புத நினைவு ! இனிமைக்கு
இனிமை கூட்டும்
இதயத்தைத் தாலாட்டும்
இன்னிசை மழையாய் என்றைக்கும்
உள்நிலைக்கும் அம்மா என்றவொரு
அற்புத நினைவு !


அம்மா என்றொரு அற்புதம் !
அம்மா என்றும்
அற்புதம் !


கவிஞர் : கி.பாலாஜி - 08.05.2016 - இக்கவிதை பாலாஜி அவர்களின் வலைத்தளத்திலும் வெளியாகியுள்ளது.

அம்மா என்றொரு அற்புதம் ! - பாலாஜி - சிகரம் 
 

Sunday, 19 November 2017

என்றேனும் ஒரு நாள்...

என்றேனும் ஒரு நாள் வரும்
இந்த உலகத்தில் திருநாள் வரும்!
அந்நாளில் நான்பாடும் பாடல் கேட்கும்
அழியாத இசையென்னும் தேனை வார்க்கும்!

தமிழே நீ என்னைத் தாலாட்டு
தாய் மடிபோல இனிக்காதே பாராட்டு!
விழி கொஞ்சும் வார்த்தைகள் நீதானே!
விடியாமல் போகுமா செந்தேனே?
உறவின்றி அழுகின்ற பறவை-இவள்
உயிர்வாழத் தந்தாயே உறவை!
ஊர்மெச்ச உன் பேரைச் சொல்வேனே!
உலகெங்கும் உனையள்ளிச் செல்வேனே!

மார்மீதும் தோள்மீதும் தாலாட்டினாய்!
மணம் வீசும் வார்த்தையால் சீராட்டினாய்!
சேய் என்றன் நினைவுக்குள் நீதானே!
சிறு பிழையேனும் வருமா என்தாயே?

நாடோடிப் பாட்டுக்காரி -உன்னை
நாள்தோறும் போற்றும் சூரி!
கரிகாலன் கதை சொல்ல வந்தேனே
கதையோடு கதையாக நின்றேனே!

இனி என்றன் பாடல் நில்லாது!
இளநெஞ்சின் ஆசை விட்டுச் செல்லாது!
ஒளி வீசும் நிலவே நீ வரவேண்டும்
ஒரு கோடி ஆனந்தம் தர வேண்டும்!

பாடல் வரிகள் : அம்பாளடியாள் | நன்றி |இப்பதிவு அம்பாளடியாள் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது | சிறப்பான வரிகளுக்கு நன்றிகளும் பாராட்டும் | சிகரம் 

என்றேனும் ஒரு நாள் | அம்பாளடியாள் | பேஸ்புக்

என்றேனும் ஒரு நாள் | சிகரம் | SIGARAM.CO 

Wednesday, 15 November 2017

இலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை

சங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும் அதன் விளக்கமும் இங்கே தந்துள்ளேன்.

அகநானூறு பாடல் எண் #21

திணை : பாலைத்திணை

பாடியவர் : காவன் முல்லைப் பூதனார்
  
மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்,
அம் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணை தோள்,

மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய்!
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம்! வல்லே
எழு இனி வாழி என் நெஞ்சே!தலைவன் பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கிறான். அவ்வாறு செல்லும் தலைவன் பாதிவழியில் மனக்குழப்பத்துக்கு ஆளாகிறான். இதனை அவனது மனதுக்கும் நெஞ்சுக்கும் நடைபெறும் போராட்டமாகச் சித்திரிக்கிறார் புலவர்.

தலைவன் தலைவியுடன் இனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அச்சமயம்  தலைவனுக்கு மேலும் பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. உணர்வுகளின் பிறப்பிடமாகிய நெஞ்சு, "நல்ல உணவு, சிறந்த உடை, வீடு நிறைய அலங்காரப் பொருள்கள், கூடுதல் வசதிகள் என்ற பல்வேறு சிறப்புகளைப் பெற்றால் குடும்ப வாழ்வு மேலும்  பொலிவுபெற்றுத் திகழும்" என்று  தலைவனை ஆசைக்காட்டி  தூண்டுகிறது.

ஆனால், தலைவியை இதற்காகப் பிரிந்து சென்றால் அவள் பிரிவுத்துயரால் ஆட்கொள்ளப்பட்டு தனது பொலிவை இழந்துவிடுவாளே என தலைவன் தவிக்கிறான். தலைவனின் இந்த தவிப்பை புலவர் பின்வருமாறு விளக்குகிறார்.

தலைவியின் முல்லைப்பூ போன்ற பற்கள் தம் முறுவலை இழக்குமே?

அழகிய வயிறு சரியாக உணவருந்தாமல் ஒட்டிப்போய்விடுமே?

பெரிய பின்புறம் வாட்டத்தினால் சிறுத்துப்போய்விடுமே? 

பின்னலுற்று நீண்டு தாழ்ந்திருக்கும் கூந்தல் பேணப்படாமல் பரட்டையாய்ப் போய்விடுமே?

உருண்டு திரண்ட மென்மையான மூங்கில் போன்ற தோள்கள் உருமாறிப்போய்விடுமே?

எனவே தொலைதூரத்துக்கு அவளை விட்டுப் பிரியவேண்டாம்  என்று தலைவனின் மனம் வாதாடிப் பார்க்கிறது.

நெடுநேரம் வாதாடியும் நெஞ்சம் கேட்கவில்லை. காதலை பணம் வெல்கிறது. எனவே தலைவன் பொருளீட்டப் பிரிந்து செல்கிறான்.

பாதி வழியில், அதுவும் பாலைநிலத்து நட்ட நடுக்காட்டில், நெஞ்சம் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறது. தலைவியின் காதலை எண்ணி துன்பம் கொண்டு, இனிமேல் ஒரு எட்டுக்கூட எடுத்துவைக்க முடியாது என்று அங்கேயே அமர்ந்துவிடுகிறது.

வம்படியாக அதன் கையைப் பிடித்துத் தூக்க முயல்கிறது மனம்.

“எழுந்திரு, நல்ல பிள்ளையல்லவா!” என்று தாங்குகிறான் தலைவன்.

“நீ சொன்னவாறே, வீடு பொலிவுபெற, பலவித செல்வங்களையும் ஈட்டி வருவோம். சீக்கிரம் வா!" என்று தலைவன் சொல்வதாகப் பாடல் அமைந்துள்ளது.

மனித மனதின் ஆசைகளையும், காதலும், செல்வமும் மாறி மாறி மனிதனை ஆட்டுவிக்கும் தன்மையையும் இப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது.

இன்றல்ல நேற்றல்ல... சங்க காலம் முதலே மனிதனை இத்தன்மைகள் பாடாய்படுத்திக் கொண்டிருப்பதை இப்பாடல் வாயிலாக அறியமுடிகிறது.

நன்றி -
பௌசியா (முகநூல் பதிவு)

பேஸ்புக்கில் பௌசியா என்பவர் எழுதி வெளியான இப்பதிவை கிருத்திகா நமக்காக தொகுத்தளித்துள்ளார்.

இலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை

Monday, 13 November 2017

இவர்கள்

ஆதவனில் கறையில்லை 
அவன் கதிரொளியும் பிழையில்லை!
ஆண்டவனும் தவறில்லை-அவன்
அருளதிலும் குறையில்லை,அதனதனின் பணிகள் 
அழகாக நடக்குதிங்கே-இந்த
நிலையற்ற மானிடனோ
நிலையென்றே வாழ்வுமென

எத்தனைதான் குரோதங்கள்
எவ்வளவுதான் வஞ்சகங்கள்
இவரெல்லாம் சகுனியின் தலைமுறையோ,
பிசாசுகளின் மறுவுருவோ?!

-கவின்மொழிவர்மன்-

இவர்கள்  -கவின்மொழிவர்மன்-

Monday, 6 November 2017

"ண", "ன" - ஒரு எளிய விளக்கம்

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...
"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்
மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?
தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.
"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)
தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)
இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.
இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).
இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

Saturday, 4 November 2017

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை | விக்கிப்பீடியா

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது, ஐக்கிய அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வசதி செய்யுமுகமாக நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள கல்விசார் இருக்கை ஆகும். தனியார் அறக்கொடைகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படுகின்ற பிற கல்விசார் இருக்கைகளைப் போலவே தமிழுக்கான இந்த இருக்கையும் தமிழ் சமூகத்தினால் வழங்கப்படவிருக்கும் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான நன்கொடைகள் மூலம் அமைக்கப்படவுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் வாழும் சில தனிப்பட்ட தமிழ் ஆர்வலர்களின் எண்ணத்தில் உருவான இது, ஹார்வார்டு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இடம்பெற்ற தொடர் சந்திப்புக்களின் விளைவாகச் சாத்தியமானது. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் கலைகளுக்கும் மானிட அறிவியலுக்குமான துறையின் கீழ் இயங்கும் தென்னாசியக் கற்கைகள் பிரிவின் கீழ் இந்த இருக்கை அமைக்கப்பட உள்ளது.

வரலாறு

அவாய்த் தீவில் வசித்துவரும் வைதேகி ஹெர்பர்ட் பதினெட்டுச் சங்க நூல்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர். இவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழாவொன்றில் வைதேகியும், அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவ நிபுணரான விஜய் ஜானகிராமனும்பேசிக்கொண்டபோது ஹாவார்டில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் எண்ணம் உருவானது. தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்கான அழைப்புக் கிடைத்தது. ஜானகிராமனும், அவரது நண்பரான திருஞானசம்பந்தமும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.[1] இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாகத் தமிழுக்கு ஒரு இருக்கையை நிறுவுவதற்கு ஹார்வார்டு பல்கலைக்கழகம் முன்வந்தது. இதற்காக 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறக்கொடையாகக் கொடுக்கப்படவேண்டும்.

நிதி திரட்டல்

ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் தனித்தனியே 500,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மிகுதி 5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக இலாப நோக்கற்ற நிறுவனம் (Tamil Chair Inc) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.[2] மருத்துவர் விஜய் ஜானகிராமன், மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம், திருமதி வைதேகி ஹெர்பெர்ட், திரு பால் பாண்டியன், திரு அப்பாதுரை முத்துலிங்கம், முனைவர் சொர்ணம் சங்கர், திரு குமார் குமரப்பன், முனைவர் ஆறுமுகம் முருகன் ஆகியோர் ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாந்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர்கள்.[3]
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த முயற்சியை ஆதரித்துப் பேசியுள்ளனர். தமிழக அரசு இதற்கு உதவவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.[4] தவிர நடிகர்கள், பல்வேறு உயர் பதவிகளில் உள்ளோரும்[5] இப்பணிக்கு நிதியுதவி வழங்கும்படி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2017 அக்டோபர் 21 அன்று கனடாவின் டொரன்டோ நகரில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஏ. ஆர். ரகுமான். அவர் சார்பில் பேசிய பாடகர் ஸ்ரீநிவாஸ், ஹார்வர்டில் நிறுவப்பட இருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அதற்கு நன்கொடை வழங்கப்போவதாக அறிவித்தார். கிஷான் நித்தி, ரஹ்மான், ஸ்ரீநிவாஸ் ஆகியோர் 25,000 டாலர் (சுமார் ரூ.16 லட்சம்) காசோலையை வழங்கினர்.[6] ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிக்காக ரூ.10 கோடி வழங்க தமிழக அரசு 2017 அக்டோபர் மாத இறுதியில் உத்தரவிட்டது.[7]

தேவையும் முக்கியத்துவமும்

தமிழ் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மொழிகளுள் ஒன்று. ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்குகிறது. அண்மையில் ஒரு செம்மொழியாகவும் இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லை. பன்னாட்டு அளவில் ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களுள் அடங்கும். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உலக அங்கீகாரம் பெற்ற பிற இலக்கியங்களுக்கு நிகராகப் புதிய, வெவ்வேறு நோக்குகளிலிருந்து ஆராயப்படவேண்டியதும், அவற்றின் விளைவுகளைப் பிற பண்பாட்டினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதும் முக்கியமானது. பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும், ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்தப் போதாமைகள் சீர்செய்யப்படலாம். இந்த அடிப்படையில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நிறுவப்படவுள்ள தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
ஹார்வார்டு பல்கலைக்கழகம் உலகின் முதன்மைப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று. 379 ஆண்டுகள் (2015) பழமையான இது ஐக்கிய அமெரிக்காவின் மிக மூத்த பல்கலைக்கழகம். நோபல் பரிசு போன்ற மதிப்பு வாய்ந்த பரிசுகளைப் பெற்ற பல அறிஞர்களையும், பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் உருவாக்கி வழங்கிய பெருமை இப்பல்கலைக்கழகத்துக்கு உண்டு. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு உலக அளவில் பெரிய மதிப்பும், அங்கீகாரமும் உள்ளன. இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று இருப்பது மதிப்புக்குரிய ஒன்றாக இருப்பதுடன், தமிழாய்வின் தரத்தையும், வீச்செல்லையையும் உலக மட்டத்துக்கு உயர்த்துவதற்கு உதவும்.

தற்போதைய நிலையும் வாய்ப்புக்களும்

ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தெற்காசியவியல் பிரிவின்கீழ் இப்போதும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தொடக்கத் தமிழ், இடைநிலைத் தமிழ், உயர்நிலைத் தமிழ் என மூன்று நிலைகளில் தமிழ்ப் பாடநெறிகள் உள்ளன.[8] ஜொனதன் ரிப்ளே என்பவர் சுமார் 20 மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்து வருகிறார். ஆனாலும், இங்கே தமிழுக்கெனத் தனியான ஒரு பேராசிரியரின் கீழ் இயங்கும் கல்விசார் இருக்கை கிடையாது. இதனால், ஹார்வார்டில் தமிழாய்வு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது.
உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய இருக்கை உருவாக்கப்படும்போது, தெற்காசியவியல் பிரிவின்கீழ் தமிழுக்கெனத் தனியான பிரிவு ஒன்றை உருவாக்கவும், அதற்கெனப் பேராசிரியர் ஒருவரை நியமிக்கவும் முடியும். இதன்மூலம், ஹார்வார்டில் தமிழ்க் கல்வியையும், தமிழ் ஆய்வையும் புதிய மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.


மேற்கோள்கள் மற்றும் வெளியிணைப்புக்களுக்கு : ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை | விக்கிப்பீடியா

Friday, 3 November 2017

தமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும்...?

ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது.

இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால் சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும் அவசியம் ஒரு போதும் அடையாளம் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும். தமிழை முழுமையாக தெரிந்து கொண்டு பின்னர் ஆங்கிலத்தை படியுங்கள்.ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? காரணம், தமிழ் மீதான ஒரு அருவருப்பு தமிழனுக்குள்ளேயே விதைக்கப்பட்டிருக்கிறது. உலகின் எல்லா நாடுகளிலும், அதன் வரலாற்றிலும் ஒரு இனம் அதன் மொழியால் தான் அடையாளப்படுத்தபடுகிறது. தமிழுக்காக போராட வேண்டாம், வீட்டில் தமிழில் பேசுங்கள் போதும். அது தான் தமிழை வளர்க்கும். ஆரியம், இங்கிலாந்து என எத்தனையோ படையெடுப்பைத் தாண்டி வாழ்ந்த தமிழ் இன்று தமிழனாலே மாண்டு விடுமோ? உலகிலேயே ஆங்கிலத்தை மிகச் சரியாக உச்சரிப்பவர்களும் தமிழர் தான், தன் தாய் மொழி குறித்த அடிப்படை அறிவு பெறாதவர்களும் தமிழர் தான். இது பெருமை படக் கூடிய விசயமா? இன்னைக்கு ஆங்கிலத்தில் பெரும் புலமை அடைந்துவிட்டோம். விருதுகள் கூட வழங்கிக் கொள்ளலாம். ஆனால் தமிழில் பிழை இல்லாமல் எத்தனை பேருக்கு எழுதத் தெரிந்திருக்கிறது? குறைந்த பட்சம் தமிழில் எத்தனை பேர் தன் கையெழுத்து இடுகின்றனர் ?

ஆங்கிலம் அவசியம். ஆனால் தமிழ் நம் அடையாளம்....

உங்கள் வசதிக்காக ஆதித் தமிழன் பார்த்துப் பார்த்து செதுக்கிய தமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும்...?

கொஞ்சம் சிந்தியுங்கள்

#தமிழ்
#ஆதிமொழியாகவேண்டுமா ! அல்லது #அழியாமொழியாகவேண்டுமா !
ஆதி மொழி தமிழ் தான் என்பதற்கு இன்றும் பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.ஆனால் அழியா மொழியாவது நம் கையில் தான் இருக்கிறது...

இப்பதிவு ந.விஜயராகவன் அவர்களால் பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பதிவு ஆகும். பதிவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!


Thursday, 2 November 2017

திருநங்கைகள்

இலங்கை-யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்ட '1000 கவிஞர்கள் 1000 கவிதைகள்' என்ற பெருநூலில் எனது "திருநங்கைகள்" என்ற கவிதை வெளியாகியுள்ளது. எனது கவிதையை வெளியிட்ட யோ.புரட்சி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

திருநங்கைகள்


உரு மாறியதால்
உறுப்பறுத்து வாழும்
கடவுளின் பிள்ளைகள் !
வரதட்சணை
வாங்கி வாழாத
வானம்பாடிகள் !வனம் அழித்து
மலை உடைத்து
வயல் மறைத்து
மனை பிரித்து வாழா
மரகத கற்கள் !
அரசு சொத்துக்களை
அபகரித்து வாழா
அன்னப்பறவைகள் !
கணிமவளங்களை
கொள்ளையடித்து வாழா
கோமேதகங்கள்!
ஊர் கொளுத்தி
காதல் பி(எ )ரிக்கா
வேடந்தாங்கல்கள் !
குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடா
குடும்பவிளக்குகள் !எல்லா துறைகளிலும்
கோலோச்சி கொண்டிருக்கும்
கோவில் கோபுரங்கள் !
எதிர்கால உலகை
ஆளப்போகும்
எட்டாவது
உலக அதிசயங்கள்!

இக்கவிதை கவிஞர் ம.சக்திவேல் அவர்களின் படைப்பாகும். இக்கவிதை 1000 கவிஞர்கள் 1000 கவிதைகள் என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்று ம.சக்திவேல் அவர்களால் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.

திருநங்கைகள் -  கவிஞர் ம.சக்திவேல் 

Wednesday, 1 November 2017

மச்சமளவு முத்தம்

பறவையின் வாழ்வைப் பழகு
விடியலில் விரைந்தெழு
கதிரோனைக் காவல் வை
இறையைத் தொழு
திசையை தீர்மானம் செய்
செல்லும் இடத்தை
இல்லத்தில் சொல்

இரைதேடி பற ; சேகரி
இருள் வருவதற்குள்
இல்லம் திரும்பு
காலணிகளையும் பொய்களையும்
வீட்டிற்கு வெளியில் விடு
ஒளித்திரைகளை அணை
மக்களுடன் விளையாடு
அடுக்களையில் உதவிசெய்
கூடியமர்ந்து உண்டு களி
குழந்தைகளை உறங்க வைஉன் அறையை அலங்கரி
அன்புருக்கியை அழை
இடை தழுவு
விடுவிடு என இடைமறிப்பாள்
இயல்புதான்
இழுத்தணைத்து இறுக்கு

விரல்வெளிகளை
விரல்கள் செருகி நிரப்பு
அவளின் இடக்கை ரேகைகளை
உன் வலக்கை ரேகைகளால் போர்த்து
உன் துயரென்ன என பரிவுடன் வினவு
இறக்கி வை எனச்சொல்லி
உன் தோள்களைக் காட்டு
இளகும் குரலுக்குச் செவி கொடு
அக்கணம் அவளுக்குத் தந்தையாகு
தலை தடவு
உச்சந்தலையில் மச்சமளவு முத்தம் வை

உன் துயரையும் சொல்
அவள் உனக்குத் தாயாகியிருப்பாள்
மடி சாய்
மகிழ்ச்சி பழக்கு
கடல் குளித்து நீர்வழிய எழும் நிலவைப்போல்
உடை வழிய உடல் எழும் ; கண்டு ரசி
மிச்சம் வைத்திருக்கும் முத்தங்களை
தேகத்தில் ஒத்தடமிடு

ஒரேவித உணவு
நாவுக்குச் சலிப்பூட்டும்; புரிந்துகொள்
புதுப்புது உத்திகளில்
புணர்ச்சி விளக்கு
உடற்செல்கள் ஆழ்வுறக்கம் கேட்கும்
அனுமதி கொடு

குருவிகள் விடியலை அறிவிக்கும்
புதியநாள் அழைக்கிறது
புருவமத்தியில் முத்தமிட்டு
இணையை எழுப்பு
பறவையாகு
*
இக்கவிதை கவிஞர் கோபால் கண்ணன் அவர்களின் படைப்பாகும்.

Popular Posts