Tuesday, 26 December 2017

வீழ்வேனென்று நினைத்தாயோ!

பிறந்து விட்டே
னிவ்வுலகில்
வாழ்ந்திட
வேண்டு மென்றே,

கிடைத்ததை கொண்டு
நடப்பது விதியென நம்பி,
தத்து வார்த்தங்கள்
பலப் பேசி,
இதயத்தால் அழுது
உதட்டால் சிரித்து,உள்ளத்துள் நடுங்கி
வெளியில் சிலிர்த்து,
மனத்தால் வெறுத்து
மனிதர் க்காய் விரும்பி,

சுயத்தை இழந்து
பொய்யாய் வாழ்ந்திடும்,
பல வேடிக்கை
மனிதரைப் போல்
வீழ்வே னென்று
நினைத் தாயோ!

-கவிஞர் கவின்மொழிவர்மன்

வீழ்வேனென்று நினைத்தாயோ! - சிகரம் 

#கவிதை #கவின்மொழிவர்மன்

படைப்பாளி சிவரஞ்சனி அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்

சிகரம் : வணக்கம் சிவரஞ்சனி!


சிவரஞ்சனி : வணக்கம் சகோதரரே!

சிகரம் : உங்களைப் பற்றி சிறு அறிமுகம்?

சிவரஞ்சனி : நான் ஒரு இயன்முறை மருத்துவர். குழந்தைகள் நல சிறப்பு பிரிவு. எனக்கு சங்க இலக்கியம் மற்றும் இலக்கணம் என்றால் மிகவும் விருப்பம். தமிழ் முறைப்படி கற்க ஆவல்.

சிகரம் : தமிழ் மொழி மீது உங்களுக்கு எப்படிக் காதல் வந்தது?

சிவரஞ்சனி : என் தாய் மொழி மீது காதல் இயல்பானது சகோ. அது புதிதாக வரவில்லை. பிறப்பிலேயே நான் தமிழர்.

சிகரம் : உங்கள் மொழி ஈடுபாட்டை ஊக்குவித்தவர்கள் பற்றி?

சிவரஞ்சனி : யாரும் ஊக்குவிக்கவில்லை. இயல்பாகவே எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும். படித்தது முழுவதும் தமிழ் வழிக்கல்வி தான் (பள்ளிக்கல்வி). தமிழ் மீது பக்தியும் காதலும் அதிகரிக்க காரணமானவர் எனது 11ம் வகுப்பு தமிழாசிரியை அதன்பின்னர் எனது ஆர்வத்திற்கு தீனி போட்டது நமது தமிழ்கூறும் நல்லுலகம் மற்றும் நமது குழு நண்பர்கள்.சிகரம் : தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உங்களால் எத்தகைய பங்களிப்பை நல்க முடியும் என எதிர்பார்க்கிறீர்கள்?

சிவரஞ்சனி : நமது மொழியின் பெருமையையும் சிறப்பையும் வருங்கால சந்ததியினருக்குக் கொண்டுசெல்வதன் மூலம்!

சிகரம் : தமிழ் வீழும் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்களே, அது குறித்து தங்கள் கருத்து?

சிவரஞ்சனி : அதற்கெல்லாம் துளி கூட வாய்ப்பே கிடையாது. நமது தன்னம்பிக்கையை குலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி அது. இப்படி யாராவது கூறினால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. நமது மொழியின் வரலாறு தெரிந்த யாரும் இப்படி கூறவே மாட்டார்கள். அப்படிக் கூறுபவர்களை நிராகரித்து செல்வதுதான் நமக்கு நல்லது.

சிகரம் : சாதாரண மக்கள் மத்தியில் ஆங்கிலம் கலந்து பேசும் போக்கு அதிகரித்து வருகிறதே?

சிவரஞ்சனி : அப்படி ஒரு வழக்கம் எப்போது தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால் இப்படி மொழிக்கலப்பு ஏற்படும் போது தாய்மொழி பயன்பாடு குறையும், சொற்கள் அழிந்து அல்லது சிதைந்து போகும். எந்த மொழி பேசினாலும் நமது மொழியை அழியாமல் காக்க வேண்டியது நமது தலையாய கடமை. மொழிக்கலப்பு இயல்பான ஒன்றுதான். ஆனால் தாய்மொழியை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.  

சிகரம் : மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் தாக்கம் எவ்வாறானதாக உள்ளது?

சிவரஞ்சனி : ஊடகங்களில் வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டுமே இருக்கிறது. ஒரு பக்கம் மொழி கற்றுக்கொள்ளவும், மேலும் விவரங்கள் அறிந்துகொள்ளவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது மகிழ்ச்சியான செய்தி. எகா: இணைய கல்வி தளங்கள், யூடியூப், வாட்ஸப், கூகிள் மற்றும் பிற ஊடகங்களில் தமிழ் பயன்படுத்தும் வாய்ப்பு, மேலும் பல. திரைப்படங்களில் கூட வெகுசிலர் நல்ல தமிழில் எழுதுகிறார்கள். 

வீழ்ச்சி - செய்தித்தாள்களில் பிற மொழிக்கலப்பு, எழுத்துப்பிழையுடன் ஊடகங்களில் செய்திகள் பதிவாதல், திரையிசைப் பாடல்களில் தான் அதிகமான கலப்பு நிகழ்கிறது.

சிகரம் : வெள்ளித்திரை எனப்படும் சினிமா தமிழின் வளர்ச்சியைப் பாதிக்கிறதா?

சிவரஞ்சனி : அப்படி ஒரேயடியாக வெள்ளித்திரை மீது பழி சுமத்த இயலாது. நம்மவர்களின் தாய்மொழி பற்றிய கண்ணோட்டம் மாறத் தொடங்கியது தான் காரணம். ஆங்கிலவழிக்கல்வி தான் சிறந்தது என்ற மடத்தனம் முதன்மையான காரணம்.

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிகள் என்ன?

சிவரஞ்சனி : நிறைய உள்ளது. தமிழ் மொழி மட்டுமல்ல, தற்போதைய காலகட்டத்தில் தாய்மொழி வழிக்கல்வி கிட்டத்தட்ட மறுக்கப்பட்டு வருகிறது என்றே கூறலாம். வீட்டில், பொது இடங்களில் பேசுவதற்குக் கூட ஆங்கிலம் தான் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருப்பது ஊக்குவிக்கவும் படுகிறது. இப்படி இருந்தால் மொழி பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்துவிடும். வளர்ச்சியை பாதிக்கும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். மொழி பயன்பாட்டுக்கும் இது பொருந்தும். தொடக்க நிலையிலேயே சரிசெய்ய வேண்டும்.

சிகரம் : இன்றைய உலகில் ஆங்கில மொழியின் பயன்பாடு இன்றி தாய்மொழியினால் மட்டும் நமது தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியுமா?

சிவரஞ்சனி : அப்படி நாம் பழகிக் கொண்டுவிட்டோம். துணைமொழி அவசியம் தான். ஆனால் அதற்காக தாய்மொழியின் அவசியம் தெரியாமல் இருக்கக்கூடாது.

சிகரம் : தாய்மொழி வழிக் கல்வி சாத்தியம் தானா? ஏன் இந்தக் கேள்வி என்றால் நீங்கள் கற்ற மருத்துவத் துறையிலுள்ள பல வார்த்தைகள் இன்னும் தமிழாக்கம் செய்யப்படவேயில்லை. ஆக இவ்வாறான நிலையில் தாய்மொழி வழிக் கல்வி சாத்தியப்படுமா?

சிவரஞ்சனி : பள்ளிக்கல்வி வரை நிச்சயமாக சாத்தியம் தான். அதன்பிறகு கல்லூரி, தொழில் சார்ந்த படிப்புகளில் தாய்மொழிவழிக் கல்விக்கான வாய்ப்பு குறைவு. மேலும் அனைத்து நுட்பமான வார்த்தைகளையும் தமிழ்படுத்துவது என்பதும் சற்று கடினமானது. மேலும் அதற்கான தேவையும் குறைவு.

சிகரம் : ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக்கழகங்கள் துறை சார்ந்த அகராதிகளை ஆங்கில மொழியில் அமைத்திருக்கின்றன. ஆக்ஸ்போர்டு தமிழகராதி கூட உள்ளது. இவர்களுடன் இணைந்து பணியாற்றினால் இது சாத்தியப்படுமா?

சிவரஞ்சனி : முயற்சி செய்து பார்க்கலாம்.

சிகரம் : உங்கள் பொழுது போக்குகள் என்ன?

சிவரஞ்சனி: நூல்கள் வாசிப்பு, இசை, ஆலயங்கள், அருங்காட்சியகம், நீண்ட தொலைவு பயணம், இயற்கையை ரசிப்பது பிடிக்கும், இன்னும் பல...

சிகரம் : உங்கள் மனங்கவர்ந்த எழுத்தாளர்கள் யாவர்?

சிவரஞ்சனி : கல்கி, சுஜாதா

சிகரம் : கணையாழி, கல்கி போன்ற சஞ்சிகை வாசிப்பதுண்டா?

சிவரஞ்சனி : பசுமை விகடன், புதிய தலைமுறை, நக்கீரன்

சிகரம் : மொழி வளர்ச்சிக்கும் வாசிப்புக்கும் என்ன தொடர்பு?

சிவரஞ்சனி : நிச்சயமாக இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை தான். மொழி தெரியாவிட்டால் வாசிப்பு சாத்தியமில்லை. வாசிக்காமல் மொழியறிவு வளர்ச்சியடையாது.

சிகரம் : கவிதை என்றால் என்ன? ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும்?

சிவரஞ்சனி : கவிதை பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது சகோ. ஆனால் கவிதை என்பது நல்ல கருத்துக்களை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். காதலை விரசமில்லாமல் கவிதையாக்க வேண்டும். ஏனென்றால் அதிக கவிதைகள் காதல் பற்றியதே.

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் என்ன?

சிவரஞ்சனி : கல்வியை அரசியலாகவோ வணிகமாகவோ ஆக்காமல் இருந்தால் போதும். அப்படிப்பட்டவர்களுக்கு துணைபோகாமல் இருக்க வேண்டும். கல்வி முறையை ஒழுங்குபடுத்த வேண்டும். தாய்மொழிக்கல்வியை ஊக்குவித்து முதன்மைபடுத்த வேண்டும்.

சிகரம் : இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்கு கொண்டதுண்டா?

சிவரஞ்சனி : வாய்ப்பு கிடைத்ததில்லை சகோ.

சிகரம் : தமிழ் மீது ஆர்வமுள்ள பத்து நண்பர்களை இணைத்தால் நீங்களே இலக்கியக் கலந்துரையாடல்களை ஒழுங்கமைக்கலாமே?

சிவரஞ்சனி : நிச்சயமாக சகோ. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் கலந்துரையாடுவேன்.சிகரம் : தமிழக அரசியல் சூழல் குறித்த உங்கள் பார்வையைப் பதிவு செய்ய முடியுமா?

சிவரஞ்சனி : இப்போது மிகவும் குழப்பமான நிலையில் தான் தமிழகம் இருக்கிறது. மக்கள் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை துளிகூட இல்லாமல் பதவிக்காக இவர்கள் நடத்தும் அரசியல் பிழைப்பு மிகவும் மோசம். அடுத்த தலைமையைத் தேர்ந்தெடுக்கவே அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

சிகரம் : எதிர்காலத்தில் தமிழ் மொழி என்ன மாதிரியான சவால்களை எதிர்நோக்கக் கூடும்?

சிவரஞ்சனி : இப்போதே பெரிய சவால்களை எதிர்நோக்கிக்கொண்டு தான் இருக்கிறது. எல்லா இடங்களிலும் போராடித்தான் தமிழைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சிக்கு சாதகமாக அமையக் கூடிய காரணிகள் தற்போது என்ன இருக்கின்றன?

சிவரஞ்சனி : ஏதோ நம்மைப் போன்ற ஓரிரு தமிழார்வமிக்க உள்ளங்கள் தான் ஒரேயொரு சாதகமான காரணி. ஒன்றுபட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மற்ற எதையும் நம்புவது வீண்.

சிகரம் : வாட்ஸப் என்றாலே வதந்தி தானே? அதில் தமிழ் கூறும் நல்லுலகம் குழு எவ்வாறு இயங்குகிறது?

சிவரஞ்சனி : வாட்ஸப் என்றாலே வதந்தியா? இது என்ன புதிய தகவலாக உள்ளது! பெரும்பாலும் பயனுள்ள தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. படைப்புகள், படைப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இந்த தளம் முழுவதும் தமிழில் உரையாடுவதற்கென்று மட்டுமே உருவாக்கப்பட்டது (அதாவது தமிழில் அரட்டையடிக்க மட்டும்). பின்னர் பயனுள்ள தளமாக தரம் உயர்ந்துவிட்டது!

சிகரம் : தமிழ் இலக்கணம் கற்பது கடினமா? எளிதா?

சிவரஞ்சனி : கடித்தால் தான் கரும்பின் இனிமையை சுவைக்க முடியும். அதுபோல் தான் இலக்கணம். சுவைப்பது எப்படி என்று தெரிந்துகொண்டால் போதும்.

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சியில் சாதாரண மக்களுக்கு அக்கறை உள்ளது எனக் கருதுகிறீர்களா? அதாவது வறுமை கோட்டில் வாழ்பவர்கள், மாதாந்த வருமானத்தை நம்பி வாழ்பவர்கள் அல்லது மொழி தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்கள்....
சிவரஞ்சனி : எல்லாருக்கும் ஓரளவுக்காவது அக்கறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எப்படி செயல்படுத்துவது என்பது தான் தெரியவில்லை. அரசாங்கம் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.

சிகரம் : இந்த சாதாரண மக்களை எவ்வாறு நமது மொழி வளர்ச்சிப் பயணத்தில் இணைத்துக் கொள்வது?

சிவரஞ்சனி : ம்... சற்று கடினமான கேள்வி. மொழி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அன்றாட செலவுக்கே மிகவும் அல்லல்படுபவர்கள் கூட தனது பிள்ளைகள் ஆங்கிலம் கற்றால் தான் உயர்வடைவார்கள் என்று எண்ணி தனியார் நடத்தும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். இந்த நிலை மாறினாலே போதும். அதற்கு அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். இது மற்றவர்கள் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட தாங்களே நேரடியாக உணர்ந்து கொள்வார்கள்.

சிகரம் : தமிழ் மொழி ஆர்வலர்கள் பரவலாக உலகெங்கும் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் இவர்களை ஒன்றிணைக்க யாரும் முயற்சி எடுக்கவில்லையே?

சிவரஞ்சனி : நிறைய சங்கங்கள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகளில் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள்.

சிகரம் : இக்காலத்தில் மரபுக் கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே?

சிவரஞ்சனி : இலக்கணம் முறையாகக் கற்காத குறை தான் காரணம்.

சிகரம் : தனித்தமிழில் பேசுவது கடினமானதா?

சிவரஞ்சனி : பேசுவது கடினமில்லை. அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் மற்றவருக்குப் புரியவேண்டும். பேச்சு மொழியில் (communication) ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிகரம் : உங்கள் வாழ்க்கை இலக்கு என்ன?

சிவரஞ்சனி : நல்ல மனிதனாக வாழ்ந்தால் போதும்.

சிகரம் : உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த சவால்கள் பற்றி?

சிவரஞ்சனி : அப்படி குறிப்பிட்டு எதையும் கூற முடியவில்லை.

சிகரம் : பிறமொழி இலக்கியங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?

சிவரஞ்சனி : பள்ளியில் படித்த ஆங்கில இலக்கியம் ஒன்றிரண்டு தான் சகோ. வேறொன்றும் படித்ததில்லை.

சிகரம் : சமூக வலைத்தளங்கள் எனப்படும் பேஸ்புக், வாட்ஸப் போன்றவை வரமா? சாபமா?

சிவரஞ்சனி : இரண்டும் கலந்து தான் இருக்கிறது. நமக்கு எது தேவையோ எது நன்மை தருவதாக இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்.

சிகரம் : நீங்கள் இறுதியாக எமது வாசகர்களுக்கு / மக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?

சிவரஞ்சனி : எந்த மொழி பேசினாலும், பயன்படுத்தினாலும் நமது தாய் மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும். ஒரு  மொழி அழிந்தால் அந்த இனத்தின் ஒட்டுமொத்த பெருமையும் அழிந்துபோகும். எனவே தாய்மொழி எதுவாகினும் கற்போம், காப்போம், அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வோம். நன்றி!

படைப்பாளி சிவரஞ்சனி அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்

#நேர்காணல் #சிவரஞ்சனி #சிகரம் #நேர்முகம் #SIGARAMCO

Thursday, 21 December 2017

நம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது

உலகின் மிகப்பெரிய சுவர் என்பது சீனப் பெருஞ்சுவர் அல்ல,
அது நல்ல இரு நண்பர்களுக்குள் உருவாகும் இடைவெளிதான்.

உலகின் மிகப்பெரிய வைரம் கல்லினன் வைரம் என்கிறார்கள்,
உண்மையில் அது அவரவர் குழந்தைகள் தான்.

உலகின் மிகப்பெரும் பாலைவனம் சஹாரா அல்ல,
அது சிறிதும் சிந்திக்காத மனிதனின் மூளைதான்.

உலகத்தின் உயரமான சிகரம் எவரெஸட் அல்ல,
உதவி நாடி வந்த ஒருவருக்கு ஓடிச் சென்று உதவியவரின் இதயம் தான்.
மிகப்பெரும் கிரகம் ஜூபிடர் என்கிறார்கள்,
உண்மையில் பெரிய கிரகம் முட்டாள்களைக்கூட வைத்துக்கொண்டு தொழில் செய்வதுதான்.

நம்பிக்கைத் துரோகத்தை எதிர்கொண்ட ஒரு மனதின் கொதிப்பை விடவா உலகத்தின் பெரிய எரிமலையான ஹவாயின் மவுனா லோ கொதித்து விடப்போகிறது ?

இந்தியாவின் சிரபுஞ்சிதான் உலகத்தில் அதிகமாக மழை பொழியும் இடமாம்,
பொருட்கள் வாங்கித் தரச் சொல்லும் குழந்தைகளின் கண்களை
அவர்கள் பார்த்ததில்லை போலும்.

கம்போடியாவின் அங்கோர் வாட் தான் இன்றளவில்
உலகத்தின் மிகப்பெரும் கோயிலாம்,
ஒரு சந்தோசமான குடும்பம் வாழும் வீட்டை விடவா
அது பெரிய கோயில் ?

உலகத்தின் மிகப்பெரிய நிலவாழ் மிருகம் ஆப்பிரிக்க யானை என்று சொல்பவர்களே,
குடித்திருக்கும் ஒரு சாதாரண மனிதனை விடவா மூர்க்கமானது அது ?

உலகின் மிகப்பெரும் அருங்காட்சியகம் லண்டனில் இருக்கிறதாம்,
அட குழந்தைகள் விளையாடி கலைக்கப்படாத வீடுகள் தானே
உலகின் பெரிய அருங்காட்சியகம்.

மனிதனின் எண்ணங்களின் ஓட்டத்தை விட உலகில் எந்த ரயிலாலும் விமானத்தாலும் வேகமாகச் சென்று விட முடியாது.

இப்படியாக, உலகத்தின் பெரியதும் சிறியதும் நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும்தான் இருக்கின்றன. உலகத்தின் வலியதும் எளியதும் நம்மைச் சார்ந்தே கிடக்கின்றன...

#வாழ்க_வளமுடன்

Wednesday, 20 December 2017

படைப்பாளி பாலாஜி ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்

சிகரம் : வணக்கம்

பாலாஜி : வணக்கம்சிகரம் : கவிதை என்றால் என்ன? ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும்?

பாலாஜி : உட்கார்ந்து யோசித்து வருவதில்லை கவிதை! அது ஒரு தீப்பொறி! உள்ளில் கொழுந்து விட்டு எரியும் உணர்ச்சிகளின் வடிவம்! அந்த உணர்வோடு திடுமென்று ஒளிரும் வரிகளில் உயிர் இருக்கும்! இது ஒரு தலை சிறந்த இலக்கணம் கவிதைக்கு! அப்படிச் சொல்வதனால் மற்றவை எல்லாம் கவிதைகள் இல்லையா என்று கேட்கத் தோன்றும்! அப்படி இல்லை! மற்ற காரண காரியங்களோடு எழுதப்படும் வரிகளும் சிறப்பாக அமையும் - எப்போது என்றால் ஏற்கெனவே அந்தக் கருத்துக்கள் குறித்து கவிஞனின் மனம் கனன்று கொண்டிருந்தால், அப்போது பிறக்கும் வரிகளில் ஆழம் இருக்கும்.

இன்னும் சொல்கிறேன்!

கவிதை என்பதில் தெளிவு வேண்டும். மொழியின் இனிமை வேண்டும். பொருள் வேண்டும். வரிகளே இசைமயமாய் இருத்தல் வேண்டும். ஆழ்ந்த சிந்தனையின் அருமையான வெளிப்பாடாய் அது அமைதல் வேண்டும். எதுகை, மோனை இருப்பின் சிறப்பு! எதையும் எழுதி இதுதான் கவிதை எனச் சொல்லும் திமிறல் அதில் தெரிதல் கூடாது. வரிகளைப் படித்தால் வானம்போல் சிந்தனை விரிதல் வேண்டும்.

நான் எழுதுவதைக் கூட நான் கவிதை என்ற பெயர் தரமாட்டேன்! அவை எண்ணங்களின் வெளிப்பாடு; ஒரு உரத்த சிந்தனை. அவ்வளவே! கவிதை என்பது கடைச் சரக்கல்ல, கேட்டவுடன் எடுத்துக் கொடுப்பதற்கு! (அளவுக்கு மீறி நான் பேசுவதாகத் தோன்றினால் மன்னிக்க!) மற்றவரின் இலக்கணங்களுக்கு உட்பட்டு எழுதுவது நல்ல கவிதை ஆவது மெத்தக் கடினம்! வரகவிகளுக்கே அந்த வாய்ப்பு! கவிதையில் ஒரு அழுத்தம் வேண்டும்! ஆளுமை வேண்டும்! அனைவர் மனதையும் கட்டியிழுக்கும் எளிமை வேண்டும்! ஏற்றமிகு வரிகளவை ஆதல் வேண்டும்!

சிகரம் : உங்கள் பத்திரிகை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

பாலாஜி : பத்திரிகை அலுவலகத்தில் எனது பணி நிர்வாகமும் கணக்கு வழக்கும் தான்! நல்ல ஒரு நிர்வாகி, அனைவர் மனதிலும் அன்பால் இடம் பிடிப்பவன் என்று பெயரெடுத்தது இறைவனருள். ஓய்வு பெற்று ஏழு வருடங்கள் கழிந்த பின்னும் என்னிடம் அலுவலக நண்பர்கள் தொடர்புடன் உள்ளனர். அது ஒரு வரம். அன்பும் உதவும் மனப்பான்மையுமே எனது அடிப்படைத் தன்மை. நன்றாக உழைத்தேன். நற்பெயர் எடுத்தேன்! பணிபுரியும் காலத்து என்னுடனிருந்த நண்பர்களை என்றும் மறக்கவியலாது!

சிகரம் : உங்களது எழுத்துக்கள் தி இந்துவில் களம் கண்டதுண்டா?

பாலாஜி : இல்லை! அங்கு எனது துறையே வேறு அல்லவா? நான் ஓய்வு பெற்ற பிறகுதான் தி இந்து தமிழ் நாளிதழ் தொடங்கப்பட்டது.

சிகரம் : வேறு நாளிதழ்கள் அல்லது சஞ்சிகைகளில்?

பாலாஜி : எத்தனையோ வருடங்களுக்கு முன் ஓரிரு முறை கதைக்கு எழுதிய விமர்சனத்துக்குப் பரிசும் கிடைத்ததுண்டு! அதன் பிறகு பத்திரிகைகளுக்கு நான் எதுவும் அனுப்பியதும் இல்லை. முகநூலில் சில எழுதியுள்ளேன். அவ்வளவே!
சிகரம் : நீங்கள் இந்த வாழ்க்கையினூடாக நினைத்ததை சாதித்து முடித்து விட்டீர்களா?

பாலாஜி : என் வாழ்வில் நான் இலக்கு என்ற ஒன்றை வைத்துக் கொள்ளவில்லை. அதை விரும்பவும் இல்லை. அதனால் சாதிப்பது என்பது என்வரை தேவையிருக்கவில்லை. அடிப்படையில் நான் ஒரு 'என்றும் திருப்தியுள்ள மனிதன்'! பெருமைக்குச் சொல்லவில்லை. அதுதான் உண்மை. எனக்குக் கிடைத்தவை அனைத்தும் என் மனம் கவர்ந்தவைதான்! அதனால் என்றும் ஒரு மகிழ்ச்சி; திருப்தி! இலக்கு என்று ஒன்றை வைத்துக் கொண்டால் அதை அடையும் வரை போராட்டம்! அடையாவிட்டால் மனவாட்டம்! எனவே நான் இலக்கில்லாமல் வாழ்ந்தேன்! எல்லாம் சாதித்து மகிழ்ந்தேன்!

பாலாஜி : உங்கள் கேள்விகள் அருமையாக உள்ளன. என் உள்ளத்தில் உள்ளவற்றை வெளிக்கொணரும் விதமான கேள்விகள்!

சிகரம் : அரசியல் தொடர்பான புரிதல் உங்களிடம் உள்ளதா?

பாலாஜி : இல்லை! அரசியலில் எனக்கு அணுவளவும் ஈடுபாடு கிடையாது!

சிகரம் : எதிர்காலத்தில் தமிழ் மொழி என்ன மாதிரியான சவால்களை எதிர்நோக்கக் கூடும்?

பாலாஜி : தற்காலத்திலேயே தமிழனாயிருந்தும் தமிழை நன்கு பயிலாத மக்களைத் தமிழ் கண்டுகொண்டிருக்கிறது. மொழியில் அதிகம் புழங்கப் புழங்க அதன் வளம் கூடும். புதிய வடிவங்களை மொழி காணும்! தமிழ் மொழி பயில்பவர்களே குறையும்போது மொழி புதிய வடிவங்களைக் காணும் வாய்ப்பும் குறைகிறது! எனவே எதிர்காலத்தில் இன்னும் அதிக அளவில் இந்த நிலையில் ஆன 'சவால்'களை எதிர்நோக்க வேண்டியிருக்கலாம்! தமிழ்மொழியை அதிக அளவில் நம் மக்கள் பயன்படுத்தியிருந்தால் 'சவால்' போன்ற வாக்குகளே புழக்கத்தில் வந்திருக்காது! (தவறாக எண்ணவேண்டாம் இந்தச் சொல்லை இங்கே சுட்டிக் காட்டியதற்கு)

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சிக்கு சாதகமாக அமையக் கூடிய காரணிகள் தற்போது என்ன இருக்கின்றன?

பாலாஜி : கணினி முதல் காரணி! அதன் பயன்பாட்டை சரியான விகிதத்தில் கையாண்டால் நல்ல பலன் தரும் என்று நான் நினைக்கிறேன். இரண்டாவது, ஊடகங்கள். அவை மொழிவளர்ச்சிக்கு என்று தனிப்பட்ட நேரம் ஒதுக்கினால் பலன் இருக்கும். அச்சு ஊடகம் என்று அறியப்படுகின்ற, பத்திரிகைகள் மனம் வைத்து மொழி வளர்ச்சிக்கு உதவலாம். தமிழ் மொழியின் அரிய சொற்கள் , பிறமொழியின் கடின சொற்களுக்கான தமிழாக்கங்கள் இவை பற்றி தனிப்பகுதிகளை அவை உண்டாக்கலாம்.

சிகரம் : உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த சவால்கள் பற்றி?

பாலாஜி: அப்படிப்பட்ட பெரிய 'சவால்'கள் ஒன்றையும் நான் நேரிட்டதாக நினைவில்லை. தினப்படி வாழ்க்கையில் எல்லோரும் சந்திக்கும் பிரச்சினைகள்தாம் நானும் கண்டது! அவையெல்லாம் கொசுக்கடிகள்! அவ்வளவே!

பாலாஜி : நானாக சொல்ல நினைக்கும் சில விடயங்கள் இவை.

என்னை ஒரு புடம் போட்ட தங்கமாக மாற்ற உதவியவர்களில் முதலாமவர் எனது தந்தையார். அவ்வப்போது அவர் தந்த அறிவுரைகளும் அனுபவங்களும் அளவிடற்கரியன! இயல்பாகவே சற்று பயந்த தன்மையுடைய எனக்கு ஒரு சரியான துணையாக இருந்து என்றும் மனதளவில் என் ஊக்கங்ளுக்கு உரமிடுபவர் எனது மனைவி! எனது அகவாழ்வில் ஒரு அகல்விளக்கின் ஒளியாகத் தோன்றி சரியான நேரத்தில் எனது மனஓட்டங்களைத் தனது கவியாலும் எழுத்தாலும் நெறிப்படுத்தியவன் எனது நண்பன் 'இசைக்கவி ரமணன்'. அவனுக்கே இது தெரியாது! கடமைப்பட்டுள்ளேன்! அடுத்து எனது அலுவலக அதிகாரியாக இருந்த கேப்டன் மணி அவர்கள் பல நேரங்களில் எனக்கு வழிகாட்டியாக இருந்து அலுவலக வாழ்விலும் தனிவாழ்விலும் என் மனதுக்குத் தெம்பு தந்து ஒரு ஊன்றுகோலாக என்னுடனிருந்தவர் அவர்! நினைவு கோராமல் இருக்க முடியாது. எனது இரு மகள்களும், மகனில்லாத குறைதீர்க்க வந்த இரு மருமகன்களும் என் இரு கண்கள் ! எதிலுமே திருப்தியுறும் நான் இனி 'இன்னது வேண்டும்' என்று இறைஞ்சிக் கேட்கும் தேவையின்றி என்னை வாழவைத்திருக்கும் பராசக்தி என்றும் காக்க, எனை மட்டுமல்ல, எல்லோரையும்!

சிகரம் : இரண்டு தலைமுறைகளைக் கடந்திருக்கிறீர்கள். இந்த இரண்டு தலைமுறைகளையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பாலாஜி : இரு தலைமுறையும் இரண்டு கண்கள்! முதல் தலைமுறை எனக்கு அடுத்த தலைமுறையை எப்படிக் கையாள வேண்டும் என்று தெள்ளத் தெளிவற உணர்த்தியது! அடுத்த தலைமுறை எம்மிரு தலைமுறைகளிடமிருந்தும் விரும்பிக் கற்ற பாடம் உறவுகளின் மேன்மை! மனிதர்களின் தேவை என்பது பணத்தின் தேவையைவிட சிறப்பானது என்பதை அவர்கள் தெளிவாக அறிந்துள்ளனர்!

சிகரம் : வாட்ஸப் என்றாலே வதந்தி தானே? அதில் தமிழ் கூறும் நல்லுலகம் குழு எவ்வாறு இயங்குகிறது?

பாலாஜி : தமிழ் கூறும் நல்லுலகத்தில் வதந்திக்கு இடமே இல்லை என்பது என் கருத்து. அதில் விவாதிக்கப்படும் செய்திகள் தமிழ் பற்றிதான். இலக்கியம் சங்ககாலப் பாடல்கள், அவற்றின் கருத்துக்கள் இவை பற்றித்தான்! மற்றபடி வேறிடத்தில் வந்துள்ள செய்திகளைப் பரப்புதலோ அது குறித்த விவாதங்களோ இதில் மிகக் குறைவு! முற்றிலும் இல்லை என்றே சொல்லுவேன்! எனவே தமிழ் கூறும் நல்லுலகம் குழு தொடர்பாக வதந்திக்கு இடமில்லை.

சிகரம் : தமிழ் கூறும் நல்லுலகம் குழுவில் வதந்தி பரவுகிறது என்று கூறவில்லை. இப்போது வதந்திகள் வாட்ஸப்பில் தான் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழலில் ஆரோக்கியமான குழுவாக தமிழ் கூறும் நல்லுலகம் குழு எவ்வாறு செயற்படுகிறது என்பதே கேள்வி.

பாலாஜி : அதில் forward செய்திகள் (மீள்பகிர்வு குறுஞ்செய்திகள்) அறவே இல்லை. எனவே வதந்திகளின்றி உண்மைகளில்தான் உலவுகிறது தமிழ் கூறும் நல்லுலகம் குழு

சிகரம் : தமிழ் இலக்கணம் கற்பது கடினமா? எளிதா?

பாலாஜி: பொதுவாக கடினம் எளிது என்பதெல்லாம் கற்பவரின் விருப்பம், ஊக்கம், திறமை இவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பர். இருப்பினும் தமிழின் அடிப்படை இலக்கணங்கள் என்னைப் பொறுத்தவரை கடினம் என்று சொல்லமாட்டேன். கற்கத் தொடங்கினால் விறுவிறுப்பாகச் செல்லும்.

சிகரம் : தமிழ் மொழி வளர்ச்சியில் சாதாரண மக்களுக்கு அக்கறை உள்ளது எனக் கருதுகிறீர்களா?

பாலாஜி : அக்கறை இருந்து எதையும் செய்கிறார்களோ இல்லேயோ, பயன்பாடு கண்டிப்பாக மொழியை வளர்க்கிறது; அவர்கள் அறிந்தும் அறியாமலேயும்! எனில் சாதாரண மக்கள் மொழிவளர்ச்சி குறித்தெல்லாம் தனிப்பட்ட முறையில் சிந்திக்கிறார்களா என்பது ஐயத்திற்குரியதே!

சிகரம் : இந்த சாதாரண மக்களை எவ்வாறு நமது மொழி வளர்ச்சிப் பயணத்தில் இணைத்துக் கொள்வது?
பாலாஜி : ஊடகங்கள், வலைப்பதிவு, இணையதளம் இவையெல்லாம் மனம் வைத்தால் நடக்கும். மொழியின் பயன்பாட்டைத் தவிர மொழிவளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை முதலில் சிந்தித்தல் வேண்டும். இதைவிட சிறப்பான ஒரு செயல், நம் தாய்மொழியின் சிறப்பு குறித்து நாம் பெற வேண்டிய அறிவு. தமிழ் மொழியில் பண்டுமுதல் என்னவெல்லாம் இருந்து வந்திருக்கிறது என்ற அறிவு தேவை! அதைவிடவும் முக்கியம் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் அடிப்படையாக சரியான முறையில் தமிழ் பேச, எழுத அறிந்து கொள்வது.

சிகரம் : தமிழ் மொழி ஆர்வலர்கள் பரவலாக உலகெங்கும் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் இவர்களை ஒன்றிணைக்க யாரும் முயற்சி எடுக்கவில்லையே?

பாலாஜி : ஆம்! அது வருத்தததிற்குரிய செய்திதான்! தமிழார்வலர்கள் ஒன்றிணைந்தால் ஒரு முன்னேற்றம் ஏற்பட ஏதுவாகும்!

சிகரம் : இக்காலத்தில் மரபுக் கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே?

பாலாஜி : காரணம் கல்வி முறைதான்! கட்டற்ற கவிதை முறை ,கவலையற்று எழுதலாம்! இலக்கணம் சரியான முறையில் கற்பிப்பாரில்லை! இலக்கணம்தானே எழுத்து முறையில் கட்டுப்பாட்டை விதித்து எழுத்தை நெறிப்படுத்தும்! அது இல்லாத காரணத்தால் மரபுக் கவிதையில் நாட்டமில்லை!

சிகரம் : தனித்தமிழில் பேசுவது கடினமானதா?

பாலாஜி : கடினம் என்று சொல்லமாட்டேன். சற்று பழக வேண்டும். ஆனால் ஆங்கிலத்தின் பயன்பாடு என்பது ஊறிப்போய்விட்டது! கூடியமட்டும் தனித்தமிழில் பேச முயற்சி செய்யலாம். சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் பேசும்போது உடனே கிடைக்காது போய்விடும்!

சிகரம் : பிறமொழி இலக்கியங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?

பாலாஜி : பிறமொழி இலக்கியங்கள் என்று சொன்னால் எனக்கு மிகச் சிறிதளவு தெரிந்தது மலையாளம் பற்றி மட்டுமே! நல்ல தெளிவான சிந்தனை உள்ள எழுத்தாளர்கள் அங்கு உண்டு. தகழி சிவசங்கரன் பிள்ளை அவர்களின் சில கதைகள் தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன.

சிகரம் : சமூக வலைத்தளங்கள் எனப்படும் பேஸ்புக், வாட்ஸப் போன்றவை வரமா? சாபமா?

பாலாஜி : வரமாக வந்தவை என்றே நான் கொள்கிறேன்! ஆனால் அதை சாபமென்று சொல்லும் நிலக்கு வந்துவிட்டது! நல்லதை எடுத்து அல்லதை விடல் வேண்டும்! அவ்வளவே!

சிகரம் : நீங்கள் இறுதியாக எமது வாசகர்களுக்கு / மக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?

பாலாஜி : வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது இது ஒன்று தான்! தாய் மொழியாகிய தமிழை கசடறப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் முதலில் ! பிறகு ஓரளவுக்காவது படிக்கவும் எழுதவும் கூட ! சிந்திப்பது தமிழில் இருந்தால் விரைவில் தானாகவே எழுதவும் கசடறப் பேசவும் எழுதவும் இயலும்! பிற மொழிகளைக் கற்பது மிகவும் தேவை! எனில் தாய்மொழியை மறக்காதீர்கள்!சிகரம் : நல்லது. உங்கள் சிறந்த ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி!

பாலாஜி : நான்தான் நன்றி செல்லவேண்டும்

சிகரம் : வணக்கம் 

பாலாஜி : வணக்கம்

படைப்பாளி பாலாஜி ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்

#பாலாஜி #சிகரம் #நேர்காணல் #SIGARAMCO

Tuesday, 19 December 2017

காலம் வரவேண்டும் !

கையேந்தி வந்தவரை
கைவிரித்து மறுத்து விடும்
கடும் மனம் எனக்கில்லை
கொடுப்பதும் கூடுதில்லை

நேரம் அறியாமல்
நினைத்தவுடன் கொடுத்து விட்டு
நாளைய பொழுதில்
நமது பாடுபார்க்க வழியின்றி
நொடித்து நிற்க முடியாமல்
நெஞ்சம் தடுமாறி
நினைவுகளில் கணக்கெழுதி
நீட்டுவோமா கரங்களை
என்றும் யோசித்து
நடக்காது என்று சொல்லி
அனுப்புவதே உசிதமோ
என்றே எண்ணம் குழம்பி
எதைச் செய்வோம் எனப் புரியாமல்
மொத்த மூளையும் குழம்பி
மௌனமாய் சில வேளை
மாற்றம் உரைப்பேன்
பொல்லாத மனதுக்குள்
பக்தியோடு கருணையும்
பக்கத்தில் வந்து எழுப்புவதால்
போவென்று சொல்லித் துரத்தி
பதைக்க விடவும் முடிவதில்லை
பாரதி யாக நானில்லை
பானை அரிசியை அள்ளிக் கொடுத்து
பார்த்து ரசித்துப் பாட்டுப் பாட
பிள்ளைகள் வயிற்றை
பட்டினி போட முடியாதே

அள்ளி வழங்கும் அறம் செய்ய
ஆசை நெஞ்சில் உண்டு தான்
அதற்கேற்ற நிறை செல்வம்
எங்கிருந்து யான் பெற

கேட்டு யாரும் வருகின்ற காலம்
கொடுக்கும் வழி திறக்க முடியாமல்
கேடு கெட்ட என் திண்டாட்டம்
கொட்டிவிட வார்த்தை இல்லையே

இருப்பதைக் கேட்டுக் கொடுக்க முடிந்தால்
இனிப்பது
என்னவோ உண்மையே
இது முடியாதென்று அனுப்பிய பின்னே
இரவுத்தூக்கம் தொலைத்து
இதயம் நிம்மதியிழந்து
கொடுமையிலும் கொடுமை
கொடுக்கவியலா நிலைமை

இப்படித் தவித்து
அனுபவத்தில் மலைப்பதால்
சில நாளில் நாளை வா என்னும்
வாதகோனாவேன்
பலவேளைகளில் பிறகொரு நாள்
பார்த்துக் கொடுப்பதாக
வையகோனாவேன்
எனக்கே அரிதென்று
நிச்சயமாக உணர்ந்தால்
முடியாது என்னும்
யாத கோனுமாவேன்
இன்பமாய் வழங்க
எல்லாம் கிட்டிய நாளில்
வழங்கும் கோனாகி
வரமாக சிரித்திருப்பேன்

என்னதான் நான் செய்வேன்
இல்லறத்தாள் ஆகிவிட்டேனே
இங்கே குறை வந்தால்
இல்லாள் பொல்லாதவள்
என்றாகி இனிமை கெட்டு விடுமே

ஆனாலும் ஓர் ஆசை
அள்ளிக் கொடுக்கும் கர்ணன்
ஆசி யில் கொஞ்சம் எனக்கும் கிட்டும்
காலம் வரவேண்டும்

கவிஞர் லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன்


காலம் வரவேண்டும் - சிகரம் 

Sunday, 17 December 2017

பேருவகை கொள் மனமே

பேருவகை கொள் மனமே 
பேருவகை கொள்....
அன்பின் அறிவின் மொழியாம்
தமிழின் மேல்...

போற்றுதல் கொள் மனமே
போற்றுதல் கொள்...
தமிழை போற்றிக் கொள்ள
வாய்ப்பை பெற்றதற்கு...புரிதல் கொள் மனமே
புரிதல் கொள்....
பகைக்கும் பகடை உருட்டும்
படைக்கும்....

தேறுதல் கொள் மனமே
தேறுதல் கொள்....
தமிழினி மெல்ல
சாகுபடியாகும் - என
தேறுதல் கொள்....

கவிஞர் முனீஸ்வரன்
                    17/11/17

பேருவகை கொள் மனமே  - கவிதை 

#கவிதை #முனீஸ்வரன்

வென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு !

அனைவருக்கும் வணக்கம்!

மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & 2 வரும் புத்தகக் கண்காட்சி அன்று வானதி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாவது பாகம் விரைவில் வெளியாகும்.

பொது யுகத்திற்கு முந்தைய காலத்தில் நடைபெற்ற போர்களில் தலைச்சிறந்த போராக அனைவராலும் கருதப்படுவது பாரசீகர்களின் யவனப் படையெடுப்பு. பாரசீக மன்னன் டேரியஸ் யவனத்தை நோக்கிப் படையெடுத்த வேளையில் அவனைத் தடுத்து நிறுத்தியவர்கள் ஸ்பார்டா அரசன் லியானிடஸ் மற்றும் எத்தினீய படைத் தலைவன் டெமிஸ்டேக்ளிஸ். வரலாறு போற்றும் மாவீரர்கள் இவர்கள்.
பாரசீகர்கள் யவனத்தை நோக்கி நிகழ்த்திய போரை விடவும் பெரும் போர் மோரியரின் தமிழகப் படையெடுப்பு. ஸ்பார்டா அரசன் லியானிடஸ் மற்றும் எத்தினீய படைத் தலைவன் டெமிஸ்டேக்ளிஸ் ஆகியோரை விடவும் மாபெரும் வீரர்கள் சோழ அரசன் இளஞ்சேட் சென்னி மற்றும் துளு நாட்டு மன்னன் கொங்கணக் கிழான் நன்னன். இருவரது வீரமும் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. சென்னியின் வீரத்தினால் நன்னனின் புகழ் மங்கியது. சென்னியின் புதல்வன் கரிகாற் பெருவளத்தானின் புகழினால் சென்னியின் வீரம் வரலாற்றிலிருந்து மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

அசோகவர்த்தனின் மோரியப் பேரரசு மேற்கில் பாரசீகம் முதல் கிழக்கே காமரூபம் வரையும்; வடக்கே இமயம் முதல் தெற்கே கரும்பெண்ணை நதி வரையிலும் பரவியிருந்தது. கலிங்கப் போரை முடித்த அசோகவர்த்தன் போர் புரிவதையே நிறுத்திவிட்டான் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், கலிங்கப் போர் நடைபெற்ற ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகே அசோகவர்த்தன் தனது ‘தம்மா’ எனும் பௌத்த மதக் கொள்கையைக் கடைபிடிக்கத் தொடங்கினான். அன்றைய நாவலந்தீவில் மோரியப் பேரரசனுக்கு பணியாத இரு நிலப்பரப்பு உண்டெனில் அவைகளில் ஒன்று கலிங்கம் மற்றொன்று தமிழகம். அசோகவர்த்தனின் கலிங்கப் போருக்கும் அவனது பௌத்த மதத் தழுவலுக்கும் இடைப்பட்ட அந்த ஒன்றரை வருட காலத்தில் பெரும் போர் தென்னகத்தில் நடைபெற்றிருக்கிறது என்பதற்கான குறிப்புகள் நமது சங்க இலக்கிய நூல்களான புறநானூறு, அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றில் கிடைக்கின்றன.

‘மோரியப் பேரரசுகளும், தமிழ் அரசுகளும் நட்பு நாடுகளாக விளங்கின. ஆதலால் தான் மோரியப் பேரரசன் அசோகவர்த்தனும், அவனது தந்தை அமிர்தகாரன் பிந்துசாரனும் தமிழ் அரசுகளின் மீது படையெடுக்கவில்லை’ என்று பல வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்துவிட்டுக் கடந்துவிடுகிறார்கள். ஆனால், அதே மோரியரின் காலகட்டத்தில் தமிழர்கள் ஒருங்கிணைந்து மொழிபெயர் தேயத்தில் நிலை நிறுத்தியிருந்த சோழர், சேரர், பாண்டியரின் மூவேந்தர் கூட்டுப் படை பற்றிக் கருத்தில் கொள்வதில்லை.மோரியப் பேரரசுக்கும், தமிழ் அரசுக்கும் இடையில் இணக்கமான சூழல் நிலவியிருந்தால் கரும்பெண்ணை நதிக்கு அருகில் மொழி பெயர் தேயத்தில் சோழர், சேரர், பாண்டியர் மூவரும் இணைந்து பெரும்படையை எதற்காக நிலை நிறுத்தியிருக்க வேண்டும்? அதற்கான முகாந்திரம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடாமலே பலர் கடந்து சென்றுவிடுகிறார்கள்.

வரலாற்று ஆய்வாளர்களின் பாராமுகத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்கையில் ஒரே ஒரு காரணம் மட்டுமே தென்படுகிறது. நாவலந்தீவின் பெரும் நிலப்பரப்பை உள்ளடக்கிய மோரியப் பேரரசு தமிழ் அரசுகளை வீழ்த்த இயலாமல் போரில் தோற்றதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பதை விடவும் வேறு காரணம் கிடைக்கக் மறுக்கிறது.

மோரியரின் தமிழகப் படையெடுப்பு பிந்துசாரனின் காலத்திலும் நடைபெற்றிருந்தாலும்; அசொகவர்த்தனின் கலிங்கப் போரில் தொடங்கி அவன் பௌத்த மதத்தைச் சரணடையும் அந்த ஒன்றரை வருட காலத்தை நான் வென்வேல் சென்னியின் கதைக் களமாகக் கொண்டிருக்கிறேன். வரலாற்று ஆய்வாளர்களின் குறிப்புகளையும், எண்ணங்களையும் சுட்டிக் காட்டாமல் சங்க இலக்கியங்கள், அசோகனின் சில கல்வெட்டுகள் மற்றும் காரவேலனின் யானைக்குகைக் கல்வெட்டு ஆகியவற்றின் நேரடித் தகவல்களிலிருந்தும், அத்தகவல்களின் காரண அனுமானங்களின் அடிப்படையிலும் ‘வென்வேல் சென்னி’ புதினத்தைப் புனைந்திருக்கிறேன். கிடைத்த ஆதாரங்கள், அடிப்படைக் குறிப்புகள் ஆகியவற்றை அனைவருக்கும் பயன்படும் நோக்கில் ஆங்காங்கே அடிக்குறிப்புகளில் பகிர்ந்திருக்கிறேன்.

எனது முதல் புதினமான வானவல்லி’யை ஆதரித்ததைப் போன்று வென்வேல் சென்னியையும் வாசகர்கள் ஆதரிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

thanks to :
Wrapper art : Shyam Sankar
Wrapper design : Haris Guhan
Book layout design : Sivagami Ishwarya (Senthil)

Who support lot and Special thanks to :
Bhavani Bhavani, Sakthi Sree, Sundaralingam Sankaravelu, சிவரஞ்சனி சதாசிவம், Vetri Selvan.

வென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு !
 

Monday, 11 December 2017

குறளமுதம் - 0001

அறத்துப்பால் - முதலாவது அதிகாரம்

கடவுள் வாழ்த்து  - குறள் #1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

விளக்கம் :

உலகமொழிகள் அனைத்தும் 'அ' என்னும் ஒலியையே முதல் ஒலியாக கொண்டுள்ளன. அதுபோல் உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் கடவுளையே முதல்வனாகக் கொண்டுள்ளன.
என் வரிகள் :

அன்பின் முதல் எழுத்து
அன்னையின் முதல் எழுத்து
உயிரெழுத்துக்களின் முதல் எழுத்து

உலகமொழிகளின் முதல் எழுத்து

சிகரம் தொடும் சிறப்பெழுத்து

அகரத்தின் முதல் எழுத்து
'அ' என்ற சிறப்பெழுத்து
எழுச்சி பெற்ற எழுத்துக்களுக்கு

தலைவன் நீ எனில்
ஓர் அணு முதல்
ஏழறிவு கொண்ட உயிர் வரை
புவிவாழ் மானுடத்திற்கு

உயிர் தந்த உயர்வும் - நீயன்றோ
எம் இறைவா
மாக்களுக்கும்
மண் வாழ் மக்களுக்கும்


உயிர் கொண்ட ஆதி முதல்
சோதி இழக்கும் அந்தம்வரை
துணை செய் 'கோ'வே

நீயன்றோ முதன்மை

ஆதி இறைவா
நீயன்றோ முழுமுதற் கடவுள் !


பதிவர் - பௌசியா இக்பால் 

குறளமுதம் 0001 - சிகரம் 

#திருக்குறள் #குறளமுதம் #சிகரம் #தமிழ்கூறும்நல்லுலகம்

Sunday, 10 December 2017

வாழ்க்கை!

தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!

இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த கேடுகெட்ட சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.

அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.

இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனை பாதிக்கின்றன. இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!

எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!

அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!

அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது, எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது!!

இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!

நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!

ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் கண்டுகொள்ள வேண்டும்?

யார் இவர்கள்?

என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்?

நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!

அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!

அதுவும் வெகு தொலைவில் இல்லை!

சர்வமும் ஒருநாள் அழியும்!

மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!

கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்று தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.

வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!

தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.

நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதேபோல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப்போவதில்லை. இது தான் வாழ்க்கை.

"பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்"

படித்ததில் பிடித்தது.

பதிவர் அகரம் பார்த்திபன் 


Thursday, 7 December 2017

வேண்டாம்!

மனம் நோகும் காதல் வேண்டாம்,
மங்கையின்பம் தேடவேண்டாம்,
பெண்ணென்ற போதை வேண்டாம்,
பெருங்குழியில் விழுந்திட வேண்டாம்!

பணம் தன்னை தேடவேண்டாம்,
பதவி தேடி ஓட வேண்டாம்!
பிறர் காலை வாரிட வேண்டாம்!
கோபம் கொண்ட நெஞ்சம் வேண்டாம்,
வஞ்சகத்தை சுமக்க வேண்டாம்,
பிறர் உயர்வில் பொறாமை வேண்டாம்!

அன்பு தன்னை மறக்க வேண்டாம்,
அனைத்து உயிர்க்கும் தொல்லை வேண்டாம்,
இயந்திரமாய் வாழ வேண்டாம்,
வாழ்க்கை தன்னை தொலைக்க வேண்டாம்!

-கவிஞர் கவின்மொழிவர்மன்

வேண்டாம் - கவிதை - சிகரம்

#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #வேண்டாம்

Wednesday, 6 December 2017

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 குமாரபாளையம், தமிழ்நாடு, இந்தியாவில் மார்ச் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. மாநாடு தொடர்பான முழுமையான விபரங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும். மாநாட்டில் பங்குபற்ற, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்பும் தமிழார்வலர்கள் 'சிகரம்' இணையத்தளத்தை தொடர்புகொள்ளுங்கள். மேலதிக விவரங்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்!


இன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 02

வணக்கம் நண்பர்களே!

இலக்கணம் :

ஒரு மொழிக்குச் சிறப்பையும் அழகையும் கொடுப்பது அம்மொழிக்கான இலக்கணம் தான். இலக்கணம் என்பது மொழியைத் தவறில்லாமல் கற்க பயன்படும் ஒரு விதிமுறையாகும். இந்த விதிக்கு கட்டுப்பட்டுத்தான் மொழிகள் இயங்கும். உயிருள்ள எந்த ஒரு மொழிக்கும் இந்த இலக்கணம் இன்றியமையாதது. நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றளவும் “கன்னித்தமிழ்” என்ற சிறப்பைப் பெற்று தமிழ்மொழி தன் இளமையும் இனிமையும் மாறாமல் இருப்பதற்கு காரணம் நம் இலக்கணமே.

முத்தமிழ் இலக்கணம் :

உலகில் உள்ள பல்வேறுபட்ட மொழிகளில் இலக்கணம் என்பது எழுத்துக்கும், சொல்லுக்கும் பொருளுக்குமாக இருக்கும். ஆனால் நம் மொழியாம் தமிழ்மொழியில் இயல், இசை மற்றும் நாடகம் என மூன்று பிரிவுகளைக் கொண்டு முத்தமிழ் என்று போற்றப்படுகிறது. இம்மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனியே இலக்கணம் உண்டு. முத்தமிழுக்குமாய் இலக்கணம் கொண்ட நூல் அகத்தியம் ஆகும்.இசைத்தமிழ் இலக்கணம் :

இசைத்தமிழ் பண்ணிசைத்துப் பாடும் தமிழ். இசைக்கான இலக்கணம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இனிமையாக இயற்றப்படுகிறது. இயற்றமிழில் தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்களும், அப்பர், சம்பந்தர் தேவாரப் பாடல்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பண்ணிசைகளும், அருணகிரிநாதர் , வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முத்துத் தாண்டவர் போன்றோரின் பாடல்களும் இசைத்தமிழே.

நாடகத்தமிழ் இலக்கணம் :

நாடகத்தமிழ் கூத்து பற்றி வழங்கும் தமிழ். தமிழ் மரபில் கதை தழுவிவரும் ஆட்டத்தை கூத்து என்பர். இக்கூத்து தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இயற்றமிழ் இலக்கணம் :

செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதியே இயற்றமிழாகும். இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இயற்றமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணி என்பதாகும்.

இயற்றமிழின் ஐந்து வகைகளைப் பற்றியும், இவ்விலக்கணம் எவ்வாறு இலக்கியத்துடன் தொடர்பு கொண்டது என்பதையும் அடுத்த பதிவில் காண்போம்!!!

(தொடர்கிறேன்...)

இப்பதிவு பதிவர் பௌசியா இக்பால் அவர்களின் படைப்பாகும்.

இன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 02 - பௌசியா இக்பால் - சிகரம் 

#சங்கஇலக்கியம் #இலக்கியம் #ஆய்வுக்கட்டுரை

Popular Posts