Sunday, 25 February 2018

அணிகளுக்கான இ-20 கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.25

கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபது-20 போட்டிகளின் இன்றைய நிலையிலான சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கும் தரப்படுத்தல் பட்டியல்:01 - பாகிஸ்தான் 

02 - அவுஸ்திரேலியா 

03 - இந்தியா 

04 - நியூசிலாந்து 

05 - மேற்கிந்தியத் தீவுகள் 

06 - இங்கிலாந்து 

07 - தென்னாபிரிக்கா 

08 - இலங்கை 

09 - ஆப்கானிஸ்தான் 

10 - பங்களாதேஷ் 

அடுத்து வரவுள்ள சுதந்திரக்கிண்ணத்தையும் (NIDHAHAS TROPHY) அயர்லாந்துக்கெதிரான ஒற்றை இருபது-20 போட்டியையும் வென்றாலும் இந்தியாவுக்கு தரப்படுத்தலில் மாற்றம் இல்லை. ஆனால் பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் தோற்றால் இரண்டாமிடம் இந்தியா வசமாகும். சுதந்திரக்கிண்ணத்தை (NIDHAHAS TROPHY) இலங்கை அணி கைப்பற்றினால் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கும் தரப்படுத்தலில் மாற்றம் இல்லை. மாற்றங்களை அறிந்துகொள்ள சிகரத்துடன் இணைந்திருங்கள்!

#070/2018 
2018/02/25
பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்ஆடுகளம் #கிரிக்கெட் #சிகரம்செய்திகள் #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #SIGARAMSPORTS #CRICKET #ICC #ICCRANKINGS #T20I  


இ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா!

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது இருபது-20 போட்டியிலும் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தைத் தன் வசப்படுத்தியுள்ளது இந்திய அணி. 655வது போட்டியாக நேற்று (பிப் 24) கேப் டவுன், நியூலாண்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபது-20 போட்டி இடம்பெற்றது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களைப் பெற்றது இந்தியா. ஷிக்கார் தவான் 47 ஓட்டங்களையும் சுரேஷ் ரெய்னா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். கார்ல் ஜூனியர் தாலா மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றிக்கொண்டார். தென்னாபிரிக்க அணியால் 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. டுமினி 55 ஓட்டங்களையும் ஜோன்கர் 49 ஓட்டங்களையும் பெற்றனர். புவனேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டார். 

இந்திய அணி ஏழு ஓட்டங்களால் வெற்றி பெற்று இருபது-20 தொடரை 2-1 என்னும் அடிப்படையில் கைப்பற்றிக்கொண்டது. ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னாவும் தொடரின் நாயகனாக புவனேஷ்வர் குமாரும் தெரிவாகினர். 

தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை 5-1 கணக்கிலும் இருபது-20 தொடரை கைப்பற்றிக்கொள்ள தென்னாபிரிக்க அணி டெஸ்ட் தொடரை 2-1 கணக்கில் கைப்பற்றியது. இலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு இருபது-20 தொடரை இந்தியா கைப்பற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

#069/2018
2018/02/25
இ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா!    
https://www.sigaram.co/preview.php?n_id=296&code=9cLer4G2  
பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்செய்திகள் #INDvSA #T20I #SIGARAM #SIGARAMCO #SIGARAMSPORTS #SIGARAMNEWS
#சிகரம் கவிக்குறள் - 0010 - திறன்மிகு அரசு!

திருக்குறள்
அதிகாரம் 64
அமைச்சு

****

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்
வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு (குறள் 632)

****

திறன்மிகு அரசு!

****

அஞ்சாமை
மனத்தில் கொண்டு
அகத்தினில்
தூய்மை கொண்டு
வகையுடன்
கல்வி கற்று
வாழ்ந்திடும்
மக்கள் காத்து,

செயல்களில்
மாற்றார் போற்றச்
செய்துமே
சிறந்து நின்று
சிறுமைக்கு
வெட்கப் பட்டு
அருமிகு
அறிவைப் பெற்று,
இருப்பவர்
தானே இங்கே
அமைச்செனும்
தகுதி உள்ளோர்
இவையெலாம்
இல்லா ராகில்
இழிவினை
ஏற்க நேரும்,

தன்பெண்டு
பிள்ளை காத்து
தனக்கெனத்
திருடிச் சேர்த்து
வாழ்ந்திட
முனைந்தா ரானால்
வசைவாங்கி
அழிய நேரும்,

தகுதியே
இல்லார் தம்மை
தலைவராய்த்
தேர்ந்தோ மானால்
மிகுதியாய்த்
துன்பம் ஓங்கும்
மீளவே
முடியா தென்றான் !

****

வன்கண் - உறுதிப்பாடு.

ஆள்வினை - பெருமுயற்சி.

மாண்டது - பெருமை பெற்றது .

*****

மானம்பாடி புண்ணியமூர்த்தி.
17.02.2018.

#068/2018 
2018.02.25 
திறன்மிகு அரசு!      
https://www.sigaram.co/preview.php?n_id=295&code=GX68UNSl    
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி   
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை  
#சிகரம்   


Saturday, 24 February 2018

இலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்!

எனக்கு சிறுவயதில் இருந்தே பயணத்தில் ஆர்வம் இருந்து வருகிறது. இதுவரை உள்ளூரை மட்டும் சுற்றித் திரிந்த நான் இந்த முறை கடல் கடந்து பக்கத்து நாட்டிற்கு அலுவல் பணியின் காரணமாக வர நேர்ந்தது. ஓரிடத்தில் தொடங்கி மற்றொரு இடத்திற்கு போகும் போது அதனைப் பற்றி சிறு குறிப்புகளை எழுதுவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் குறிப்புகள் எடுக்காமல், பயணம் மேற்கொண்டது முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை யாரெனும் ஓர் முகம் எனக்கு உதவியாக இருந்து கொண்டு தான் உள்ளது.

சரி வாருங்கள் நாம் மேலும் பயணிப்போம்.ஒன்றை ஒன்று பின்னிக்கொள்ளும் மேகம்,
அதைப் பிழிந்து குடிக்க ஏங்கும் தாகம்,
மேகங்களுக்கு குடை விரிக்கும் வானம்,
அதன் நிழலில் பறக்கிறேன் நானும் சென்னையிலிருந்து இலங்கையை நோக்கி.

பகல் நேரத்தில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்த நான் இங்குள்ள ஓர் சகோதரரின் உதவியுடன் டாக்சி மூலம் விடுதியை வந்தடைந்தேன். இரவு 7 மணியளவில் இங்குள்ள அலுவல் பணிக்காக புதிதாக அறிமுகமான நண்பர்களுடன் யாழ்ப்பாணத்தை நோக்கி எனது பயணம் தொடங்கியது.

நின்ற நிலா தேய்ந்ததென்று எனது விழியிரண்டும் தான் தேட, வெள்ளியில் முளைத்த முத்துக்களாய் பல நட்சத்திரங்கள் நிலவுடன் சேர்ந்து கொண்டு வானில் இருந்து எங்களை கண்டு கண் சிமிட்டும் ஓர் அழகிய இரவில் பிறைமதி பின் தொடர பனி பொழிவில் எனது பயணம் யாழ்ப்பாணம் நோக்கி அமைந்தது.

கிட்டத்தட்ட 405 கீமீ தொலைவு. செல்லும் இடமெங்கும் அடர்ந்த வனம் தான் காட்சியளிக்கிறது. யானைகள் எல்லாம் சாலையில் வரிசையாக சென்றதை கண்ட போது இது சாதாரண பயணம் அல்ல சாகச பயணம் தான் என உணர்த்தியது.

விடியலில் யாழ்ப்பாண தமிழ் பேரன்புடன் என்னை வரவேற்றது. அடடா யாழின் ஓசையை விட யாழ்ப்பாண தமிழ் இனிமையானது தான்.

முதல் நாளில் எங்கும் செல்ல நேரமில்லை. இரண்டாம் நாள் அதிகாலையில்
நல்லூர் கந்தசாமி கோவிலுக்கும், நாக விஹாரத்திற்கும் சென்று வந்தேன். நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் நல்லூர் விளங்கியது.யாழ்ப்பாண அரசிற்கு சிறப்புச் சேர்த்துள்ள நல்லூர், யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது (கை ஊனமான நிலையில் உள்ளதால் இந்த அரசன் கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டான்).எனினும் 15ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்த சிங்கள அரசின் பிரதிநிதியும், பிற்காலத்தில் ஸ்ரீ சங்கபோதி 7ஆம் புவனேகபாகு என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்ட கோட்டை அரசனான ஸ்ரீ சண்முகப்பெருமாள் என்பவனால் இக்கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

நல்லூர் கந்தசுவாமி கோவில் முத்திரைச் சந்தியிலுள்ள ‘குருக்கள் வளவு’ என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரில் இருந்த மிகப்பெரிய கோவில் இது என போர்த்துக்கேயர்களுடைய குறிப்புக்களில் இருந்து அறியமுடிகிறது.

அத்துடன், யாழ்ப்பாண மன்னனான ஆரியச்சக்கரவர்த்திகளின் அரண்மனையை அண்டிய பகுதியிலேயே பழைய கோவில் அமைந்திருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் நல்லூரை மையமாக வைத்து கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், தெற்கில் கைலாசநாதர் கோயிலையும், மேற்கில் வீரமாகாளி அம்மன் கோயிலையும், வடக்கில் சட்டநாதர் கோயில் என ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் அரண்களை அமைத்திருந்தார்கள். கோவிலினுள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

ஐந்து நாட்கள் என்னால் முடிந்த வரை வேலையினுடே அனைவருடனும் பல விடயங்களை பேசினேன். தமிழகத்தில் இருந்து வருபவன் என்ன கேட்பானோ அதற்கான விடையும் கிடைக்கத் தான் செய்தது.

நான்காவது நாள் மாலையில் என்னை படகில் ஓர் தீவிற்கு அழைத்து சென்றனர். வாழ்வில் மறக்க முடியாத தருணம். கடலில் இரண்டு மணி நேரம் பயணம் செய்யும் அனுபவம் கிட்டியது. அலைகடலில் சிறிய படகில் நீர்த்துளிகள் முகத்தில் தெறிக்க அலைகள் ஆர்ப்பரிக்க படகை செலுத்தினார்கள். அடடா எவ்வளவு அழகாக மீனை வலை கட்டி பிடிக்கிறார்கள்? பிடித்தது மட்டும் இல்லாமல் அவற்றை எங்களுக்காக அவரது தாயிடம் தான் பிடித்த 25-30 மீன்களை கொடுத்து சமைத்து தந்து பறிமாற வயிறு மட்டும் அல்ல மனமும் நிறைந்தது. நான்கு நாட்கள் பழகிய என்னிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்தும் இவர்களுக்கு நன்றியை மட்டும் சொல்வது முறையாகுமா?
எந்தன் இதயத்தில் ஆழ பதிந்துவிட்டன அவர்களின் நினைவுகள் என்றும் பசுமையாக... மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புவிற்கு இரயிலில் பயணம் செய்யும் அனுபவம் கிட்டியது. அடர்ந்த வனத்தின் ஊடேயும், கடற்கரையினுடேயும், ஆறுகள் மற்றும் வயல்களின் ஊடேயும் பயணிப்பது ஓர் பெரும் உற்சாகத்தை கொடுத்தது.

இதுவே தொடர்ந்து இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இடையில் 25 நிமிடங்கள் செல்லும் வழியில் வனமும், ஓர் மனித நடமாட்டமும் இல்லை. போரின் முடிவில் நடந்த கோர காட்சிகள் இன்னும் சுவடுகள் மறையாமல் கண்ணெதிரே... கண்களின் ஓரம் கண்ணீர் வந்ததை சிறிது நேரத்திற்கு தடுக்க முடியவில்லை. முகாமில் இருக்கும் மக்களுக்கு நகங்களை பிடுங்குவதும், நகங்களின் இடையே ஊசியை நுழைப்பதும் சர்வ சாதரணமாக நடக்கிறது. மேலும் விவரிக்க வார்த்தைகள் இல்லை.இரண்டு நாட்கள் அலுவல் பணியின் காரணமாக கொழும்பில் தங்க நேர்ந்தது. அதனூடே அங்குள்ள கடற்கரையின் அழகையும், உலக வர்த்தக மையத்தையும் மற்றும் சில இடங்களையும் ரசித்தேன்.இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் எனது தாத்தா (தந்தையின் தந்தை) என்னை இலங்கையில் சில இடங்களுக்கு அழைத்து செல்வது போல் கனவு. காலையில் தந்தையிடம் விவரத்தை கூற அவருக்கு ஒரே ஆச்சரியம். இதுவரை நான் அவரின் புகைப்படத்தை தவிர நேரில் கண்டதில்லை. இலங்கையில் சுமார் 30 வருடங்கள் பணியாற்றி இருப்பதாக தந்தை கூறினார். இங்கு இலங்கையின் பல இடங்களுக்கு அவரே எனக்கு வழிகாட்டி செல்வது போல் தோன்றும் இந்த நிலைக்கு எனது பிரமையா அல்லது நிகழ்வுகளின் தொகுப்பா என வரையறுக்க முடியவில்லை.

அவர் வேலை செய்த நிறுவனத்தை தேடி சென்றேன். அவரை பற்றிய தகவல்களை ஆர்வத்தில் கேட்க காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் இன்றைய தலைமுறைகள் அறியவில்லை என தெரிந்தது. என்றோ ஓர் நாள் நான் நடந்த வீதிகளில் அவரும் நடந்திருப்பார் தானே? முப்பது வருடங்கள் அந்த காலங்களில் சாதாரணமாக கடந்துவிடாது. தனது பேரன் தான் வாழ்ந்த இடத்தை நோக்கி வருவான் என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.

இது அவர் வாழ்ந்த மண்.ஓர் வகையில் எனக்கும் சொந்தமான ஊர் தானோ?

கொழும்பில் இருந்து நுவரெலியாவிற்கு நான்கு சக்கர வாகனத்தில் பயணம். நகரத்தின் ஓசை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து காட்டின் ஓசை எழும்பும் கணத்தை கவனித்து பாருங்கள். அழகிய வண்ணம் தரித்த இயற்கை அன்னை,கண்களுக்கு குளுமையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கிறாள்.காதை நிறைக்கும் காட்டின் இசையும், சுவாசத்தை நிறைக்கும் வனத்தின் சுகந்தமும், வெய்யோனின் கதிர்களை புறக்கணித்து உடலில் ஊடுருவும் மெல்லிய குளிரும்!! அடடா வாழ்வின் சொர்க்கம். வனப்பும் செழிப்பும் வளமும் பசுமையும் மலைகளும் நிறைந்த பகுதிகளாகவே கண்களுக்கு எட்டிய தூரம் கவி பாடுகின்றன. கேரளத்தை போன்று இருமடங்கு இயற்கை வளம் நிறைந்துள்ளது எனலாம்.நுவரெலியாவில் தட்பவெப்ப நிலை பகலில் அதிகபட்சமாக 17° யும் இரவில் 6° வரையும் செல்கிறது. நுவரெலியா மலையகத்தில் அமைந்துள்ள ஓர் கண்கவர் நகரமாகும். வானுயர்ந்த மரங்களும், தேயிலை தோட்டங்களும், காய்கறி தோட்டங்களும் கனிகளும் நிறைந்து காணப்படுகின்றது. சற்று உங்கள் கற்பனைகளை தட்டி விட்டால் உங்கள் மனதில் தோன்றும் காட்சிகளை நான் இங்கு ரசித்து கொண்டு இருக்கிறேன்.நுவரெலியாவில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சீதைக்கோவில். அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சுமிடத்தில் நதியின் பிரவாகத்தில் அமைந்துள்ள சீதா எலிய என்ற இவ்விடமே இராவணன் சீதையை சிறைப்பிடித்து வைத்திருந்த அசோகவனம் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அருகில் இருந்த பழைமையான கட்டிடங்களையும், கோல்ப் மைதானத்தையும், குதிரை பந்தய மைதானத்தையும் ஏரியையும் கண்டு ரசித்து வந்தேன்.வானம் கிழிந்து போனது, வீதிகளை மேவி வெள்ளம் வீடுகளில் முட்டியது, மரமெல்லாம் பாறி நிலமெல்லாம் நீர் கசிவாய் சிதம்பியது கடும் குளிருடன்!

பனங்காய் பலகாரம், பயித்தம் பலகாரம், பருத்திதுறை வடை, அப்பம், பருத்திதுறை தோசை, பிட்டு-சம்பல்-சொதி, தொதல், கிழங்கு ரொட்டி, கொத்து ரொட்டி, சோறு-கறி, அண்ணாசி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, மாங்கனி பழம் போன்ற உணவுகளை யாழ்ப்பாணத்தில் சுவைக்க மறவாதீர்கள்.கொழும்பில் Ministry of Crab உணவகத்தில் நண்டு வகைகள், இறால் மற்றும் ஆக்டோபஸ் போன்ற கடல் உணவு வகைகளை ருசி பார்க்கலாம். நுவரெலியாவில் காலை, மதியம், இரவு என அனைத்து வேலைகளும் Pizza, burger, fried rice போன்ற உணவுகள் கிடைக்கப்பெறும். 

மொத்தத்தில் இலங்கை பயணம் ஓர் மறக்கவியலா பயணம்!

இலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்!

#067/2018
2018.02.24
இலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்!     
https://www.sigaram.co/preview.php?n_id=294&code=uHDqMm5T  
பதிவர் : சரவண மணியன் 
#சிகரம் #பயணம் #பயணஅனுபவம் #இலங்கை #மலையகம் #ஈழம் #SIGARAM #SIGARAMCO #TRAVELLING #LKA #SRILANKA #CEYLON #MALAIYAGAM #EALAM

Friday, 23 February 2018

தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மாலை ஐந்து மணிக்கு ஜெய்நகர் பூங்காவில் (கோயம்பேடு பேரூந்து நிலையம் எதிரில்) இடம்பெறவுள்ளது.

வரவேற்புரை : முனைவர் செ. அய்யாப்பிள்ளை

முன்னிலை : கவிஞர் க.ச. கலையரசன் மற்றும் கவிஞர் எம். சக்திவேல்கவியரங்கத் தலைமை : கவிஞர் செங்கைசண்முகம்

கவியரங்க தலைப்பு : சங்கே முழங்கு

36 கவிஞர்கள் கவியரங்கத்தில் கவிதை வாசிக்கவுள்ளனர்.

நன்றியுரை : ஆன்மீகச்சுடர் ஈ. ஆறுமுகம்

தொடர்புகள் :
முகவரி : எண் 01, நேரு நகர், மண்ணூர்ப்பேட்டை, சென்னை - 50.
செல்லிடப்பேசி : 9551547027

#சிகரம் #தமிழ் #கவிதை #கவியரங்கம் #நிகழ்வுகள்

#066/2018
2018.02.23
தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம் 
https://www.sigaram.co/preview.php?n_id=293&code=FYH5iWtJ  
பதிவர் : தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்
#சிகரம் #தமிழ் #கவிதை #கவியரங்கம் #நிகழ்வுகள் #SIGARAM #SIGARAMCO #KAVIYARANGAM
#சிகரம்

Thursday, 22 February 2018

மூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை!

இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர், பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் இருபது-20 தொடர் என மூன்றையும் இலங்கை அணி வென்றுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை அணி அதிகளவான போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது. அணி வீரர்களை விதம் விதமாக மாற்றியும் எதுவும் பலன் தரவில்லை. இது இலங்கை அணி மீதும் நிர்வாகத்தின் மீதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இறுதி நடவடிக்கையாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சி வழங்கிவந்த இலங்கையைச் சேர்ந்த ஹத்துருசின்ஹ இலங்கைக் கிரிக்கெட் சபையின் வேண்டுகோளை ஏற்று இலங்கை அணியுடன் இணைந்துகொண்டார்.

அவர் பொறுப்பேற்ற பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் சறுக்கினாலும் பின்னர் சுதாகரித்து எழுந்து நின்று கொண்டது இலங்கை அணி. தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது இலங்கை அணி. வரும் மாதத்தில் இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கவுள்ள இருபது-20 முத்தரப்பு தொடரிலும் இலங்கையின் வெற்றிப்பயணம் தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


பதிவு : சிகரம்
#சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS
#சிகரம்      

Wednesday, 21 February 2018

இ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி!

இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கெதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று தனது இ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று இ-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவற்றில் டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என்னும் அடிப்படையிலும் ஒருநாள் தொடரை இந்திய அணி 5-1 என்னும் அடிப்படையிலும் கைப்பற்றிக் கொண்டன.ஞாயிறன்று இடம்பெற்ற முதலாவது இ-20 போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியது. சுரேஷ் ரெய்னா நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்திய தேசிய அணியில் விளையாடினார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 25 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. இந்திய அணி சார்பில் ஷிக்கார் தவான் 72 ஓட்டங்களையும் தென்னாபிரிக்க அணி சார்பில் ரீஸா ஹென்றிக்ஸ் 70 ஓட்டங்களையும் பெற்று அதிரடி காட்டினர். பந்து வீச்சில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

இன்று இடம்பெறவுள்ள போட்டி தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாகும்.


பதிவு : சிகரம்

#சிகரம் #சிகரம்விளையாட்டு #சிகரம்செய்திகள் #INDvSA #T20I #SIGARAM #SIGARAMCO #SIGARAMSPORTS #SIGARAMNEWS 

Sunday, 18 February 2018

தமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழா - சிறப்பு நேர்காணல்

தமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழாவை முன்னிட்டு சிகரம் இணையத்தளத்தின் சிறப்பு நேர்காணல்:

ஆண்டு விழா நாள் : 28.12.2017

நேர்காணல் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று தினங்களில் நடத்தப்பட்டது.

நேர்காணல் விதிமுறைகள் :

*கேள்விகள் பொதுவில் கேட்கப்படும்.
*சுருக்கமான அதேநேரம் பொருத்தமான பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
*கேள்விகளுக்கான பதில்களுக்கு மறுமொழி அளிப்பதோ விமர்சிப்பதோ கூடாது.
*அனைத்தும் தொகுக்கப்பட்டு சிகரத்தில் வெளியாகும்.
*தேவையான மேலதிக நிபந்தனைகள் பின்னர் இணைக்கப்படும்.கேள்வி 01: 
தமிழ் கூறும் நல்லுலகம் குழு பற்றிய தங்கள் கருத்துக்களையும் குழுவில் இத்தனை நாட்கள் அங்கத்தவராக இருந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மாரிராஜன் : அரட்டைதான் அதிகம் என்றாலும், அதிலும் ஒரு அர்த்தம் இருந்தது. கற்றுக்கொண்டது ஏராளம் என்று பொய்யுரைக்க விருப்பமில்லை. ஆனால் கிடைத்ததை தாராளமாய் பெற்றுக்கொண்டோம். வாசித்த மொழியை நேசிக்கத் தெரிந்தோம். பல வியப்புகளை உட்கொண்டோம். கவிஞர்களை அடையாளம் கண்டோம்.. இனிவரும் காலம் எங்களுக்கே. தமிழுக்கே!

பாலாஜி : வியக்க வைத்த பேரும் உண்டு! இங்கு அன்பால் மனதை விண்டு வைத்த பேரும் உண்டு! தமிழாய் பிறந்தோம் தமிழாய் வளர்ந்தோம் என்பதெல்லாம் சரி ! இங்கு அன்பால் இணைந்தோமே அதுவே நெறி!

கவின்மொழிவர்மன் : முகமறியாத உறவுகளாய் முகவுரைகள் கொடுத்து இனம் மொழி ஏதுமின்றி அனைத்தும் கடந்த அன்புள்ளங்கள் நாங்கள். செய்வன நன்றென்றால் தட்டிக்கொடுக்கும் சான்றோர்கள், உடன்பிறப்பாயினும் வஞ்சகிக்குமிவ்வுலகில் எங்களின் தமிழ்கூறும் நல்லுலகம் வஞ்சனை ஏதுமின்றி அனைவரையும் வாஞ்சையோடு வரவேற்கும் தமிழ்தாய் பிள்ளைகள் நாங்கள்.

திறமைகண்டு போற்றிடுவோம். மடமை கண்டு தூற்றிடாமல் இனிதென உரைத்து நேர்வழிப்படுத்திடும் பெரியோர் வாழும் உலகமிது. அவரவர் பாதையை அவர்க்களிப்போம். இங்கு அனைத்திலும் கூடி தமிழ் வளர்ப்போம்.

கலைவாணி : வாருங்கள் வரவேற்கிறோம் வாழ்த்துங்கள் வளர்கிறோம். இனிய நண்பகல் வேளையிலே குடும்பத்தின் வளர்ச்சியில் எனக்கும் பங்கு தந்தமைக்கு நன்றி. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. அந்த தமிழ்நாட்டினிலே தமிழுக்கு வலு சேர்க்கும் நண்பர்களுடன் தமிழ் கூறும் நல்லுலகத்தில் இணைந்த அந்த நாள் பொன் நாள். அன்பு உள்ளங்கள் கிடைத்தன. வேலை முடித்து வந்தவுடன் யென் விரல்கள் நோக்கிப்போவது வாட்ஸாப்பில் நமது குழுவை நோக்கித்தான். ஒரு சில நேரங்கள் தவறினாலும் மறக்காமல் மறுநாள் பார்க்கத்தூண்டும் உணர்வு. குறைந்த தினமாயினும் நிறைய கற்றுக்கொண்டேன். தமிழ் செயலியையே இங்குதான் கற்றுக்கொண்டேன். நிறைய தமிழ் வார்த்தைகள். ஆச்சரிய பட வைத்த கவிதைகள். சிகரம் நேர்காணல் படைப்புகள், பேட்டிகள். குடும்பத்தினரின் தமிழ் வாக்குவாதங்கள். முடிவில் ஒன்று சேரும் குழந்தை மனம், இன்னும் சொல்ல வரிகள் போதாது. மறக்க முடியுமா!

முத்துகிருஷ்ணன் : சொந்தங்கள் இல்லை எனினும் உள்ளத்தின் தமிழ் சந்தமாக சங்கமித்த பாச மலர்களுக்கு என் நேச வணக்கம். இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே பறந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையில் என் மனம் ஓய்வு பெற அமரும் கிளை தமிழ் கூறும் நல்லுலகம். தொடரட்டும் பயணம் இனிவரும் பயணம் அதிக ஓய்வு அருள்வாய் இறைவா!

சதீஷ் விவேகா : சிறப்பான ஒரு குழு. விடியலில் நுழைந்ததும் இருநுற்றி ஐம்பதில் இருக்கும் செய்திகள். திகைப்பேன். பார்த்தால் அரட்டைகளும் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். அனைத்தும் தமிழைப் பற்றியதாகத்தானிருக்கும். இதுவே பலம் இக்குழுவிற்கு. வாழ்த்துக்கும் ஆசிக்கும் பஞ்சமில்லை, உரிமையாய் கேட்டே பெறுவேன் இது என் குடும்பம் என்ற உணர்வுடன். இதுவே தமிழ் கூறும் நல்லுலகம்.


கேள்வி 2: 
ஒரு மொழியின் வளர்ச்சியில் தொழிநுட்பம் எத்தகைய பங்கை வகிக்கிறது?

கலைவாணி : ஒரு மொழியின் வளர்ச்சியில் தொழில் நுட்பம் அரிய பங்கை வகிக்கிறது. கல்வெட்டுகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் கணிப்பொறிகளில் எழுதப்படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்றே கூறுவேன். கல்லில் இருந்து ஓலைக்கு தாவி அங்கிருந்து காகிதங்களுக்கு தாவிய தமிழ் இப்போது கணினிக்குள் நுழைந்திருப்பது தமிழ் வளர்ச்சியின் அடுத்த நிலை என்றுதான் கூறவேண்டும். கற்றது கையளவு கல்லாதது உலகளவு. இதை மாற்றி இப்படி கூறலாமா கற்றது கடுகளவு கல்லாதது கையளவு. இணையத்தின் வழி கணினியால் தமிழரின் இணைப்பு இணைக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. வெறுங்கை என்பது மூடத்தனம். உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் தாரக மந்திரமாக அறிஞர்கள். திறமைசாலிகள் உழைப்பினை சிப்பிக்குள் முத்தாய் செயல்படுவது இந்த தொழில் நுட்பம் என்பது என் கருத்து.

முத்துகிருஷ்ணன் : இந்த எந்திர யுகத்தில் முன்னேற்றம் புதிய தகவல் தொழில் நுட்பங்களை தகவமைத்து கொள்வதை மிகவும் சார்ந்தது. இருளாக இருக்கும் ஒரு அறைக்குள் சென்று இருளாக இருக்கிறது என்று எவ்வளவுதான் கூக்குரல் இட்டாலும் இருள் நீங்காது. மாறாக ஒரு விளக்கை கொண்டு வாருங்கள் இருள் நீங்கும். விளக்கை போன்றது தான் தொழில் நுட்பம். அதே சமயம் வீட்டை எரிக்கும் அளவு நெருப்பு வேண்டாம்.

முனீஸ்வரன் : மொழியின் வளர்ச்சியில் தொழில்நுட்பம் எவ்வித பங்கும் ஆற்றவில்லை என்பது என் கருத்து. மாறாக மொழியின் வளர்ச்சியை தொழில்நுட்பங்கள் தனக்கான வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்கிறது.

சதீஷ் விவேகா : முக்கிய பங்குண்டு. நம் பண்டைய நூல்களை ஆவணப்படுத்தி அதை இன்றைய தலைமுறைக்கு சேர்ப்பதில் தொழில்நுட்பத்திற்கு முக்கியப் பங்குண்டு.

அருண் பாலசுப்பிரமணியன் : தொழில்நுட்பம் என்பது கணிணி யுகம் மட்டுமல்ல. பனையோலையில் எழுத எழுத்தாணி பயன்படுத்தியதும், அதை ஏடுகளில் அச்சிட்டதும் என தொழில்நுட்பத்தால் மொழி வளர்ச்சிக்கு பெரிய பயனுண்டு. அஃது போல, மொழியின்றி தொழில் நுட்பமும் வளர்ந்திருக்காது.


கேள்வி 3 :
மொழி சமூகத்தின் கண்ணாடி - இக்கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா?

முனீஸ்வரன் : மொழி அதை சார்ந்த மக்களின் உயிர் நாடி. அது பிரதிபலிப்பதில்லை உள்ளிருந்து வெளிப்படுவது.

சதீஷ் விவேகா : சமூகத்தின் கண்ணாடி அவர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு தான்.

பாலாஜி : ஊடகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். சமூகத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்த உதவுவது மொழி!

கலைவாணி : கண்டிப்பாக மொழி என்பது சமூகத்தின் கண்ணாடி என்பதை திட்டவட்டமாக அறிவுறுத்த விழைகிறேன். நாம் ஒவ்வொருவரும் தொடர்பு கொள்ள மொழி மிகவும் அவசியம். தற்போது குழந்தைகளை எடுத்துக்கொள்வோம். அவர்களுக்கு எல்லா பாடங்களையும் புரிந்து கொள்வதற்கு மொழி அவசியமாகிறது. அறிவுத்துறையினை புரிந்து கொள்வதற்கும் மொழி மிகவும் அவசியம். மொழியின் துணைகொண்டு தான் குழந்தை சிந்திக்க முடிவெடுக்க செயல்பட முடிகிறது. நினைப்பது முடிவெடுப்பது செயல்படுவது ஆகிய அனைத்தையும் மொழியின் உதவியாலேயே குழந்தை செய்கிறது. சமூகத்தின் ஒரு அங்கமாக குழந்தை இருப்பதற்கு மொழிதான் முதன்மை இடம் வகிக்கிறது. கண்ணாடியாக திகழ்கிறது இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பொருந்தும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

முத்துகிருஷ்ணன் : அடுத்தது காட்டும் பளிங்கு போல் சமூகத்தின் நிதர்சனம் காட்டும் மொழி.கேள்வி 04 :
தமிழ் மொழி நிகழ்காலத்தில் எவ்வாறான சவால்களைச் சந்தித்து வருகிறது? எதிர்காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்நோக்கக் கூடும்? (விமர்சனம் தவிர்க்கப்பட வேண்டும்.)

முனீஸ்வரன் : நிகழ்காலத்தில் பேச யோசிக்கின்றனர். எதிர் காலத்தில் பேச பயப்படுவர்.

கலைவாணி : தமிழ் மொழி நிகழ் காலத்தில் நிறைய சவால்களை சந்தித்து வருகிறது. படித்து முடித்து வேலைக்கு சென்றால் அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி ஆங்கிலம் தெரியுமா. ஹிந்தி தெரியுமா? ஆங்கில மோகத்தின் தாக்கத்தாலும் ஆங்கிலம் தேவை என்பதாலும் வலுக்கட்டாயமாக தமிழை வேண்டாம் என தவிர்க்கும் நிலைக்கு பெற்றோர்களும் மாணவர்களும் தள்ளப்படுகிறார்கள். தொழில் நுட்பத்தில் கூட பிறமொழி அவசியம் என்பதால் தமிழை விரும்புவோர் கூட காலத்தின் கட்டாயத்தால் வேறு வழியின்றி பிறமொழியை நோக்கி செல்வதால் தாய் மொழியாம் தமிழ்மொழியின் வரவேற்பு குறுகி கொண்டுதான் செல்கிறது. பணி காரணமாக இடமாற்றம் காரணமாக இந்நிலைக்கு தள்ளப்படுகிறோம். 

பொதுவாக தமிழர்களாகிய நாம் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய சவால்களை எல்லாம் சந்தர்ப்பமாக மாற்றுவோம். புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்மொழியின் அவசியத்தை பெற்றோர்கள் உணர்ந்து கண்டிப்பாக தமிழில் தான் உரையாட வேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அடுத்தடுத்த தலைமுறையினரை தமிழ் சென்றடையும். எவனொருவன் சவால்களை சந்திக்க துணிகிறானோ அவனால் மட்டுமே சோதனைகளை தாண்டி வெற்றி நடைபோட முடியும். தமிழ் பேசும் பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஒன்று சேர்ந்து தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கான ஓர் அமைப்பை உருவாக்குவர்களாயின் மிகவும் பயனுடையதாக அமையும். இல்லையெனில் நாம் மிகுந்த சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சதீஷ் விவேகா : பெற்றோரின் ஆங்கில மோகத்தில் சிக்கித் தவிக்கிறது நிகழ்காலத்தில். தமிழையே மொழிப் பாடமாக எடுக்காத சூழலும் நிலவுகிறது. தமிழின் பெருமை மழுங்கடிக்கப்படுகிறது ஆங்கில வழிப்பள்ளியால், பெற்றோரால், இதை ஊக்கப்படுத்தும் அரசால். நாளை மொழியின் பெருமை இழந்த அநாதையாய் நிற்பார்கள். பெரும் தொன்மையான வரலாற்றை தொலைத்து விட்டு நிற்கும் அநாதையாய் நிற்பது போல மொழியையும் இழந்து நிற்போம் எதிர்காலத்தில்.

ஆனால் எனக்கொரு நம்பிக்கை உண்டு. அது என் தமிழ் கொடுத்தது. தமிழுடன் தோன்றிய மொழிகள் அனைத்தும் வழக்கொழிந்து விட்டது, ஆனால் தமிழ் தன்னைத் தானே புதுப்பித்து இன்று வரை நிற்கிறது. தமிழ் வீழாது... சாகாது... பாரதியின் வரிதான் ஞாபகம் வருகிறது சகோதரரே...


கேள்வி 05 :
புதுக்கவிதை குறித்த தங்கள் பார்வை என்ன? புதுக்கவிதை மரபுக்கவிதையின் வளர்ச்சியை தடைப்படுத்துவதாகக் கருதுகிறீர்களா?

சதீஷ் விவேகா : சொல்ல வரும் கருத்தை எளிதாய் அனைவருக்கும் சேர்ப்பிக்க புதுக்கவிதை எளிமையான வழி. ஆனால் கவிஞனாய் சிந்திக்கையில் இலக்கணத்தை மீறாமல் சொல்ல வரும் கருத்தை சொல்லும் போது அதன் அழகியல் தனி. அப்பொழுதே முழுமையான கவிஞனாய் உணர்வேன். புதுக்கவிதையால் மரபுக் கவிதைக்கு பாதிப்பில்லை. கவி எழுதும் ஆர்வமுள்ளவர்கள் முதலில் புதுக்கவிதையே எழுதுவார்கள். தமிழின் ருசி கண்ட பிறகு தானாய் தொன்மையைத் தான் தேடுவார்கள். மரபை நோக்கிய பயணம் தொடங்கும்...

முனீஸ்வரன் : புதுக்கவிதை என்பது வெண்ணீர் வைப்பது போல. மரபுக்கவிதை என்பது நளபாகம் சமைப்பது போல...

ஓர் அடியில் ஈரசை, மூவசைச் சீர் அமைவது அது பா, பாவினத்தைப் பொறுத்தது. ஈரசையே கொண்ட பா, பாவினம். மூவசையே கொண்ட பா, பாவினம் உண்டு. ஈரசையும் மூவசையும் விரவி வரும் பா, பாவினம் உண்டு. அடிகளில் குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி இவ்வடிகளில் அமையும் பா, பாவினங்களைப் பொறுத்தே ஓரசைச் சீர் முதல் நாலசைச் சீர்கள் அமையும். மற்ற வகைப் பா, பாவினங்களில் ஈரசை, மூவசைச் சீர்கள் அமைவது அவ்வகைப் பாட்டின் வகை பொருத்தே அமையும்.

இப்படி பெரிய விதிமுறைகள் உண்டு. ஆதலால் மரபுக்கவிதை படைக்க நிறைய ஞானம் வேண்டும். அதான் வெண்ணீர் வைக்க மட்டுமே தெரிந்தவன் நான். புதுக்கவிதை பெருக பெருக மரபுக்கவிதைகளை மறந்து வருகிறோம்.

பாலாஜி : புதுக்கவிதை என்றாலும் அதற்கு ஒரு மரபு இருக்கிறதென்று கருதுபவன் நான்! எந்த விதமான கவிதையாயிருப்பினும் அதில் ஒரு அழுத்தம் வேண்டும். தெளிவின்றி அமையாது கவிதை! சொல்லவந்த செய்தியை 'நச்'சென்று இறுதிவரியிலாவது கொடுக்க வேண்டும். வரிகளில் மீள்பரிமாற்றம் கூடாது. இவையனைத்தும் பின்பற்றப்பட்டால் அக்கவிதை தரமானதாக இருக்கும். இத்தரத்தில் உள்ள கவிதைகள் பலர் எழுதவே செய்கிறார்கள் !

அடுத்து, புதுக்கவிதை மரபுக் கவிதையின் வளர்ச்சிக்குத் தடையா என்று கேட்டீர்கள்! இல்லை என்பேன் நான்! எழுதும் திறனுள்ளவர்களை எதுவும் தடை செய்யவியலாது. என்ன, புதிதாக எழுதத் தொடங்குபவர்கள் இலக்கணப்படி எழுத வேண்டிய தேவையில்லையே என்ற எண்ணத்தில் எழுத்தலங்காரம் செய்யப் புறப்படுவார்கள். கவிதையில் நாட்டமிருப்பவர் முதலில் எழுதத் தொடங்கிவிடுவார்கள்! இலக்கணம் அறிந்தவராயின் தாராளமாகத் தாம் எழுதியவற்றை இலக்கண வரம்புக்கு உட்படுத்த அவர்களுக்குத் தெரியும்!

கவிதை என்பதில் தெளிவு வேண்டும். மொழியின் இனிமை வேண்டும். பொருள் வேண்டும். வரிகளே இசைமயமாய் இருத்தல் வேண்டும். ஆழ்ந்த சிந்தனையின் அருமையான வெளிப்பாடாய் அது அமைதல் வேண்டும். எதுகை, மோனை இருப்பின் சிறப்பு! எதையும் எழுதி இதுதான் கவிதை எனச் சொல்லும் திமிறல் அதில் தெரிதல் கூடாது. வரிகளைப் படித்தால் வானம்போல் சிந்தனை விரிதல் வேண்டும்.

-இந்த நேர்காணலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய 'தமிழ் கூறும் நல்லுலகம்' வாட்ஸப் குழுவுக்கு 'சிகரம்' இணையத்தளம் சார்பாக மனமார்ந்த நன்றிகள். இந்த முதலாம் ஆண்டு விழாவைப் போல் நூறாவது ஆண்டு விழாவையும் நமது இக்குழு கொண்டாட வேண்டும் என வாழ்த்துகிறோம். வாட்ஸப்பில் நமது 'தமிழ் கூறும் நல்லுலகம்' போன்ற எத்தனையோ குழுக்கள் இயங்கி வருகின்றன. அந்தக் குழுக்களில் எல்லாம் இது போன்ற ஆக்க பூர்வமான முயற்சிகள் எடுக்கப்படும் போது தமிழ் மொழி இன்னுமின்னும் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

'தமிழ் கூறும் நல்லுலகம்' வாட்ஸப் குழுவில் இணைய விரும்பும் நண்பர்கள் 'சிகரம்' இணையத்தளத்தை தொடர்பு கொண்டால் குழு நிர்வாகிகளிடம் உங்கள் கோரிக்கையை கொண்டு செல்லத் தயாராக உள்ளோம். அதே போல சிகரம் இணையத்தள பதிவுகளையும் இப்போது வாட்ஸப்பில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் உங்கள் படைப்புகளையும் வாட்ஸப் ஊடாகவே பகிர்ந்து கொள்ளவும் முடியும். மேலதிக விவரங்களுக்கு மின்னஞ்சல் மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! வெல்க தமிழ்!!!

நமக்காக தமிழ் - தமிழுக்காய் நாம்!

#063
2018.02.18
தமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழா - சிறப்பு நேர்காணல்     
https://www.sigaram.co/preview.php?n_id=290&code=B6oQs9P8  
பதிவு : தமிழ் கூறும் நல்லுலகம்
#சிகரம் #நேர்காணல் #வாட்ஸப் #வாட்ஸப்குழு #தமிழ்கூறும்நல்லுலகம் #SIGARAM #SIGARAMCO #INTERVIEW #SIGARAMINTERVIEW #WHATSAPPINTERVIEW #THAMIZHKOORUMNALLULAGAM #WHATSAPP #WHATSAPPGROUP#சிகரம்  

Popular Posts