Thursday, 15 March 2018

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!

பள்ளிக் காலத்தில் மிருகக் காட்சி சாலை விலங்குகளை நம் உறவினர்களாகச் சித்தரித்து கேலி செய்து மகிழ்ந்திருப்போம். எனக்குப் பள்ளிக் காலத்தில் மிருகக் காட்சி சாலைக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை. இலங்கையின் தலைநகரமான கொழும்புக்கு வேலை தேடி வந்த பின் ஒரு முறை களனியில் (Kelaniya) உள்ள மீன்கள் மற்றும் பறவைகள் சரணாலயத்துக்குச் சென்று வந்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை (2018.03.11) தெஹிவளையில் உள்ள மிருகக் காட்சி சாலைக்குச் சென்று வந்தோம். மனைவி, மகள் மற்றும் உறவுகள் எல்லாம் ஏழு பேர் சென்று வந்தோம்.காலை பதினொன்று முப்பதுக்கு நாங்கள் இருக்கும் மாளிகாவத்தையில் இருந்து 176 ஆம் இலக்க பேரூந்தில் பயணித்து ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் தெஹிவளையைச் சென்றடைந்தோம். ஒருவருக்கு தலா நூறு ரூபாய் நுழைவுக் கட்டணம். உள்ளே நுழைந்ததும் மிருகக் காட்சி சாலையின் வரைபடம் அச்சிடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதில் ஒன்றை எடுத்துக் கொண்டேன். ஆனால் இறுதிவரை அந்த வரைபடத்தின் மூலம் எந்த வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. வரைபடம் எங்களைக் குழப்பி அலைய விட்டது தான் மிச்சம்.முன்பு எனது பாடசாலை நண்பன் விசு தொழில் நிமித்தமாக இந்தப் பகுதியில் தான் தங்கியிருந்தான். தெஹிவளை என்றாலே அவனது நினைவு தான் எனக்கு வரும். அவன் இப்போது யாழ்ப்பாணத்தில் தொழில் புரிகிறான். அவனோடு அரசியல் பேசித் திரிந்த நாட்கள் பல.மிருகக் காட்சி சாலையில் முதலில் கடல் சிங்கம் எங்களை வரவேற்றது. அதற்கு ஒருநாளைக்கு ஒரு தடவை தான் உணவாம். சுமார் மூன்றரை கிலோ உணவு தினமும் மாலை நான்கு மணியளவில் வழங்கப்படுகிறது. டொல்பினை ஒத்திருந்தாலும் இது மீசை வைத்த சிங்கம்.அதற்கு அருகிலேயே மீன் சிகிச்சை நிலையம் காணப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர்த் தொட்டிக்குள் இரு கால்களையும் வைத்துக்கொண்டு சுமார் பதினைந்து நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது இதற்கெனவே வளர்க்கப்பட்ட சிறிய அளவிலான மீன்கள் நம் கால்களைக் கடித்து சிகிச்சை அளிக்கும். இதற்கான கட்டணம் இலங்கை ரூபாய் இருநூறு. நாம நல்ல ஆரோக்கியமாத்தானே இருக்கோம், நமக்கு எதுக்கு இதெல்லாம் என்று சொல்லி அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தோம்.அடுத்தது நீர் வாழ் உயிர் காட்சி சாலைக்குச் (Aquarium) சென்றோம். விதவிதமான மீன்கள் மற்றும் சில நீர் வாழ் உயிரினங்கள் அங்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. தொடர்ந்து பாம்பு காட்சி சாலை, கிளிகள் காட்சி சாலை மற்றும் வண்ணத்துப்பூச்சி காட்சி சாலை போன்றவற்றைப் பார்வையிட்டோம். குரங்குகள், மான், யானை, முதலை, ஆமை, கொக்கு மற்றும் பல்வேறு பறவைகள் மற்றும் விலங்குகள் அங்கு காணக்கிடைத்தன.அன்றைய தினம் நாங்கள் காலிமுகத் திடலுக்கும் திரையரங்குக்கும் செல்லத் திட்டமிட்டிருந்ததால் பகல் 12.30 அளவில் மிருகக் காட்சி சாலைக்குச் சென்ற நாங்கள் மாலை நான்கு மணிக்கு அங்கிருந்து திரும்பினோம். ஆனால் காலிமுகத் திடலுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. திரையரங்குக்கு சென்று இலங்கையில் தயாரித்து வெளியிடப்பட்ட 'கோமாளி கிங்ஸ்' திரைப்படத்துக்கு சென்று வந்தோம்.மிருகக் காட்சி சாலையைச் சுற்றிப்பார்க்க ஒருநாள் முழுவதும் வேண்டும். சிலநேரங்களில் அது கூட போதாது என்றே கூற வேண்டும். ஆற அமர ரசித்து சுற்றிப்பார்க்க இரண்டு நாட்களாவது செல்லும்.தெஹிவளை மிருகக்காட்சி சாலையானது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜோன் ஹேகன்பேக் என்னும் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இலங்கையில் பிடிக்கப்பட்ட காட்டு விலங்குகளை ஐரோப்பாவுக்கு அனுப்பும் வரை அடைத்து வைக்கும் ஒரு இடமாக பதினோரு ஏக்கர் பரப்பளவில் பராமரிக்கப்பட்டது. இது ஒரு நிறுவனமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந் நிறுவனம் 1936இல் நஷ்டத்தை எதிர்நோக்கியதால் அரசினால் பொறுப்பேற்கப்பட்டது.1946இல் தன்னாட்சி அதிகாரமுடைய திணைக்களமாக தெஹிவளை உயிரியல் பூங்கா மாற்றம் பெற்றது. அதன்போது மக்களை மகிழ்விப்பதே திணைக்களத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. விலங்கு கண்காட்சி நிகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்றன. 1970 மற்றும் 1980களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய முகாமைத்துவ மாற்றங்களின் பின்னர் ஆசியாவின் மிகப்பெரிய திறந்த மிருகக் காட்சி சாலையை பராமரிப்பதும் விலங்கினங்களைப் பாதுகாப்பதுமே முக்கிய நோக்கமாக இருந்தது. விலங்கு கண்காட்சி நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன. தற்போது 21 ஏக்கர் பரப்பளவில் தெஹிவளை மிருகக் காட்சி சாலை செயற்பட்டு வருகின்றது. இங்கு வைக்கப்பட்டுள்ள அறிவித்தல் பலகைகள் பலவற்றில் தமிழ்க்கொலைகள் தாராளமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை அரசு கவனித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.இலங்கையில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் தெஹிவளை மிருகக் காட்சி சாலையும் ஒன்றாகும். பார்க்க மறந்துடாதீக... அப்புறம் வருத்தப்படுவீக...!தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்! - சிகரம்பாரதி 

#078/2018
தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்! 
https://www.sigaram.co/preview.php?n_id=304&code=gmFQ91xR
பதிவர் : சிகரம் பாரதி
#சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #travel #experience 
#SIGARAM #SIGARAMCO #sigarambharathilk  
#சிகரம்   

#078/2018/SIGARAMBHARATHILK
பதிவர் : சிகரம் பாரதி
#சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #travel #experience 
#SIGARAM #SIGARAMCO #sigarambharathilk  

No comments:

Post a Comment

Popular Posts